ரணிலுக்கு எதிராக பிரேரணை கொண்டுவர, மஹிந்த தரப்புக்கு அருகதை கிடையாது: முஜிபுர் ரஹ்மான்

🕔 June 15, 2015

Mujibur Rahman - 095பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக, நம்பிக்கையில்லாப் பிரேரணையினைக் கொண்டு வருவதற்கு – மஹிந்த தரப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, எவ்வித அதிகாரமோ அருகதையோ கிடையாது என –  ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளரும் மேல்மாகாணசபை உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

இதேவேளை, இவ்வாறானதொரு நம்பிக்கையில்லாப் பிரேரணையினைக் கொண்டு வருவதானது, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் – மக்கள் வழங்கிய ஆணையை மீறி மேற்கொள்ளப்படும் – ஒரு செயற்பாடாகும் எனவும் அவர் குற்றம் சுமத்தினார்.
மேலும், மஹிந்த சிந்தனையில் உருவான இந்த நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்துவிட்டு, தேர்தலுக்கு செல்ல வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முஜிபுர் ரஹ்மான் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்;

‘ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினர் மும்முரமாக செயற்பட்டு வருகின்றனர். தறபோதைய நாடாளுமன்றமானது – மஹிந்த சிந்தனையின் கீழ், பெரும்பான்மை பலத்துடன் அமைக்கப்பட்டதாகும். கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த சிந்தனை தோல்வியடைந்தது.  ரணில் விக்கிரமசிங்கவை மஹிந்தவின் நாடாளுமன்றம் – பிரதமராக நியமிக்கவுமில்லை.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது,   மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் ரணிலை பிரதமராக்குவோம் என எதிரணிகளின் பொதுக் கூட்டமைப்பு -மக்கள் மத்தியில் வாக்குறுதியளித்தது. இதனடிப்படையில் ஜனவரி 09 ஆம் திகதி, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்றதையடுத்து, பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்.

எனவே, கடந்த நாடாளுமன்றத்தினூடாக ரணில் பிரதமராக்கப்படவில்லை. மக்களின் ஆணைக்கமைய மைத்திரியினால் பிரதமராக்கப்பட்டார். ஆகவே,  இவருக்கு எதிராக சுதந்திர கட்சியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர முடியாது. அப்படி கொண்டுவருகின்றமையானது, மக்களின் வாக்குறுதிக்கு எதிரான செயற்பாடாகும். மக்களின் அபிலாசைகளை மதிக்காது  சுதந்திர கட்சியும், மஹிந்த தரப்பும் செயற்படுவதானது வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயமாகும்.

ஆகையால் உடனடியாக நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, மஹிந்தவா? ரணிலா? மக்களால் தெரிவுசெய்யப்படும் பிரதமர் என்பதை பார்க்க வேண்டும்’ என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்