கண்டி மஹியாவையில், குடிசைகளுக்குப் பதில் தொடர்மாடி வீடுகள் அமைக்கப்படும்: அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

🕔 February 19, 2016

Hakeem - 0973
– ஷபீக் ஹுஸைன் –

ண்டி, மஹியாவை பிரதேச மக்கள் வாழும் குடிசை வீடுகளுக்குப் பதிலாக, நவீன வசதிகளுடன் கூடிய தொடர்மாடி வீடுகளை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஜெய்கா நிறுவனத்தின் நிதி உதவியுடன், கண்டி நகர கழிவு நீர் முகாமைத்துவ திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அமைச்சர் மேலும் கூறுகையில்;

“கண்டி, மஹியாவை பிரதேசத்தில் அடிப்படை வசதிகளற்ற குடிசை வீடுகள் அதிகம்உள்ளன. கண்டி, மாநகரசபையுடன் கலந்துரையாடி இந்த குடிசை வீட்டில் வசிக்கின்றவர்களுக்கு உரிய இடத்திலேயே நவீன வசதிகளை கொண்ட தொடர்மாடி வீடுகள் அமைத்து கொடுக்கப்படும்.

பழைய போகம்பரை சிறைச்சாலை அமைந்துள்ள இடத்தினை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை பிரதமர் என்னிடம் ஒப்படைத்துள்ளார். இதற்கான பூர்வாங்க வேலைத்திடங்களை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கண்டி மாவட்ட அமைச்சர்களுடன் இணைந்து, உலக மரபுரிமை நகரமான கண்டி நகரை – பாரியளவில் அபிவிருத்தி செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கழிவு நீர் சுத்திரிப்பு திட்டங்களை மேலும் செயற்படுத்துவதன் மூலம், கண்டி நகரின் கழிவு நீரை சுத்தமாக்கி, ஹெத ஓயாவையும் சுத்தப்படுத்த முடியும். மட்டுமன்றி ஹெத ஓயா ஆற்று நீரை, குடிநீர் விநியோகத் திட்டத்துக்கு பயன்படுத்தவும் முடியும்.

கழிவு நீர் சுத்திகரிப்புத் திட்டங்களை காலி, மாத்தறை, திருகோணமலை போன்ற பிரதேசங்களில் ஆரம்பிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலும் இது போன்ற செயற்திட்டங்களை மேற்கொள்ள நீர் வழங்கல் அமைச்சினூடாக திட்டமி்ட்டுள்ளோம்” என்றார்.

இந் நிகழ்வில் கண்டி மாநகர அபிவிருத்திக் குழு இணைத் தலைவர் லக்கி ஜயவர்தன உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.Hakeem - 0975Hakeem - 0974

Comments

புதிது பேஸ்புக் பக்கம்