வங்கி ஊழியர்கள்தான் தவறிழைத்துள்ளனர்; ஷிராந்தி குற்றச்சாட்டு

🕔 June 1, 2015

Shiranthi-334

‘சிரிலிய சவிய’ அறக்கட்டளைக்கான வங்கிக் கணக்கு கையாளுகையின்போது, தான் எவ்விதமான தவறுகளையும் புரியவில்லை என – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய வாக்குமூலத்தில்  தெரிவித்துள்ளதாக ஆங்கி ஊடமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், தன்னுடைய தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை –  வங்கிக் கிளையினர் அவர்களுடைய கணிணியில் பதிவு செய்யாமல் விட்டுள்ளதாகவும் ஷிராந்தி ராஜபக்ஷ சுட்டிக் காட்டியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவிடம்,  இன்று திங்கட்கிழமை – சபாநாயகரின் வாசஸ்தலத்தில் வைத்து நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலமொன்றினைப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

நிதிக் குற்றப்  புலனாய்வுப் பிரினர்  – தமது அலுவலகம் அல்லாத வேறோர் இடத்தில் வைத்து, வாக்குமூலமொன்றினைப் பெற்றுக் கொண்டமை – இதுவே முதற் சந்தர்ப்பமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘சிரிலிய சவிய’ எனும் அரச சார்பற்ற நிறுவனத்தினை, தானே இயக்கி வந்ததாகவும் – உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமுள்ள நன்கொடையாளர்களிடமிருந்து கிடைக்கும் நிதிகள் மூலமாகவே இந்த நிறுவனம் பராமரிக்கப்பட்டதாகவும் ஷிராந்தி ராஜபக்ஷ – தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘சிரிலிய சவிய’ மூலம் சிறுவர்களுக்கான வைத்தியசாலையொன்றினையும், பெற்றோர்களால் கைவிடப்பட்ட  பிள்ளைகளைப் பராமரிப்பதற்கான தங்குமிடமொன்றினையும் நிர்மாணிப்பதற்கு தாம் திட்டமிட்டிருந்ததாகவும் – இதன்போது ஷிராந்தி கூறியுள்ளார்.

ஆயினும், ‘சிரிலிய சவிய’ எனும் தமது அரச சார்பற்ற நிறுவனத்துக்கு, பொதுமக்களின் பணத்திலிருந்து ஒரு சதத்தினைக் கூட பெற்றுக் கொள்ளக் கூடாது என்று, அதன் உத்தியோகத்தர்களை தான் வலியுறுத்தியிருந்ததாகவும் – ஷிராந்தி தனது வாக்குமூலத்தில் தெரிவித்ததாக மேற்படி ஆங்கில ஊடகம் விபரித்துள்ளது.

‘சிரிலிய சவிய’வுக்கான வங்கிக் கணக்கினை திறக்கும் போது, எனது கடவுச் சீட்டின் நகல் பிரதியொன்றினை மக்கள் வங்கியின் சுதுவெல்ல கிளையில் வழங்கியிருந்தேன். அதேபோன்று ‘சிரிலிய சவிய’வின் உத்தியோகத்தர்களான கே.எச்.ஏ.என். ஜீவனி குமாரி மற்றும் எஸ்.கே.கே. திஸாநாயக்க ஆகியோரும் தமது தேசிய அடையாள அட்டையினை வழங்கியிருந்தனர். ஆயினும், எனது தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை குறித்த வங்கிக் கணக்கில் – வங்கி உத்தியோகத்தர்கள் ஏன் பயன்டுத்தவில்லை என்று எனக்குத் தெரியவில்லை எனவும் ஷிராந்தி ராஜபக்ஷ கூறியுள்ளார்.

ஷிராந்தி ராஜபக்ஷவிடமிருந்து – நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வாக்குமூலத்தினைப் பதிவு செய்ததாக அறிய முடிகிறது.

ஷிராந்தியுடன் – அவரின் கணவர் மஹிந்த ராஜபக்ஷவும், கடற்படை அதிகாரியான மகன் யோசித ராஜபக்ஷவும் சென்றிருந்ததாக அறிய முடிகிறது.Shiranthi - 908

Comments

புதிது பேஸ்புக் பக்கம்