மீன்பிடி நடவடிக்கைக்காகவே தற்கொலை அங்கி, வெடிபொருட்களைக் கொண்டு வந்தாராம்: கைதானவர் தெரிவிப்பு

🕔 March 31, 2016
Ramesh - 01மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியும் என்பதால்தான் தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் குண்டுகளை தனது வீட்டுக்குக் கொண்டு வந்ததாக, கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் கைது செய்யப்பட்ட எட்வேர்ட் ஜூலியன் என்பவர் தெரிவித்தார்.

சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து தற்கொலை தாக்குதல் அங்கி மற்றும், கிளைமோர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, வீட்டின் உரிமையாளர் கிளிநொச்சி பகுதியில் நேற்றைய தினமே கைது செய்யப்பட்டார்.

அவர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்கு மூலத்திலேயே மேற்படி விடயத்தினைக் கூறியுள்ளார்.

இதேவேளை, கைதானவரின் இரண்டாவது மனைவி பொலிஸாருக்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையிலே குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர், ரமேஸ் எனப்படும் எட்வேர்ட் ஜூலியன் (வயது 32) என்றும், 13 வயதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட ரமேசின் இரண்டாவது மனைவியே, வெடிபொருட்கள் பற்றிய தகவலை பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

போர் முடிவுக்கு வந்த பின்னர் ரமேஸ் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வெடிபொருட்களை சில நாட்களுக்கு முன்னரே, மன்னாரில் இருந்து ரமேஸ் அந்த வீட்டுக்குக் கொண்டு வந்திருந்தார்.

அவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்தே, அவரது இரண்டாவது மனைவி இது பற்றிய தகவலை பொலிஸாருக்கு வழங்கியுள்ளார்.

ரமேஸ் முன்னர், மன்னாரில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்தவர் என்றும் கூறப்படுகிறது.

குறிப்பிட்ட அனைத்து வெடிபொருட்களும், மீன் கொண்டு செல்லும் லொறி ஒன்றிலேயே அந்த வீட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கைதான நபர் வீட்டின் உரிமையாளர் என்பதோடு, லொறியின் சாரதியாகவும் செயற்பட்டுள்ளார். குறிப்பிட்ட தற்கொலை அங்கி, மற்றும் வெடிபொருட்கள்  முல்லைத்தீவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.

மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியும் என்பதால்தான் அவற்றை கொண்டு வந்ததாகவும் கைதானவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்