தோண்டப்படுகிறது நீச்சல் தடாகம்; சிக்குமா தங்கம்?

🕔 January 29, 2016

Peacock - 011ஹிந்த ராஜபக்ஷவின் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேககிக்கப்படும் பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்திலுள்ள மணல் இன்று வெள்ளிக்கிழமை அகற்றப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

பீக்கொக் மாளிகையின் நீச்சல் தடாகத்தில் தங்கம் உள்ளதாக கதைகள் உலா வரும் நிலையில் அந்த மாளிகையின் உரிமையாளரான பிரபல வர்த்தகர் ஏ.எஸ்.பி. லியனகே, அது குறித்து பொலிஸ் மா அதிபரிடம் செய்த முறைப்பாடு செய்திருந்தார்.

இதற்கு அமைவாக விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், குறித்த நீச்சல் தடாகத்திலுள்ள மணல் அகற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளின் மேற்பார்வையில், நீச்சல் தடாகத்தின் மணல் அகற்றப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த தோல்வியடைந்ததனைத் தொடர்ந்து அவர் அலரிமாளிகையினை விட்டு வெளியேறியிருந்தார்.

கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக சுகபோக வாழ்க்கை நடாத்திவந்த மஹிந்த குடும்பம், அதன் பின்னர் சிறிய வீடு ஒன்றில் வசித்து வருவதாகவும், இதன் காரணமாக பல இன்னல்களை எதிர்நோக்கியிருந்தாகவும் செய்திகள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து பிரபல வர்த்தகரான ஏ.எஸ்.பி. லியனகே 75 கோடி ரூபா மதிப்பிலான தனது பீகொக் மாளிகையினை, மஹிந்தவிற்கு அன்பளிப்பாக வழங்குவதாக அறிவித்திருந்தார். எனினும் பின்னர், தனது பீகொக் மாளிகையினை வழங்க முடியாது என அவர் அறிவித்தார்.

இதனையடுத்து, குறித்த வீட்டுக்கு குடிவருவதற்கான நடவடிக்கைகளை மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டதாகவும், அதன்போது அங்கிருந்த நீச்சல் தடாகத்தை மண்ணிட்டு நிரப்பியதாகவும் கூறிப்படுகிறது.

மண்ணிட்டு நிரப்பப்பட்ட நீச்சல் தடாகத்தின் அடியில், மஹிந்தவினுடைய தங்கம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கதைகள் பரவின.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, வடக்கில் இருந்து கொண்டுவரப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான தங்கமே பீகொக் மாளிகையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக அண்மையில் சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலேயே, பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்திலுள்ள மண் அகற்றப்படவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்