மு.கா. செயலாளராக மன்சூர் ஏ. காதர்; தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு: ஹசனலிக்கு குழிபறிப்பு

🕔 September 16, 2016

slmc-01235– முன்ஸிப் அஹமட் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளராக மன்சூர் ஏ. காதரை, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேற்படி ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக, இதனை அறிந்து கொள்ள முடியும்.

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 63 உள்ளன என்று, அந்த இணையத்தளம் குறிப்பிடுகிறது.

இதில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளராக ஏ.சி.ஏ. மொஹம்மட் மன்சூர் எனும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

மு.காங்கிரசின் செயலாளராக, இம்முறை அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ரி. ஹசனலி தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

2015 ஆம் ஆண்டு கண்டியில் நடைபெற்ற மு.காங்கிரசின் பேராளர் மாநாட்டில் இந்தத் தெரிவு இடம்பெற்றது.

இதேவேளை, மு.காங்கிரசின் உயர்பீட கூட்டங்களை நடத்துதல் போன்ற செயற்பாடுகளுக்காக, ‘உயர்பீட செயலாளர்’ எனும் புதிய பதவியொன்று மு.காங்கிரசில் கடந்த வருடம் உருவாக்கப்பட்டது.  அந்த உயர்பீட செயலாளர் பதவிக்காகவே மன்சூர் ஏ. காதர் தெரிவு செய்யப்பட்டார்.

எவ்வாறாயினும், ஏற்கனவே கட்சியின் செயலாளர் ஹசனலியின் பதவிக்கான அதிகாரம் குறைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உத்தியோகபூர்வமாக அவரின் செயலாளர் பதவியும் பறிபோயுள்ளது.

மு.காங்கிரசின் உயர் பீட செயலாளராகத் தெரிவு செய்யப்பட்ட மன்சூர் ஏ. காதர், அந்தக் கட்சியின் செயலாளராக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து, மு.காங்கிரசின் உயர்பீடக் கூட்டங்களில் எந்தவொரு உறுப்பினரும் கேள்வி கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மு.காங்கிரசின் சொத்து விபரம் தொடர்பில் கேள்வி கேட்ட கட்சியின் தவிசாளருக்கு எதிராக, கடந்த உயர்பீடக் கூட்டத்தில் சிலர் கூப்பாடு போட்டமை குறிப்பிடத்தக்கது.

மு.கா. தலைவர் ஹக்கீமுடன், ஹசனலி முரண்பட்ட பின்னர் – ஹசனலிக்கான இந்தக் குழிபறிப்பு இடம்பெற்றுள்ளதாக, கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தை பார்வையிட: http://www.slelections.gov.lk/web/index.php/ta/recognized-political-parties

Comments

புதிது பேஸ்புக் பக்கம்