அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் மின் பிறப்பாக்கி பழுது; சிகிச்சை வழங்குவதில் பிரச்சினை

🕔 March 18, 2016

Hospital - 01
– மப்றூக் –

ட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் மின்பிறப்பாக்கி பழுதடைந்து, செயற்படாத நிலையில் உள்ளதால், மின்சாரத் தடை ஏற்படும் நேரங்களில் நோயாளிகளும், வைத்தியசாலைத் தரப்பினரும் மிகக் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி வைத்தியசாலையில் மின்பிறப்பாக்கியொன்று உள்ளபோதும், கடந்த சில மாதங்களாக அது பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. ஆயினும், இதுவரை குறித்த மின்பிறப்பாக்கி திருத்தப்படவுமில்லை, அதற்குப் பதிலாக வேறு மின்பிறப்பாக்கி வழங்கப்படவுமில்லை.

இது தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளருக்கு, அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைத் தரப்பினர், பல தடவை அறிவித்திருந்த போதும், இதுவரை உரிய தீர்வுகள் எவையும் கிடைக்கவில்லையென அறிய முடிகிறது.

மின்சாரத் தடை ஏற்படும் போது ஈ.சி.ஜி இயந்திரம், சுவாசப் பிரச்சினையுள்ள நோயாளர்களுக்கான ஆவி பிடிக்கும் கருவி, இயத் துடிப்பு காட்டும் கருவி ஆகியவற்றினைச் செயற்படுத்த முடியாதுள்ளதாகவும், இதனால் நோயாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் வைத்தியசாலைத் தரப்புக்கள் சுட்டிக்காட்டப் படுகின்றன.

இதேவேளை, நேற்று வியாழக்கிழமை காலை, இப் பிரதேசத்தில் மின்சாரத் தடை ஏற்பட்ட போது நிலவிய அசௌகரிய சூழ்நிலை காரணமாக, தமது அறைகளிலிருந்து வெளியேறிய வைத்தியர்கள், வைத்தியசாலையின் வரவேற்பு அறைப் பகுதியில் வைத்து, நோயாளர்களைப் பரிசோதித்துக் கொண்டிருந்தமையினைக் காண முடிந்தது.

மேலும், இரவு வேளையில் மின்சாரத் தடை ஏற்படும் போது, இந்த வைத்தியசாலையில் தங்கிச் சிகிச்சை பெறும் நோயாளர்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக் கூறுகின்றனர்.

எனவே, அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு, செயற்படும் வகையிலான மின்பிறப்பாக்கி ஒன்றினை வழங்குவதற்கு, உரிய தரப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.Hospital - 02Hospital - 03

Comments

புதிது பேஸ்புக் பக்கம்