கிழக்கை வடக்குடன் இணைக்கும் திருட்டுத்தனம் நடைபெறுகிறது: எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை

🕔 September 10, 2016

uthumalebbe-muttur-011
– றிசாத் ஏ காதர் –

வெளிநாட்டுச் சூழ்ச்சிகளுடன், திருட்டுத்தனமாக கிழக்கு மாகாணத்தினை வட மாகாணத்துடன் இணைக்கின்ற ஒரு பாரிய முயற்சி நடைபெற்று வருகிறது என்று, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், தற்போதைய எதிர் கட்சித் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

முஸ்லிம் மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், கிழக்கு மாகாண சபைக்குள் இருக்கின்ற அதிகாரங்களைப் பயன்படுத்தி, கண்களை மூடிக்கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்று கேட்பது ஆச்சரியமாக உள்ளது என்றும் அவர் ஆதங்கம் தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு எதிராக நடத்தப்பட்டு வரும் ‘சுதந்திர கிழக்கு’ எனும் தலைப்பிலான விழிப்புணர்வூட்டும் கூட்டம், நேற்று வெள்ளிக்கிமை மூதூர் – நீர்த்தாங்கி முன் வளாகத்தில் இடம்பெற்றது. டொக்டர் வை.எஸ்.எம். சியா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு உதுமாலெப்பை கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“தேசிய காங்கிரஸினுடைய தலைமை நமக்காக குரல் கொடுப்பதோடு, முழுக் கிழக்கு மாகாணத்துக்கும் தன்னுடைய அரசியல் அதிகாரத்தினூடாக பாரிய அபிவிருத்தயைச் செய்திருக்கின்றது.

நாங்கள் அடிமைப்பட்ட சமூகமாக வாழ்ந்தோம். வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டிருந்த போது, முஸ்லிம் சமூகம் அடிமைப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்தோம். வட – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டதன் வினையை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மக்கள் சற்று தூரத்திலிருந்து கொண்டு அனுபவித்தார்கள். ஆனால், திருகோணமலை மாவட்ட மக்கள், அந்த மாகாணசபையின் நடவடிக்கைகளையும், அநீதிகளையும் நேரடியாக கண்டார்கள்.

வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்ட மாகாண சபையினுடைய நிர்வாகத்தினால் எமது சமூகம் அடைந்த நன்மைகளையும் நேரடியாகக் கண்டு வருகிறீர்கள். அதனால் நாம் சுதந்திரமான காற்றைச் சுவாசித்துக்கொண்டிருப்பதனை மறந்து விட்டீர்கள். அதற்காக நமது தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமை பெரும் பணியைச் செய்திருக்கின்றது.

முதலாவதாக 2008ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்குமாகாண சபைத் தேர்தலிலே நான் தேசிய காங்கிரஸினுடைய உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டேன். அப்போது தலைவர் அதாஉல்லாஹ்,  ஜனாதிபதி மாளிகையிலிருந்து தொலைபேசியினூடாக என்னிடம் பேசினார். ‘கிழக்கு மாகாணசபையில் மக்களுக்குப் பணி செய்வதற்கான அமைச்சு ஒன்றை நமக்கு ஒதுக்கியிருக்கின்றார்கள் – அதனை பெற்றிருக்கின்றேன், எந்த அமைச்சு வேண்டும் என்று கேட்டார்கள், அதற்கிணங்க நான் ஒன்றைத் தெரிவு செய்தேன். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பணி செய்யவேண்டும்’ என்று அவர் கூறினார்.

வடக்குடன் கிழக்குமாகணம் இணைக்கப்படக் கூடாது. நாங்கள்  இவ்வாறான விசேட கூட்டங்களை ஏன் நடாத்த வேண்டும் என்பதனைப்பற்றி சிந்திக்கவேண்டும். பிரிந்திருக்கின்ற கிழக்கு மாகாண சபையினூடாக இன்னும் முஸ்லிம்களுடைய முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை. இந்த மாகாண சபையில் சிரேஷ்ட அமைச்சராக இருந்தவர் என்கிற வகையிலும், மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையிலும் இன்று கிழக்கு மாகாண சபையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற சில விடயங்களைக் கூற வேண்டியுள்ளது.

பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையிலே முஸ்லிம்களுக்கான முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாமல் உள்ளன. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற அதிகாரமுள்ளவர்கள் முஸ்லிம்களுடைய பிரச்சினைகளை அங்கீகரிக்காமல் இருக்கின்றார். அண்மையில் புல்மோட்டைக்கான தனியான கல்வி வலயம் அமைப்பது தொடர்பாக மாகாணசபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் பிரேரணை ஒன்றினை கொண்டுவந்தார். அதனை அங்கீகாரத்திற்குக் கூட அவர்கள் அனுமதிக்கவில்லை. இதனை நானும்,  உறுப்பினர் சுபையிரும் பார்த்துக்கொண்டிருந்தோம்.

தமிழ் முஸ்லிம் சமுதாயங்களிடையே பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்ட வேண்டிய பல பிரச்சினைகள் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன. வட்டமடு காணிப் பிரச்சினை அவற்றில் ஒன்றாகும். வட்டமடுவில் முஸ்லிம்களும் – தமிழர்களும் காணிச் சொந்தக்காரர்களாக இருக்கின்றனர். இந்தப் பிரச்சினை தொடர்பில் இரண்டு சமூகங்களும் பேசி, ஒரு இணக்கப்பாட்டுக்கு வர முடியும். ஆனால், இந்தப் பிரச்சினை நீதிமன்றத்துக்கு கொண்டு செலலப்பட்டு  இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு மாகாண சபைக்குள் இருக்கின்ற அதிகாரங்களைப் பாவித்து,  முஸ்லிம் மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், கண்ணை மூடிக்கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு இணைப்பிற்கு முஸ்லீம் சமூகம் ஆதரவு வழங்க வேண்டும் என்று கேட்பது ஆச்சரியமாக உள்ளது.

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு 1988ஆம் ஆண்டு அந்த மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்றது. அப்போது, கிழக்கு மாகாணத்தில் பிறந்த, கிழக்கு மாகாணத்திலே அரசியல் தலைமைகளாகவிருந்த ஸ்ரீ.ல.மு.காங்கிரஸினுடைய போராளிகள், அந்தத் தேர்தலில் சுதந்திரமாக போட்டியிடவும், சுதந்திரமாக நான்தான் வேட்பாளர் என்று சொல்லவும் முடியாத அளவுக்கு அடக்கப்பட்டோம்.

கிழக்கு மாகாணத்தில் பிறந்த எவரும், வட- கிழக்கு  மாகாண சபைத்தேர்தலிலே வேட்பாளராக போட்டியிடுவதற்கு விடுதலைப்புலிகள் அனுமதி வழங்கவில்லை. அதனால் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் கூட, கொழும்பிலே இருக்கின்ற பல பிரமுகர்களுடைய பெயர்களை வேட்பாளர் பட்டியலில் இட்டோம் கொழும்பில் இருந்துதான் வேட்பாளர்களை கொண்டுவருவதாக காட்டிக்கொண்டோம். அதுதான் நமது சமூகத்தினுடைய நிலையாக இருந்தது. வட-கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் 71 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். அவர்களில் 17 பேர் முஸ்லிம்கள். ஒரே ஒரு சிங்களவர் தெரிவு செய்யப்பட்டார். இணைந்த வட – கிழக்கு மாகாண சபையிலே என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும்.

ஆனால், கிழக்கு மாகாண சபை தனியாக பிரிக்கப்பட்டமையினால்,  இரண்டு தடவை முஸ்லிம்கள் முதலமைச்சர் பதவியைப் பெற்றுள்ளோம். நான்கு ஆண்டுகள் தமிழ் முதலமைச்சர் ஒருவர் இருந்திருக்கின்றார். நாளை சிங்கள முதலமைச்சர் ஒருவர் வரலாம். அதில் எங்களுக்குப் பிரச்சினை இல்லை, அவர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவராக இருப்பார்.

வடக்கு மாகாண சபையில் அண்மையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றார்கள்.  வடக்கும் – கிழக்கும் இணைக்கப்பட்டு அது தமிழர்களின் மாநிலமாக இருக்க வேண்டும். ஏனைய 07 மாகாணங்களும் சிங்கள மாநிலமாகவும் இருக்க வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மலையத் தமிழர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் தலா ஒவ்வொரு ஆட்சியலகுகள் இரண்டு மாநிலங்களிலும் அமைய வேண்டும் என்று அந்த தீர்மானம் கூறுகிறது. வடமாகாண சபையின் முதலமைச்சரும் மாகாண சபையின் உறுப்பினர்களும் முஸ்லீம் தலைமைகளுடன் எந்தவித கலந்துரையாடல்களிலும் ஈடுபடாமல், முஸ்லிம் சமூகத்திதை என்னவென்றும் கேட்காமல் அந்தத் தீர்மானம் எடுத்திருக்கின்றார்கள்.

முஸ்லிம் சமூகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், தேர்தல் முறை மற்றும் புதிய அரசியல் யாப்பு சம்பந்தமாக ஆராய்வதற்காக மட்டக்களப்பு கல்லடியிலே முஸ்லீம் காங்கிரஸ் அண்மையிலே ஒரு ஒன்று கூடலை நடத்தியிருந்தார்கள் . அதன்போது முஸ்லிம் மக்களுடைய பிரச்சினைகள் ஆராயப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்த நிகழ்வுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் விசேடமாக அழைக்கப்பட்டு அங்கு – அந்த நிகழ்வு நடத்தப்பட்டிருந்தது.

வெளிநாட்டுச் சூழ்ச்சிகளுடன், திருட்டுத் தனமாக கிழக்கு மாகாணத்தினை வடமாகாணத்துடன் இணைக்கின்ற ஒரு பாரிய முயற்சி நடைபெற்று வருகிறது.

முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து இதனை எதிர்க்க வேண்டும்” என்றார்.

‘சுதந்திர கிழக்கு’ – மூதூர் கூட்டத்தில் இடம்பெற்ற ஏனைய உரைகளைப் படிக்க: 

இலங்கையில் 05 மாகாணங்கள் இருந்த காலத்திலும், கிழக்கு தனித்திருந்தது: சட்டத்தரணி பஹீஜ்

வட கிழக்கு இணைப்புக்காக, சிங்களத் தலைவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற, த.தே.கூட்டமைப்பு தயாராகி விட்டது: அதாஉல்லாஹ்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்