ஒலுவில்: காணாமல் போகும் கிராமம்

🕔 September 23, 2016

article-oluvil-0881
– றிசாத் ஏ காதர் –

னிதர்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் துன்பங்களுக்கு, அவர்களின் கவனக்குறைவே, அநேகமான தருணங்களில் காரணமாகி விடுகின்றன. எல்லாத் துன்பங்களுக்கும் தீர்வுகள் உள்ளன. ஆனால், தீர்வுகளை நாம் தேடிச் செல்ல வேண்டும். அவை, நமது காலடியில் வந்து விழுவதில்லை.

அம்பாறை மாவட்டம், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒலுவில் கிராமம் கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாக, கடலரிப்பினால் பாதிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் மிக முக்கியமான இடங்களில் ஒலுவிலும் ஒன்றாகும். தென்கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் துறைமுகம் ஆகியவவை ஒலுவில் பிரதேசத்தில் அமைந்துள்ளன. ஆனால், இவற்றுக்காக தமது நிலங்களை இழந்த மக்கள் தொடர்ச்சியாக பல்வேறுபட்ட துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

ஒலுவில் துறைமுக நிர்மாணத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள தீவிர கடலரிப்பின் காரணமாக, தற்சமயம் மக்களின் குடியிருப்புக்களுக்குள் கடல் நீர் புகுமளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. ஒலுவில் கடலரிப்பின் அபாயம் குறித்து, முன்னரும் கட்டுரையொன்றினூடாக நாம் சில விடயங்களைப் பதிவு செய்திருந்தோம்.

ஏராளமான ஒலுவில் கடலரிப்பு தொடர்பில் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ள போதும், இதுவரை எதுவித நிரந்தரத் தீர்வுகளும் காணப்படவில்லை. ஒலுவில் கடலரிப்பினை வைத்து, அரசியல் ரீதியான காட்சிகளே அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

கொஞ்சம் கொஞ்சமாக நிலங்களை அரித்துக் கொண்டு வந்த கடல், இப்போது, மக்களின் குடியிருப்புக்குள் புகுந்துள்ளது. இதனால், அங்குள்ள மக்கள் அச்சத்துடன் தமது வாழ்வை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாக கண்ணீரோடு தெரிவிக்கின்றார் அங்குள்ள குடியிருப்பாளர்களில் ஒருவரான எம்.ஐ. றூக்கியா உம்மா.

‘கடலரிப்பானது கடந்த காலங்களில் காணப்பட்டதனை விடவும் தற்சமயம் மிகவேகமாக இருக்கிறது. குடியிருப்பு நிலங்களுக்குள்ளும் கடல் நீர் புகுந்து விட்டது. இரவில் நிம்மதியாகத் தூங்க முடியாத அச்ச நிலை காணப்படுகின்றது’ என றூக்கியா உம்மா விபரித்தார்.

ஒலுவில் கடலரிப்பு தொடர்பில் மக்கள் உரத்துக் குரல் எழுப்பும் சந்தர்ப்பங்களில் மட்டும், அரசியல்வாதிகள் வந்து பார்த்து விட்டுச் செல்கின்றார்கள். ஆனால், ஆக்கபூர்வமாக எதுவும் நடப்பதில்லை. கடலரிப்பு தொடர்ந்தவாறுதான் உள்ளது என, இங்குள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மக்கள் குடியிருப்புக்கும், கடலுக்கும் இடையில், ஏலவே காணப்பட்ட சிறு ஆறு ஒன்று தற்போது கடலரிப்பிற்குள் அகப்பட்டு முற்றுமுழுதாக இல்லாமல் போய்விட்டது. இதனால், அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு முன்னர் இருந்த ஓரளவான பாதுகாப்புக்கூட, தற்போது இல்லாமல் போய்விட்டதை அவதானிக்க முடிகின்றது.

கடலரிப்பின் காரணமாக, ஒலுவில் மீனவர்களின் தொழில் முயற்சி முற்றாக பாதிக்கப்பட்டு விட்டது. 10அடிக்கும் குறைவான நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த வாடிகள் தற்போது அழிவடைந்துள்ளன. மீனவர்கள் தமது தோணி, இயந்திரப்படகுகளை நிறுத்திவைப்பதற்கு ஒரு அடி நிலமேனும் இங்கு இல்லை என்பதே மிக்க வேதனையான விடயமாகும்.

இந்தப் பிரதேசத்தில் சுமார் 600 ஆழ்கடல் மீனவர்களும், 650க்கும் மேற்பட்ட கரைவலை மீனவர்களும் தொழில் செய்து வந்தனர். ஆனால், இப்போது அவர்களால் கடலரிப்புக் காரணமாக தொழில் செய்ய முடியவில்லை என சமூக ஆர்வலரும், ஆசிரியருமான ஐ.எல்.ஹமீட் தெரிவித்தார்.

இலங்கை துறைமுக அதிகார சபையினர் தற்போது கடலரிப்பினைத் தடுக்கும் நோக்குடன் கரையில் பாராங்கற்களைப் போடுகின்றனர். ஆனாலும், கடற்கரையிலுள்ள துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான சுற்றுலா விடுதியை பாதுகாப்பதற்கான நடவடிக்கையாகவே இது உள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். நிலங்களையும், மக்களையும் பாதுகாப்பதற்கான எதுவித ஏற்பாடுகளும் நடைபெறுவதாகத் தெரியவில்லை என்று அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ. ஏல்.எம் நசீர், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர், துறைமுக அதிகார சபையினர் மற்றும் கரையோரம் பேணல் திணைக்கள அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமையன்று கடலரிப்பினைப் பார்வையிடுவதற்காக வருகை தந்தனர், இதன்போது ஆத்திரமுற்ற இப்பிரதேச மக்கள், சுமார் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக இவர்களை வெளியேற விடாமல் தடுத்து வைத்திருந்தனர்.

‘ஒலுலுவிலில் அமைக்கப்பட்டுள்ள துறைமுகமானது இலங்கையினுடைய வருமானத்தில் எந்தவிதமான பங்களிப்புகளையும் செய்வதில்லை. இந்த துறைமுகத்தினால் எமது நில வளங்கள்தான் அழிவடைந்துள்ளன. துறைமுகத்தினால் நன்மைகள் எதுவும் இங்கு நடைபெறவில்லை’ என்று ஹமீட் மேலும் கூறினார்.

இந்தியாவினுடைய பெருந்தொகை பணத்தைக் கொண்டு அமைக்கப்பட்ட சம்பூர் அனல் மின் நிலையம், அம் மக்களின் எதிர்ப்பின் காரணமாகவும், தமிழ்த் தலைமைகளின் அழுத்தங்களினாலும் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் ஐ.எல்.ஹமீட், ஒலுவில் துறைமுக வியடத்திலும் அவ்வாறான ஒரு முடிவினை இந்த நல்லாட்சி அரசாங்கம் எடுக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

அனர்த்தம் ஒன்றினால் பாதிக்கப்படும் மக்களை வைத்து அரசியல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பதற்கான நிரந்தர ஏற்பாடுகள் அவசரமாக மேற்கொளப்படுதல் வேண்டும். ஆனால், ஒலுவில் விடயத்தில் இவை எதுவும் நடக்கவில்லை.

தொழில்களையும், வருமான வழிகளையும் இழந்த இம்மக்கள் அத் துயரில் இருந்து மீள்வதற்கு முன்பாக, தங்கள் குடியிருப்புக்களையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏதாவது, இயற்கை அதிசயங்கள் நிகழ்ந்தாலன்றி, இப்போதைக்கு ஒலுவில் கடலரிப்பின் அபாயத்திலிருந்து அந்த மக்களை காப்பாற்ற யாரும் இல்லை. ஒலுவில் கடலரிப்பினை சீர்செய்வதற்கான காலம் கடந்து விட்டதோ என அஞ்சத் தோன்றுகிறது.

இதேவேளை, ஒலுவில் கடலரிப்பு தொடர்பில் ஆவணங்கள் தயாரித்து தீர்வு வழங்க முயற்சி மேற்கொள்கின்றோம் எனக் கூறிக்கொள்பவர்களின் ஆமை வேகத்துக்கு, கடல் காத்திருக்காது.

நன்றி: விடிவெள்ளி (21 செப்டம்பர் 2016)03 02 10 08 11

Comments

புதிது பேஸ்புக் பக்கம்