நீர் சுத்திகரிப்பு இயந்திரத் தொகுதியை, மக்களிடம் ஹக்கீம் கையளித்தார்

🕔 June 2, 2015

Hakeem - Mathavachi - 02நீரின் கனதி மற்றும் அதில் அடங்கியுள்ள உலோக, ரசாயன கலவை காரணமாக ஏராளமானோர் சிறுநீரக நோயினால் பாதிப்புக்குள்ளாகின்றனர். மதவாச்சிக்கு அருகிலுள்ள நேரியகுளம் எனும் இந்தக் கிராமத்திலும் இதனைச் சூழவுள்ள அயல் கிராமங்களிலும் முப்பதுக்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளர்கள் இருப்பதாக எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. எனவே,  இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து விடக் கூடாது என்பதற்காக, இந்தக் கிராமத்துக்கு நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை பொருத்தி, அதனூடாக சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் ரஊப் ஹக்கீம் கூறினார்.

மதவாச்சி பிரதேசத்தில் சிறுநீரக நோயைத் தடுப்பதற்காக நேரியகுளம் பள்ளிவாசல் எல்லைக்குள்,   நீர் சுத்திகரிப்பு  இயந்திரத் தொகுதியும் நீர்த் தாங்கியும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை – நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம், நேற்று திங்கள்கிழமை மக்கள் பாவனைக்கு கையளித்த பின்னர் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்;

இந்த மக்களின் பிரச்சினைகளை எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார். அதனால்தான், சிறுநீரக நோயினால் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கு, வரவு செலவுத்திட்டத்தில் ஆயிரம் மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளதோடு, அவரது தலைமையில் அதற்காக விஷேட செயலணியொன்றையும் நிறுவியுள்ளார். பல அமைச்சுகளை உள்ளடக்கி, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணக் கூடிய – நல்ல வாய்ப்பை, ஜனாதிபதி ஏற்படுத்தி தந்துள்ளார். அவரது வெற்றிக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் அவர் கடமைப்பட்டுள்ளார்.

பொதுவாக மொனராகலை, பதுளை, குருநாகல், புத்தளம் போன்ற சில மாவட்டங்களிலும், குறிப்பாக அநுராதபுரம், பொலநறுவை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வடமத்திய மாகாணத்திலும், சிறுநீரக நோயினால் அநேகர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பலர் மரணித்தும் வருகின்றனர். தனிப்பட்ட விதத்தில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இதனைத் தடுப்பதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது என்றார்.

நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களையும், அவற்றிற்கான நீர் தாங்கிகளையும் பொருத்துவதற்கு, இந்நாட்டின் முன்னணி நிறுவனமொன்று முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சுத்திகரிப்பு இயந்திரங்களை இயக்குவதற்வதற்கான மின்சார வசதிகளை செய்து கொடுப்பதற்கு,  நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை உதவும் என்றார்.

பரசன்கஸ்வௌ, ஹபரணை மற்றும் பலுகஸ்வேவ ஆகிய இடங்களில் – நீரின் அடர்த்தியைக் குறைத்து, உலோகங்களின் செறிவை நீக்கி – சுத்தப்படுத்தும் இயந்திரங்களையும், அதற்கான தொகுதிகளையும் அமைச்சர் ஹக்கீம் திறந்து வைத்ததோடு, திரிப்பனையில் 175 மில்லியன் ரூபா செலவில் 260 குடும்பங்களுக்கு அதிகமானோர் பயனடையக் கூடிய, குடிநீர் திட்டமொன்றையும்  ஆரம்பித்து வைத்தார்.

இந் நிகழ்வுகளில், வடமத்திய மாகாண ஆளுநர் டீ.பீ. திசாநாயக்க, நீர்ப்பாசன அமைச்சர் துமிந்த திசாநாயக்க, மகளிர் விவகார அமைச்சர் சந்திரா பண்டார, நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எச்.முயீனுதீன், உதவிப்பணிப்பாளர் பிரியந்தி டீ சில்வா, அநுராதபுர மாவட்ட நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர், பிரதான பொறியியலாளர் உட்பட உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள்  கொண்டனர்.Hakeem - Mathavachi - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்