ஐ.தே.கட்சிக்கு, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் வாழ்த்து

🕔 September 9, 2016

Hakeem - 085 – ஜம்சாத் இக்பால் –

ந்த நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சி தன்னுடைய 70ஆவது வருடத்தை பூர்த்தியடைகின்ற இத்தருணத்தில் அக்கட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில், வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆவது வருடப் பூர்த்தியை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

இக் கட்சி தேசபிதா டீ.எஸ்.சேனநாயக்க அவர்களின் கருத்துருவாகத்தில் இருந்து இன்றுவரை இந்நாட்டின் அரசியலிலே பாரிய புரட்சிகரமான மாற்றங்களுக்கு வழிகோலிய ஒரு கட்சி என்பது பரவலாக எல்லோரும் ஏற்றுக்கொள்கின்ற விடயமாகும்.

அவ்வப்போது பலவிதமான சர்ச்சைக்குரிய அரசியல் பிரச்சினைகள் உருவெடுத்தாலும், ஜனநாயக ரீதியாக இந்த நாட்டில் மாற்று அரசாங்கங்களின் வழிகாட்டியாக இந்த கட்சி உருவெடுத்து. தனிக்கட்சியியாக ஆட்சியமைத்துக் கொண்டிருந்த கட்சி – காலப்போக்கில் கூட்டு அரசாங்கங்களின் ஊடாக ஆட்சியை கைப்பற்றும் நிலைமை ஏற்படது. இப்பொழுது இந்த நாட்டின் தேசிய அரசாங்கத்தின் அங்கமாக உருவெடுத்திருக்கின்றது.

இக்கட்சியுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பல இடங்களிலே கூட்டுச் சேர்ந்து தேர்தல்களிலே போட்டியிட்டிருக்கின்றது. எங்களுக்கிடையிலே புரிந்துணர்வு உடன்படிக்கைகளை கைச்சாத்திடப்பட்டிருக்கின்றன. அவற்றினூடாக நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இந்த நாட்டின் மிக முக்கியமான ஓரினத்தவராக இருக்கின்ற முஸ்லிம்களுடைய அரசியல் அபிலாஷைகளுக்கு உரிய தீர்வுகளை காண்கின்ற முயற்சிகளில் நாங்கள் அந்தக் கட்சியோடு கைகோர்த்துப் பயணித்திருக்கின்றோம்.

பலவிதமான சிக்கல்கள் கடந்த காலங்களில் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக இனப்பிரச்சினை தீர்வு குறித்த விடயத்தில், இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னணியில் இந்த நாட்டின் முஸ்லிம் சமூகம் புறக்கணிக்கப்பட்டதான ஒரு மனப்பதிவு ஏற்பட்டது. அதனூடாக பலவிதமான அரசியல் ரீதியான பின்னடைவுகளையும் நாங்கள் சந்தித்ததுள்ளோம். 13ஆவது சட்டத் திருத்தத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையோடு புரிந்துணர்வை ஏற்படுத்தினோம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தூண்டுதலினால் ஏற்கனவே இருந்த 12வீத வெட்டுப்புள்ளியை 05 வீத வெட்டுப் புள்ளியாக் குறைப்பதற்கு உடன்பட்ட காரணத்தினால் இந்த நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவம் பரவலாக்கப்பட்டது.

ஆனால் அதனை இன்று இன்னுமொரு திக்குக்கு கொண்டு செல்கின்ற முயற்சி நடந்து கொண்டிருக்கின்றது. அதிலும் சிறுபான்மை இனங்கள் பாதிக்கப்பட்டாத ஒரு தேர்தல் முறைமை உருவாக வேண்டும் என்பதற்கான பரவலான பரந்து விரிந்த மாற்றுக் கருத்துக்களுடனான பேச்சுவார்த்தைகளில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.

இந்த நாட்டில் ஜனநாயகம் நிலைக்கவும், அதேநேரம் சகல இனங்களுக்கும் நீதியான, நியாயமான எதிர்காலம் அமைய வேண்டிய போராட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி நேர்மையான நியாயமான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதனுடைய தலைமையின் மீது இருக்கின்ற நம்பிக்கையின் அடிப்படையில் நாங்கள் கைகோர்த்து பயணிக்கின்ற இச்சந்தர்ப்பத்தில், அந்த தலைமை தன்னுடைய உறுதிப்பாடுகளை நிறைவு செய்யும் என்று எதிர்பார்க்கின்றோம்.

இந்தக்கட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம் என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்