காற்றில் சுழற்றப்படும் கத்திகள்

🕔 March 30, 2016

Article - 77 - 0110 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – கிட்டத்தட்ட அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய கைக்குள் சென்று விட்டது.

0 மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், ஒரு சர்வதிகாரி போல் கட்சிக்குள்

0 செயற்படுகின்றார்.மு.காங்கிரசின் தலைமைப் பதவி, ஹக்கீமிடமிருந்து பறித்தெடுக்கப்படுதல் வேண்டும்.

0 கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர், மு.காங்கிரசின் தலைவராக வர வேண்டும்.

மேலுள்ள குற்றச்சாட்டுக்களும் கோஷங்களும் முஸ்லிம் காங்கிரசுக்குள் தற்போது குழப்பத்தினை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சீனியர் ஒருவரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. ‘பொண்டாட்டியின் கண்ணில் பூப்பட்டதை, ஆறு மாதங்களின் பின்னர் கண்டானாம் புருஷன்’ என்று கிராமங்களில் சொல்வார்கள். மேற்படி சீனியர், கட்சிக்குள் பல தசாப்தங்களுக்கும் மேலாக இருப்பவர். கட்சியில் பெரிய பதவி வகிக்கின்றார். போதாக்குறைக்கு – கட்சிக்குக் கிடைத்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் அணுவணுவாக அனுபவித்துப் பார்த்தவர். ஆனால், இப்போதுதான் ஹக்கீமுடைய கைக்குள் கட்சி போய்விட்டதையும், ஒரு சர்வதிகாரி போல் கட்சிக்குள் ஹக்கீம் செயற்படுவதையும் சீனியர் கண்டுபிடித்திருக்கிறார்.

முஸ்லிம் காங்கிரசுக்குக் கிடைத்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை, அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் – இம்முறை சீனியருக்குக் கொடுக்கவில்லை. அதற்குப் பிறகுதான் சீனியருக்கு ஞானம் பிறந்தது. ஹக்கீமுடைய குற்றங்கள் கண்ணுக்குத் தெரிந்தன.
இதே சீனியர், சில காலங்களுக்கு முன்னர் – ஊடக நண்பர் ஒருவரிடம் ஹக்கீம் குறித்து தெரிவித்திருந்த கருத்து தலைகீழானது. ‘முஸ்லிம் காங்கிரசின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப்பை விடவும், இப்போதுள்ள தலைவர் ஹக்கீம், நூறு மடங்கு மேலானவர்’ என்று சீனியர் கூறியிருந்தார். அப்போது, சீனியருக்கு மு.காங்கிரசின் சார்பில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டிருந்தது.

முஸ்லிம் காங்கிரஸுக்குள் திருத்திக் கொள்ளப்பட வேண்டிய பிழைகளும், தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினைகளும் ஏராளம் உள்ளன. மு.காங்கிரசின் தலைவர் தொடர்பில் நியாயமான பல குற்றச்சாட்டுக்களும் இருக்கின்றன. அவை சரிசெய்யப்படும் வரை, நேரிய பாதையில் அந்தக் கட்சி பயணிக்க முடியாது.

ஆனால், கட்சிக்குள் இப்போது ஏற்பட்டுள்ள கூச்சலும், குழப்பமும் – சீனியர்களின் தனிநபர் தேவைகள் நிறைவு செய்யப்படாமையினால் எழுந்துள்ள வெப்புசாரத்தின் வெளிப்பாடாகும்.

மு.காங்கிரசின் தலைவர் ஹக்கீம், கட்சிக்குள் ஒரு சர்வதிகாரி போல் செயற்படுகின்றார் என்கிற குற்றச்சாட்டு தட்டிக் கழிக்கும் வகையிலானதல்ல. ஆனால், மு.கா. தலைவர் ஹக்கீமுடைய கைகளுக்கு – இந்த சர்வதிகாரமானது, ஒற்றை இரவில் வந்து சேர்ந்து விடவில்லை. வருடக் கணக்கில் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அதிகாரத்தின் அசுர பலத்தினை அவர் பெற்றுக் கொண்டார். மு.காங்கிரசின் உயர் பீடத்தவர்கள்தான் தலைவருக்கு அவ்வாறான அதிகாரங்களை வழங்கினார்கள். இன்னும் சற்று விளக்கமாகச் சொன்னால், ஜனநாயக வழிமுறையில்தான் இந்த சர்வதிகாரத்தினை ஹக்கீம் பெற்றுக் கொண்டார். அப்போதெல்லாம் இந்த சீனியர் – இது குறித்து எதுவும் பேசவில்லை. அவருக்கு வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, அவரைப் பேச விடவில்லை. அப்போது – ஹக்கீமுடைய சர்வதிகாரம் இந்தச் சீனியரின் கண்களில் படவேயில்லை.

சர்வதிகாரத்தின் ருசியை மு.காங்கிரசின் தலைவருக்கு ஊட்டி விட்டவர்கள், இந்த சீனியர்கள்தான். முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் குறிப்பிடத்தக்க ஜனநாயக கட்டமைப்புகள் உள்ளன. முஸ்லிம் காங்கிரசுக்குள் ஏதாவதொரு விடயம் தொடர்பில் தீர்மானம் எடுப்பதாயின் அந்தக் கட்சியின் உயர்பீடத்தில் விவாதித்து, உயர்பீட உறுப்பினர்களின் பெரும்பான்மை அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொள்தல் அவசியமாகும். ஆனால், இந்த ஜனநாயக முறைமையினை மழுங்கடிக்கும் வகையில் நடந்து கொண்டவர்கள் கட்சிக்குள் இருக்கும் இவ்வாறான சீனியர்கள்தான். உதாரணமாக, தேர்தல்கள் வருகின்றபோது மு.காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதா அல்லது ஏதாவது கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிடுவதா என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் பொருட்டு, அந்தக் கட்சியின் உயர்பீடம் கூடும். அப்போது, அந்த விடயம் தொடர்பில் ‘இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தினை தலைவருக்கு வழங்குகின்றோம்’ என்று, இந்த சீனியர்கள் கோசமிடுவார்கள். அல்லது அவ்வாறு இடப்படும் கோஷங்களை இந்த சீனியர்கள் தமது மௌனங்களால் ஆதரிப்பார்கள். மு.கா. தலைவரின் கைகளுக்கு, சர்வதிகாரம் என்பது இப்படித்தான் சென்று சேர்ந்தது. ஆக, மு.காங்கிரசின் தலைமைக்கு – சர்வதிகாரத்தின் ருசியினை, இந்த சீனியர்கள்தான் ஊட்டிப் பழக்கினார்கள்.

ஆனால், இப்போது இந்த சீனியர்கள் சொல்லும் கதைகள் விசித்திரமானவை. மு.கா. தலைவரின் கைகளுக்கு சர்வதிகாரம் என்பது, வானத்திலிருந்து ஒற்றை இரவில் இறங்கியது போல் இவர்கள் கூக்குரலிடுகின்றனர். மாயாஜாலத்தின் மூலம், மு.கா. தலைவர் சர்வதிகாரத்தினைப் பெற்றுக் கொண்டு விட்டார் என்பது போல், இந்த சீனியர்கள் சொல்லும் கதைகள் அபத்தமானவையாகும்.

மு.காங்கிசுக்குக் கிடைக்கும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள், கட்சியில் சீனியராக இருப்பவர்களுக்கும், கட்சிக்குள் பெரிய பதவிகளை வகிக்கின்றவர்களுக்கும்தான் வழங்கப்படுதல் வேண்டும் என்கின்ற மனநிலையொன்றினை இந்தச் சீனியர்கள் வடிவமைத்து வைத்துள்ளனர். தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி என்பது, கட்சிக்குள் இருக்கின்ற சீனியர்களை கௌரவிப்பதற்கான கிரீடங்களாகும் என்று, இவர்கள் வாதிடுகின்றனர். இவர்களின் பதவிக் காய்ச்சலுக்கு தேசியப்பட்டியல் என்கிற போர்வை தேவையாக இருக்கிறது. இவர்களுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்காத போது, தம்மை கட்சித் தலைமை அவமானப்படுத்தி விட்டதாக கூக்குரலிடுகின்றனர். மு.காங்கிரசுக்குக் கிடைக்கும் தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை, இந்த சீனியர்கள் தங்களுடைய தாத்தாக்களின் வீட்டுச் சொத்தாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் சொல்கின்றமைபோல், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியென்பது, கட்சிக்குள் இருக்கின்ற சீனியர்களுக்குத்தான் வழங்கப்பட வேண்டும் என்பதை – ஒரு பேச்சுக்காக ஏற்றுக் கொண்டாலும், அதற்குத் தகுதியானோர் பலர் இருக்கின்றனர். மு.காங்கிரசுக்குள் இதுவரை சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த அதிகாரமுள்ள பதவிகளையும் அனுபவிக்காமல், பல மூத்த உறுப்பினர்கள் – கட்சியின் உயர் மட்டங்களில் உள்ளனர். முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகச் செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் – இதற்கு நல்ல உதாரணமாவார். முஸ்லிம் காங்கிரசை ஆரம்பித்தவர்களில் இவரும் ஒருவர். அந்தக் கட்சியின் ஸ்தாபகச் செயலாளர். இப்போதும் மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினராக உள்ளார். முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடத்தில் இப்போதுள்ள ஸ்தாபக உறுப்பினர் இவர் மட்டும்தான். 1981 ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபிக்கப்பட்டமை நினைவு கொள்ளத்தக்கது. ஆனாலும், சொல்லிக் கொள்ளும் வகையில், கட்சிக்குள் இந்த மனிதர் பெரிதாக எதையும் அனுபவிக்கவில்லை.

ஆனால், மு.காங்கிரசின் தற்போதைய செயலாளர் எம்.ரீ. ஹசனலி, மு.காங்கிரசுக்குக் கிடைத்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இரண்டு தடவை அனுபவித்திருக்கிறார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலங்களில் ஒரு முறை பிரதியமைச்சராகவும், இன்னொரு முறை ராஜாங்க அமைச்சராகவும் இருந்துள்ளார். போதாக்குறைக்கு, இம்முறையும் மூன்றாவது தடவையாக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தனக்கு வழங்குமாறு அடம்பிடித்து வருகின்றார். தான் முஸ்லிம் காங்கிரசிலுள்ள சீனியர் என்றும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை இம்முறையும் இரண்டு, மூன்று வருடங்களுக்காவது தனக்கு வழங்கி, தன்னைக் கௌரவப்படுத்தியிருக்க வேண்டும் என்றும், மு.கா.வின் செயலாளர் ஹசன் அலி கூறியிருந்தமையினை, ஊடகங்களில் செய்திகளாகக் காணக் கிடைத்தன.

ஹசன் அலி சொல்கின்றமை போல், தேசியப்பட்டியல் கொடுத்துத்தான் சீனியர்களைக் கௌரவிக்க வேண்டும் என்றால், ஹசன் அலிக்கு முன்பாகவே சட்டத்தரணி கபூருக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஹசன் அலியை விடவும் சட்டத்தரணி கபூர் – கட்சிக்குள் சீனியர். ஹசன் அலிக்கு முன்பாக, மு.காங்கிரசின் செயலாளராகவும் இருந்தவர். ஆனால், கபூருக்கு இதுவரை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவில்லை. அந்த மனிதரும், அதைக் கேட்டு அடம்பிடித்து அழுதது கிடையாது.

முஸ்லிம் காங்கிரஸ் என்பது யாருடைய தனிப்பட்ட சொத்துமல்ல. அந்தக் கட்யின் தலைமைத்துவம் ரஊப் ஹக்கீமுக்கு தாரை வார்க்கப்படவுமில்லை. மு.காங்கிரசின் தலைமைப் பதவி உள்ளிட்ட முக்கிய பொறுப்புக்களுக்குரியவர்கள் ஜனநாயக விதிமுறைகளின் அடிப்படையில்தான் ஒவ்வொரு வருடமும் தெரிவு செய்யப்படுகின்றனர்.

மேலே சொன்ன சீனியர்களின் ஆசைப்படி, மு.காங்கிரசின் தலைமைப் பதவியை ஹக்கீமிடமிருந்து கழற்றி எடுப்பதென்றாலும், அதற்கென்று ஒரு வழிமுறை உள்ளது. துப்பாக்கியை நெற்றிப்பொட்டில் வைத்து, தலைமைப் பதவியைப் பறித்தெடுக்க முடியாது. மு.காங்கிரஸ் என்பது ஜனநாயக அடிப்படையிலான ஓர் அரசியல் கட்சியாகும். மு.காங்கிரசின் தலைமைப் பதவி – எந்த வழியில் ஹக்கீமைச் சென்றடைந்ததோ, அந்த வழியினூடாகத்தான் அவரிடமுள்ள தலைமைப் பதவியினைக் கழற்றி எழுக்கவும் முடியும்.

மு.காங்கிரசிரஸ் நிருவாகத்தில் தலைவர் உட்பட 23 பேர் உள்ளனர். இந்த 23 பேர் பற்றிய தகவல்கள்தான் தேர்தல் ஆணையாளருக்கு கட்சியினால் அறிவிக்கப்படும். மு.கா.வின் உயர்பீடத்தைச் சேர்ந்த 90 உறுப்பினர்கள்தான் நிருவாகத்தினைச் தெரிவு செய்வார்கள். உயர்பீடத்தின் ஆதரவைப் பெறுவோர் பதவிகளுக்கு தெரிவாவார்கள். மு.காங்கிரசின் தலைமைப் பதவிக்கு இதுவரை காலமும் ரஊப் ஹக்கீம் போட்டியின்றி ஏகமனதாகவே தெரிவு செய்யப்பட்டு வந்துள்ளார். மு.கா.வின் தலைமைப் பதவியிலிருந்து ஹக்கீமை கழற்ற வேண்டும் என்று கூக்குரலிடுகின்றவர்கள், கடந்த 15 வருடங்களாக ஹக்கீமை தலைமைப் பதவிக்குப் பிரேரித்தும், ஆமோதித்தும் வந்துள்ளனர்.

மு.காங்கிரசின் தலைமைப் பதவியை வகிக்கும் நபரை, அந்தப் பதவியிலிருந்து உடனடியாக விலக்குவதற்கும் கட்சிக்குள் ஜனநாயக ஏற்பாடுகள் உள்ளன. கட்சித் தலைவர் மீது ஏதாவது குற்றச்சாட்டுகள் இருக்குமாயின், தலைவருக்கு எதிராக குற்றப் பிரேரணையொன்றினைக் கொண்டுவர முடியும். உயர்பீட உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் குற்றப் பிரேரணையில் கையொப்பமிடுதல் வேண்டும். தற்போது 90 பேர் உயர்பீட உறுப்பினர்களாக உள்ளனர். அப்படிப் பார்த்தால், இவர்களில் 30 பேர் குற்றப் பிரேரணையில் கையொப்பம் இடுதல் வேண்டும். பின்னர் இந்தக் குற்றப் பிரேரணையின் அடிப்படையில் உயர்பீடம் கூட்டப்பட்டு, அதில் பிரேரணையில் கூறப்பட்ட குற்றங்கள் தொடர்பில் விவாதிக்கப்படுதல் வேண்டும். அதன் பின்னர், குற்றப் பிரேணைக்கு ஆதரவாக உயர்பீட உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும். அது நிறைவேறுமாயின் தலைமைப் பதவியிலிருந்து குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரை விலக்கி விட முடியும்.

இவற்றையெல்லாம் விடுத்து, மு.காங்கிரசின் தலைமைப் பதவி – ஹக்கீமிடமிருந்து பறித்தெடுக்கப்படுதல் வேண்டுமென கூப்பாடு போடுவதாலோ, ஊடகங்களில் அறிக்கை விடுவதாலோ ஆகப் போவது ஒன்றுமில்லை. ஹக்கீமுக்கு எதிராய் சண்டை செய்வதாக நினைத்துக் கொண்டு, இந்த சீனியர்கள் – காற்றில் தமது கத்திகளைச் சுழற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

மு.காங்கிரசின் தலைமைப் பதவிக்கு கிழக்கு மாகாணத்தவர் ஒருவரை நியமிக்க வேண்டுமென்றால் கூட, அதையும் – மேலே உள்ளவாறு ஜனநாயக அடிப்படையில்தான் நிறைவேற்றிக் கொள்தல் வேண்டும். கிழக்கு மாகாணத்தவராக இருத்தல் என்பது மட்டும் – மு.காங்கிரசின் தலைமைப் பதவியை வகிப்பதற்குரிய தகுதியாக மாட்டாது. ஏற்கனவே, இந்தக் கோசத்துடன் மு.கா.விலிருந்து பிரிந்து சென்று கட்சி உருவாக்கியவர்களெல்லோரும், இதுவரை எதையெல்லாம் செய்து கிழித்தார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். ‘கிழக்கு வாதம்’ என்கிற ஆயுதத்தினை வைத்துக் கொண்டு, மு.காங்கிரசின் தலைமைத்துக்கான போரில் ஹக்கீமை ஒருபோதும் வீழ்த்த முடியாது.

இன்றோ, நாளையோ – சீனியருக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குவதாக மு.காங்கிரசின் தலைவர் ஹக்கீம் திடீரென அறிவுப்புச் செய்து விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு அடுத்த நாள் பத்திரிகையில் – சீனியரின் சிரித்த முகத்துடனான படத்துடன், அவர் – ஹக்கீமை போற்றிப் புகழ்ந்த செய்தி முன்பக்கத்தில் வரும்.

சீனியர்களின் புரட்சி – அத்தோடு படுத்துவிடும்.

நன்றி: ‘தமிழ் மிரர்’ பத்திரிகை (29 மார்ச் 2016)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்