ஹசனலியின் செயலாளர் பதவி பறிக்கப்பட்டமை தொடர்பில், உயர்பீட கூட்டத்தில் குரலெழுப்ப முடிவு

🕔 September 19, 2016

hasanalihakeem-086– றிசாத் ஏ காதர் –

மு.காங்கிரசின் செயலாளர் ஹசனலியின்  பதவி, வேறொரு நபருக்கு வழங்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில், கட்சியின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த உயர்பீட உறுப்பினர்கள், கட்சித் தலைமையிடம் கேள்வியெழுப்பவுள்ளனர் எனத் தெரியவருகிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் நாளை செவ்வாய்கிழமை இரவு, கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில்  நடைபெறவுள்ளது.

மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தலைமையில் நடைபெறும் மேற்படி கூட்டத்திலேயே, இவ் விவகாரம் தொடர்பில், உயர்பீட உறுப்பினர்கள் கேள்வியெழுப்பவுள்ளனர்.

கண்டியில் நடைபெற்ற மு.காங்கிரசின் பேராளர் மாநாட்டில், கட்சியின் செயலாளராக எம்.ரி. ஹசனலி தெரிவு செய்யப்பட்டிருந்தார். ஆயினும், கட்சியின் உயர்பீட செயலாளராகத் தெரிவு செய்யப்பட்ட மன்சூர் ஏ. காதர் என்பவர், கட்சியின் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில், மு.காங்கிரசின் முக்கியஸ்தர்கள் பலர் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.

மு.கா. செயலாளரின் கடமைகளை இலகுபடுத்தும் முகமாகவே, உயர்பீட செயலாளர் பதவி உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலேயே, இவ்விடயம் தொடர்பில், நாளை நடைபெறவுள்ள உயர்பீடக் கூட்டத்தில், இவ்விவகாரம் தொடர்பாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த உயர்பீட உறுப்பினர்கள் குரலெழுப்பவுள்ளனர் என அறியக் கிடைக்கிறது.

“மன்சூர் ஏ காதர் என்பவர், மு.காங்கிரசில் புதிதாக உருவாக்கப்பட்ட உயர்பீட செயலாளர் பதவிக்காகவே தெரிவு செய்யப்பட்டார்.  அந்தக் கட்சியினால் தீர்மானிக்கப்படும் தொகையொன்றினை அவர் மாதச் சம்பளமாகப் பெறுவார். அவரை கட்சியின் தலைவர் – விரும்பிய நேரத்தில் பதவி விலக்க முடியும் என்கிற நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், உயர்பீட செயலாளர், எவ்வாறு கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார் என்று தெரியவில்லை.  இது அதிர்ச்சியாக உள்ளது” என்று, கட்சியின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த உயர்பீட உறுப்பினர்கள் சிலர் கூறினர்.

எவ்வாறாயினும், கடந்த உயர்பீடக் கூட்டத்தின்போது, கட்சியின் சொத்துக்கள் தொடர்பில் விளக்கம் கோரிய கட்சியின் தவிசாளரை பேச விடாது, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுடைய விசுவாசிகள் கூக்குரலிட்டுத் தடுத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்