ஆசிரியையை முழுங்காலில் வைத்தவரை, அதே பாடசாலைக்கு பிரதம அதிதியாக அழைத்தமை குறித்து, விசாரணை நடத்த கோரிக்கை

🕔 February 12, 2016

Joshap stalin - 0897பாடசாலை ஆசிரியை ஒருவரை முழுகாலில் நிற்க வைத்தார் எனும் குற்றச்சாட்டில் விளக்க மறியலில் வைக்கப்பட்ட வடமேல் மாகாணசபை உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவை, அதே பாடசாலையில் இடம்பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அழைத்தமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு, கல்வி அமைச்சரிடம் இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கையில்;

“நவகத்தேகம நவோதய பாடசாலையில் இடம்பெற்ற விளையாட்டு விழாவுக்கு, அந்த பாடசாலையின் அதிபர் மல்கம் பீற்றசன் விடுத்த அழைப்பின் பேரில், மேற்படி மாகாணசபை உறுப்பினர் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்தார்.

ஆயினும், குறித்த மாகாணசபை உறுப்பினரை பிரதம அதிதியாக அழைப்பதற்கு பாடசாலை ஆசிரியர்களும், பெற்றோர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

மேற்படி நபரை பிரதம அதிதியாக அழைத்தமையானது, ஆசிரியத் தொழிலை அவமதித்தமைக்கு ஒப்பான செயலாகும். குறித் மாகாணசபை உறுப்பினருடைய மகளிடம் சீருடையை சற்று நீளமாக்கிக் கொள்ளுமாறு கூறிய ஆசிரியையை, தனக்கு முன்னால் முழங்காலில் நிற்க வைத்து அவமானப்படுத்தியவர் மேற்படி மாகாணசபை உறுப்பினர்.

அவ்வாறான ஒருவர், அதே பாடசாலையில் நடைபெறும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அழைக்கப்பட்டுள்ளார்.

எனவே, இந்த மோசமான நடவடிக்கை தொடர்பில், குறித்த பாடசாலை அதிபருக்கு எதிராக நடவடிககை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்