ஹசனலியுடன் தனித்துப் பேச விரும்புகிறோம், அவரை சிலர் விடுகிறார்களில்லை: மு.கா. தலைவர் ஹக்கீம்

🕔 April 3, 2016

Hakeem - 01– மப்றூக் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் ஹசனலிக்குரிய அந்தஷ்தினையும், அதற்குரிய இடத்தினையும் அவரிடமிருந்து பறித்து விட வேண்டிய அவசியம் கிடையாது என்று மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

அதேவேளை, சகோதரர் ஹசனலி முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினுடைய மூத்த தலைவர்களில் ஒருவர் என்றும், அவருடன் ஓர் இணக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற நடவடிக்கைகள் இன்னும் இடம்பெற்றுக் வருவதாகவும் மு.கா. தலைவர் ஹக்கீம் சுட்டிக் காட்டினார்.

மு.காங்கிரசின் அம்பாறை மாவட்டக் குழுவில் அங்கம் வகிக்கும் பொத்துவில் தொகுதி உறுப்பினர்களுக்கும், மு.கா. தலைவர் ஹக்கீமுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று ஞாயிற்றுக்கிழமை, துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான ஒலுவில் சுற்றுலா விடுதியில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட விடயங்களைக் கூறினார்.

இந்தச் சந்திப்பின்போது, மு.காங்கிரசின் செயலாளர் எம்.ரி. ஹசனலி தற்போது கட்சித் தலைமையுடன் முரண்பட்டு வருகின்றமை குறித்தும், அவர் தொடர்பில் கட்சி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை பற்றியும், பலரும் கருத்து வெளியிட்டனர்.

இந்த நிலையில், மு.கா. தலைவர் ஹக்கீம் அங்கு தொடர்ந்து பேசுகையில்;

‘தற்போதைய நிலைவரம் தொடர்பில், கட்சியினுடைய நிலைப்பாடு எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து, இங்கு பலர் பேசினார்கள். அப்படிப் பேசியதில் எந்தவித தவறுகளும் இல்லை.

ஆயினும், கதவுகளை முழுவதுமாக மூடிவிட்டு, இவ்வாறான விடயங்களுக்குத் தீர்வு காண்பது, பொறுப்புள்ள அரசியல் கட்சிக்குப் பொருத்தமாக அமையாது.

அந்த வகையில், இந்தப் பிளவினை சரி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.

தற்போதைய நிலைவரம் தொடர்பில் கலந்தாலோசனைகள் முக்கியமாக உள்ளன. அதற்காகத்தான் இவ்வாறான மாவட்ட ரீதியிலான கூட்டங்களை நடத்துகின்றோம். இன்னும் பரந்துபட்ட ரீதியில் கலந்தாலோசனைகள் தேவையாக இருக்கின்றன.

ஹசனலியின் சார்பில், கட்சித் தலைவருக்கு நெருக்கமானவர்கள் பலர், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையினை பேசித் தீர்த்துக்கோள்ள வேண்டும் எனக் கூறுகின்றனர்.

மு.காங்கிரசின் மரச்சின்னத்தினைக் கட்டித் தழுவியபடிதான் நான் மரணிப்பேன் என்று ஹசனலி கூறியுள்ளார். இது பாரதூரமானதொரு விடயமாகும். கட்சியில் ஹசனலியின் அந்தஷ்து மற்றும் அதற்கான இடம் போன்றவற்றினை அவரிடமிருந்து பறித்து விட வேண்டிய அவசியம் கிடையாது.

ஆனாலும், மு.காங்கிரஸ் என்கிற இயக்கம் பிரதானமானது. அது பாதுகாக்கப்பட வேண்டும்.

பத்திரிகைகளில் அறிக்கைகளை விடுவதனூடாக, தற்போதைய பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிட முடியாது. தலைவரோடு பேச வேண்டும். முக்கியமான நடுவர் ஒருவரை வைத்துக் கொண்டு ஹசனலியுடன் தனித்துப் பேசுவதற்கு நாம் விரும்பியபோதும், அவரை சிலர் தனியே விடுகிறார்களில்லை’ என்றார்.Hakeem - 02Hakeem - 04

Comments

புதிது பேஸ்புக் பக்கம்