கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து ஆரிப் சம்சுதீன் நீக்கம்

🕔 July 18, 2016

Ariff Samsudeen - 098– றியாஸ் ஆதம் –

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கத்துவத்திலிருந்தும், கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர, இது குறித்து –  கிழக்கு மாகாண சபைக்கு அறிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கும், அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்தர முன்னணியின் செயலாளர் – எழுத்து மூலம் அறிவித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலில், அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரசின் வேட்பாளராக, ஐ.ம.சு.முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் ஆரிப் சம்சுதீன் – அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், கடந்த வருடம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு அமைச்சர் அதாஉல்லா ஆதரவைத் தெரிவித்தமையினை அடுத்து, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் – அதாஉல்லாவை விட்டும் விலகி, அப்போதைய வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து கொண்டார்.

இவ்வாறு முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து கொண்ட ஆரிப் சம்சுதீன், அந்தக் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.

இவ்வாறு கட்சி மாறியமையினை அடுத்தே, ஐ.ம.சு.முன்னணியின் அங்கத்துவத்திலிருந்து ஆரிப் சம்சுதீன் நீக்கப்பட்டுள்ளார்.

மாகாண மற்றும் பிரதேச சபை உறுப்பினரொருவர் கட்சி மாறுவாராயின், அவர் அங்கம் வகிக்கும் சபை உறுப்பினர் பதவியிலிருந்து, அவரை – சட்டத்தின் பிரகாரம் நீக்க முடியும்.

ஆரிப் சம்சுதீன் பதவி விலக்கப்பட்டுள்ளமை தொடர்பாக –  கிழக்கு மாகண சபையின் பேரவைச் செயலாளர் எம்.சி.எம். செரீபிடம் வினவியபோது;  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கத்துவத்திலிருந்து ஆரிப் சம்சுதீனை  நீக்கியுள்ளதாக, அக் கட்சியின் செயலாளர் தமக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்