பெல்ஜியம் குண்டு வெடிப்பில் 34 பேர் பலி; தாக்குதல்தாரிகள் அரபு மொழியில் கோசம்

🕔 March 22, 2016


பெ
ல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய குண்டு வெடிப்பில் 34 பேர் பலியாகினர். 55 பேர் படுகாயமடைந்தனர்.

14 பேர் விமான நிலையத் தாக்குதலிலும் 20 பேர் மெட்ரோ ரயில் நிலைய தாக்குதலிலும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விமான நிலையத்தில் நடந்தது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

விமான நிலையத்தில் தாக்குதல் நடந்த சில நிமிடங்களில், மெட்ரோ ரயில் நிலையத்திலும் குண்டு வெடித்தது.

பெல்ஜியம் விமான நிலையத்தின் விமானப் பயணிகளின் காத்திருப்பு பகுதியில், அமெரிக்கன் ஏர்லைன்ஸின் தகவல் மையம் அருகில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவமும் நடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக பிரஸல்ஸ் விமான நிலையத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “விமான நிலையத்தில் இரண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன. விமான நிலையத்திலிருந்து பொதுமக்களை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. யாரும் விமான நிலையத்துக்கு வர வேண்டாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அதிகரிப்பு:

விமான நிலையத்தில் நடந்த வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து பெல்ஜியம் உள்துறை அமைச்சு, அந்த நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.

மேலும், பெல்ஜியத்தை சுற்றியுள்ள 04 அண்டை நாடுகளின் எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரஸல்ஸ் விமான நிலையத்துக்கு வரும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பிரஸல்ஸ் விமான நிலையம் மூடப்பட்டது. அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக பிரஸல்ஸ் விமான நிலைய கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

ரயில் நிலையத்திலும் தாக்குதல்

மத்திய பிரஸ்ல்ஸில் உள்ள மால்பீக் மெட்ரோ ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

தீவிரவாதி கைதுக்கு பழிவாங்கலா?

கடந்த 04 நாட்களுக்கு முன்னதாக பாரிஸ் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஒருவர் பிரஸல்ஸில் கைது செய்யப்பட்டார். 26 வயதுடைய சலா அப்துல் சலாம் கைதுக்கு பழிவாங்கும் நோக்கில் இன்றைய தாக்குதல் நடந்திருக்கலாம் என பெல்ஜியம் உள்நாட்டு அமைச்சர் ஜோன் ஜாம்போன் தெரிவித்துள்ளார்.

அரபு மொழியில் கோஷம்

குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு முன்னதாக விமான நிலையத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும், அரபு மொழியில் ஒருவர் கோஷம் எழுப்பியதாகவும் பெல்கா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்