மத்தள விமான நிலையம் மேம்படுத்தப்படும்; விமான சேவைகள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே

🕔 June 25, 2015

Rejinold coore - 01– அஷ்ரப். ஏ. சமத் –

த்தள விமான நிலையத்தினை சிறந்ததொரு விமான நிலையமாக மாற்றியமைக்கவுள்ளதாக  விமான சேவைகள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

இதேவேளை, இவ் விமான நிலையத்தில் – மேலும் விமானங்கள் தரிப்பதற்கு சில சலுகைகளை வழங்கவுள்ளதோடு, சர்வதேச விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு பயிற்சிக் கல்லூரியொன்றை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

செத்திரிபாயவிலுள்ள விமான சேவைகள் அமைச்சில், இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அமைச்சர் ரெஜினோல்ட் குரே மேற்கன்ட விடயங்களைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்;

இந்த விமான நிலையத்தில் துபாய் விமானங்கள் மட்டுமே தற்பொழுது இறங்கி வருகின்றன. மேலும் சிலவிமானங்கள் அங்கு இறங்குவதற்கு பல்வேறு சலுகைககள், வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும்.

அத்துடன் சர்வதேச விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு பயிற்சிக் கல்லூரியொன்றை இங்கு நிறுவுவதற்கும் –  பிரான்ஸ் நாட்டிலுள்ள கம்பனியிடம் பேச்சுவாத்தை மேற்கொள்ளபட்டுள்ளது. அந்தநாட்டுஅதிகாரிகள், மேற்படி திட்டம் சம்பந்தமாக இலங்கை வரவுள்ளனர். அவ்வாறு இந்த பயிற்சி நிலையம் இங்கு அமையப் பெற்றால், தெற்காசிய நாடுகளில் – இலங்கையில் மத்தள விமான நிலையம் மட்டுமே – அந்தப் பயிற்சியை வழங்கும் நாடாகத் திகழும்.

இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யும் தேயிலை, மரக்கறிப் பொருட்களை – மத்தள விமான நிலையத்தில் வைத்து ஏற்ற முடியும். மேலும், இப்பிரதேசத்தில் களஞ்சியசாலைகள் ஏற்படுத்தப்படுவதோடு, அங்கு இறங்கும் பிரயாணிகளுக்கு தீர்வையற்ற பொருட்களைக் கொள்முதல் செய்யும் சர்ந்தர்ப்பமும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், ஒருநாளைக்கு 150 விமானங்கள் ஏறி இறங்குகின்றன. ஆனால் அடுத்த சில வருடங்களுக்குள் – இதனை நாம் இரட்டிப்பாக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் 05 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகின்றனர். அவர்களது வசதிக்கேற்ப பண்டாரநாயக்க விமான நிலையத்தினை நவீனமயப்படுத்தல் வேண்டும்.

35 வருடங்களுக்குமுன்பு இருந்தவசதிகளே பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ளன. எமது விமானங்களும் 35 வருடங்கள் பழமை வாய்ந்த விமானங்களாக உள்ளன. தற்பொழுது ஏ 380  விமானமொன்றை பெற்றுக்கொள்ள வெளிநாட்டு கம்பனிகளிடம் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

அத்துடன், பண்டாரநாயக்க விமான நிலையத்தில்  74 பில்லியன் யென் நிதியில், 02ஆம் கட்ட நவீன மயப்படுத்தல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2020ல் முடிவடையும்.

சஜின் வாஸின் விமானம் ரத்மலானையில்  நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அவர் ஏற்கனவே நீதிமன்ற தீர்ப்பின்படி 24 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளார்.

விமான நிலையத்தில் தீயணைக்கும் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு இயந்திரம் செயல்படாத நிலையில் உள்ளது. அதற்காக, வருடாந்தம் காப்புறுதிக்காக மட்டும் 12 கோடி ருபாவை செலுத்துவதாகவும் ஊடகவியலாளர்களினால் தெரிவிக்கப்பட்டது. இதனை நான் உடனடியாக விசாரனை செய்வேன்.  செயல்படாத இயந்திரத்தினை கொள்முதல் செய்த அதிகாரிகள் மற்றும் கொள்வனவு செய்யப்பட்ட கம்பனிகள் பற்றி, விசாரனைகளை மேற்கொள்வேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்