மரணத்தின் கூக்குரல்

🕔 January 14, 2016

Article - 58 - 01
– மப்றூக் –

ரண தண்டனை குறித்த வாதப் பிரதிவாதங்கள் உயர்ந்த குரலில் உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இலங்கையில், சட்டரீதியாக மரண தண்டனை அமுலில் உள்ள போதும், கடந்த 40 வருடங்களாக நிறைவேற்றப்படவில்லை. ஆயினும், மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று ஆட்சியாளர்கள் விரும்புகின்றனர். தூக்கு தண்டனையை நிறைவேற்றும் ‘அலுகோசு’ பதவிகளுக்கான ஆட்சேர்ப்பும் நாட்டில் நடந்து முடிந்துள்ளது. இவ்வாறானதொரு நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னரும், மரண தண்டனையை இலங்கையில் இல்லாதொழிக்க வேண்டுமென்கிற கோரிக்கையினை, இலங்கை மனித உரிமை ஆணைக்குழு முன்வைத்துள்ளது. இந்த நிலையில், மரண தண்டனை தொடர்பில் மேலெழுந்தவாரியாக பேசுவதற்கு இந்தக் கட்டுரை முற்படுகிறது. மரண தண்டனை என்பது சரியா? தவறா என்கிற வாதப் பிரதிவாதங்களிலிருந்து இந்தக் கட்டுரை தவிர்ந்துள்ளது.

ரண தண்டனைக்கு வயது நீளமானது. ஒவ்வொரு சமூகத்திலும் பெருங் குற்றங்களைப் புரிவோருக்கு மரணம் தண்டனையாக வழங்கப்பட்டு வந்துள்ளதை வரலாறு முழுக்கக் காணக் கிடைக்கிறது. எவையெல்லாம் குற்றம் என்பதைத் தீர்மானிப்பதில் ஒவ்வொரு சமூகத்திலும் மேலோங்கிக் காணப்படுகின்ற சமயங்களும், பண்பாடுகளும் பெரும் பங்கு வகித்தன – வகிக்கின்றன. ஒவ்வொரு மக்கள் கூட்டத்தின் ஆட்சியாளர்களும், எவை குற்றம் என்பதைத் தீர்மானிப்பவர்களாக இருந்து வருகின்றனர்.

வரலாற்றுக் குறிப்புகளின்படி முதலாவது மரண தண்டனை, கிறிஸ்துவுக்கு முன் 16 ஆம் நூற்றாண்டில் நிறைவேற்றப்பட்டதாக அறிய முடிகிறது. பிரபுக்கள் குடும்பத்தினைச் சேர்ந்த ஒருவர், மந்திர வேலைகளில் ஈடுபட்டார் என்கிற குற்றச்சாட்டின் பேரில், மரண தண்டனைக்கு ஆளாக்கப்பட்டார்.

கிறிஸ்துவுக்கு முன் 18 ஆம் நூற்றாண்டிலும், பண்டைய மொசப்பதேமியாவின் தலைநகரான பாபிலோன் மன்னன் ஹம்முராபி (Hammurabi) என்பவரின் காலத்தில் 25 வகையான குற்றச்செயல்களைப் புரிகின்றவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், மன்னன் ஹம்முராபியின் காலத்தில், கொலை என்பது மரண தண்டனைக்குரிய குற்றமாக இருக்கவில்லை.

ஹிற்றைற் (Hittite) சாம்சாஜ்யத்திலும் கிறிஸ்துவுக்கு முன் 14 ஆம் நூற்றாண்டளவில் மரண தண்டனை நடைமுறையில் இருந்துள்ளது. ஹிற்றைற் சாம்ராஜ்யமென்பது இப்போதுள்ள துருக்கி, சிரியா மற்றும் லெபனான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியதாகும்.

கிறிஸ்துவுக்கு முன் 07 ஆம் நூற்றாண்டில், எதென்ஸில் அனைத்துக் குற்றங்களுக்கும் மரண தண்டனையே வழங்கப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன.

ரோமன் சட்டத்திலும் கி.மு. 05 ஆம் நூற்றாண்டில் மரண தண்டனை நடைமுறையில் இருந்துள்ளது. பிரபுக்களுக்கும், சுதந்திர மனிதர்களுக்கும், அடிமைகளுக்கும் அப்போதைய காலப்பகுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட முறைகள் வெவ்வேறாக இருந்தன.Article - 58 - 06

பொய்யான அறிக்கை விடுதல், அவதூறான பாடல்களை உருவாக்குதல், விவசாயி ஒருவரின் பயிர்களை வெட்டுதல் அல்லது மேய்ச்சலுக்காகப் பயன்படுத்துதல், வீட்டுக்குத் தீ வைத்தல், புலவர்கள் தமது வாடிக்கையாளர்களை ஏமாற்றுதல், பொய் வாக்கு மூலம் வழங்குதல், நகரத்தில் இரவு வேளையில் தொந்தரவினை ஏற்படுத்துதல், வேண்டுமென்றே தனது பெற்றோரை அல்லது சுதந்திர மனிதர்களைக் கொல்லுதல் மற்றும் அடிமைகள் திருட்டுச் செயலில் ஈடுபடுதல் உள்ளிட்டவை அப்போதைய காலப்பகுதியில் மரண தண்டனைக்குரிய குற்றங்களாகக் காணப்பட்டன.

பண்டைய எகிப்தில் பூனையொன்றினைக் கொல்லுதல், மரண தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது. பூனையை மனிதரொருவர் தற்செயலாக விபத்து ஒன்றில் கொன்று விட்டால் கூட, அது மரண தண்டனைக்குரிய குற்றமாகவே கருதப்பட்டது.

உயிருடன் எரித்தல், சிலுவையில் அறைதல், நீரில் மூழ்க வைத்துச் சாகடித்தல், யானையால் மிதித்துக் கொல்லுதல், உயிரோடு அடக்கம் செய்தல், அடித்துக் கொல்லுதல் மற்றும் கழுமரத்தில் ஏற்றுதல் போன்றவை அப்போதைய மரண தண்டனை முறைகளில் சிலவாகும்.

ரோமர்களின் நடைமுறையில் இருந்த சில மரண தண்டனை முறைகள் விநோதமானவையாகும். பெற்றோரைக் கொலை செய்தவர்களுக்கு விநோதமான முறையில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.

சாக்கு போன்ற பையொன்றினுள் ஒரு நாய், ஒரு சேவல், ஒரு கட்டு விரியன் பாம்பு, ஒரு மனிதக் குரங்கு ஆகியவை இடப்படும். பின்னர், அந்தச் சாக்குப் பையினுள் பெற்றோரைக் கொலை செய்த குற்றத்தினைப் புரிந்தவர் போடப்படுவார். சாக்குப் பை இறுகக் கட்டப்பட்டு நீரில் போடப்படும். சாக்கினுள் போடப்பட்ட விலங்குகளால் குற்றவாளி துன்புறுத்தப்பட்ட நிலையில், நீரில் மூழ்கி இறந்து போவார். Article - 58 - 07

இருந்தபோதிலும், கிரேக்க தத்துவ அறிஞர் சோக்ரடீஸ் மீது விதிக்கப்பட்ட மரண தண்டனையே, வரலாற்றில் மிகவும் மோசமானதும், பிரபல்யமானதுமாக அறியப்படுகிறது. கி.பி. 339 ஆம் ஆண்டு விசம் அருந்துமாறு சோக்ரடீஸ் வற்புறுத்தப்பட்டு, மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார். மதத்துக்கு எதிரான கொள்கைகளை தோற்றுவித்தார் என்கிற பிரதான குற்றச்சாட்டு சோக்ரடீஸ் மீது அப்போது சுமத்தப்பட்டது. அந்தக் குற்றத்துக்காகவே அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இலங்கையிலும், பண்டைய காலம் முதல் மரண தண்டனை புழக்கத்தில் இருந்து வருகிறது. இலங்கையை ஆட்சி செய்த கணிசமான மன்னர்களின் காலத்தில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சில மன்னர்கள் மரண தண்டனையை அவர்களின் ஆட்சிக் காலத்தின்போது இல்லாதொழித்திருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. Article - 58 - 03

கி.பி. முதலாம் நூற்றாண்டில் இலங்கையை ஆட்சி செய்த மன்னன் அமந்த காமினி அபய, மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த வொஹாரிக திஸ்ஸ, நான்காம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கையை ஆட்சி செய்த ஸ்ரீ சங்போதி மற்றும் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரண்டாவது பராக்கிரமபாகு போன்ற மன்னர்கள் மரண தண்டனையை அவர்களின் ஆட்சிக் காலங்களில் இல்லாமல் செய்தார்கள் என்று வரலாறுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயினும், இலங்கை மன்னர்களான களனி திஸ்ஸ, தாதுசேன மற்றும் காசியப்பன் போன்றோரின் ஆட்சிக் காலங்களில் மரண தண்டனை வழங்கில் இருந்துள்ளது.

இலங்கையில் அப்போது மரண தண்டனைகள் கொடூரமான முறையில் வழங்கப்பட்டுள்ளன. யானையால் மிதித்துக் கொன்று மரண தண்டனை நிறைவேற்றப்படும் வழக்கம் இலங்கையிலும் இருந்துள்ளது.

ஆயினும், இலங்கையில் கொடூரமான முறைகளில் மரண தண்டனையை நிறைவேற்றும் வழக்கத்துக்கு பிரித்தானியரின் காலத்தில் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. 1802 ஆம் ஆண்டு, பிரித்தானியாவின் அப்போதைய இலங்கைக்கான ஆளுநராகக் கடமையாற்றிய சேர் பிரட்ரிக் நோத் என்பவர், மரண தண்டனையை தூக்கில் இடும் முறையில் அமுலாக்கினார். Article - 58 - 04

இருந்தபோதும், தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும் முறைமையானது, இலங்கையில் அமுல்படுத்தப்படுவதற்கு 08 நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே, அதாவது கிறிஸ்துவுக்கு பின்னர் 10 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் பிரித்தானியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர் 1956 ஆம் ஆண்டு அப்போதைய பிரதம மந்திரி எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்க மரண தண்டனையை இல்லாமலாக்கினார். இருந்தபோதும், பண்டாரநாயக்க படுகொலை செய்யப்பட்டமையினைத் தொடர்ந்து 1959 ஆம் ஆண்டு, மரண தண்டனை மீண்டும் அமுல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், மரண தண்டனைக்கு பரவலாக எதிர்ப்புக் கிளம்பியமையினை அடுத்து, 1978 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் மரண தண்டனை தொடர்பாக அரசியல் யாப்பில் சில மாற்றங்களை ஏற்படுத்தியது. இதன்படி குறித்த வழக்கினை விசாரிக்கும் நீதிபதி, சட்டமா அதிபர் மற்றும் நீதியமைச்சர் ஆகியோரின் ஒப்புதலுடனேயே மரண தண்டனை நிறைவேற்றப்படுதல் வேண்டும் என்றாகியது. இதேவேளை, ஜனாதிபதியின் ஒப்புதலும் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்குப் பெறப்படுதல் அவசியமாக்கப்பட்டது.

இலங்கையில் மரண தண்டனை அமுலில் உள்ள போதும், 1976 ஆம் ஆண்டுக்குப் பின்னர், எவருக்கும் சட்டரீதியாக மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜே.எம். சந்திரதாஸ என்பவர் 1976 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 23 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து தூக்கிலிடப்பட்டார். இதுவே, இலங்கையில் கடைசியாக நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையாகும்.

ஆயினும், கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றங்களுக்காக, மேல் மற்றும் உச்ச நீதிமன்றங்கள் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்து வருகின்றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

கடந்த வருடம் செப்டம்பர் மாத தகவல்களின்படி, இலங்கையில் 1115 பேர் மரண தண்டனையை எதிர்நோக்கியிருப்பதாக, அப்போதைய சிலைச்சாலை ஆணையாளர் தெரிவித்திருந்தார்.

வெலிக்கட, மஹர மற்றும் போகம்பர சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டுள்ள இவர்களில் அதிகமானோர் ஆண்களாவர்.

மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள மேற்படி நபர்களில் 635 பேர், தமது தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளபோதும், மிகுதி 480 பேரும் மேன்முறையீடு செய்யவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ‘மறு சிறா’ என்று அழைக்கப்பட்ட டி.ஜே. சிறிபால பிரபல்யமானவர். கொலைக் குற்றம் ஒன்றுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர், மூன்று தடவை சிறையிலிருந்து தப்பித்திருந்தார். ‘மறு சிறா’ சிறையிலிருந்து தப்பித்த காலப்பகுதியில், நீதிமன்றில் அவர் ஆஜராகாத நிலையிலேயே அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட ‘மறு சிறா’, போகம்பர சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். 1975 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 05 ஆம் திகதியன்று இரவு, ‘மறு சிறா’ தூக்கிலிடப்பட்டார். ஆயினும், வழமை போல் ‘மறு சிறா’ தப்பித்து விடுவார் என்று சிறைக் காவலர்கள் அன்றைய தினம் அச்சமடைந்தனர். எனவே, ‘மறு சிறா’ எனப்படுகின்ற சிறிபாலவுக்கு அதிகளவான மயக்க மருந்தினை சிறைக் காவலர்கள் கொடுத்தனர். இதனால், ‘மறு சிறா’ சுய நினைவை இழந்தார். தூக்கிலிடுவதற்கான நேரம் நெருங்கிய போது, அவரை சிறைக் காவலர்கள் எழுப்ப முயன்றும் முடியவில்லை. ஆழ்ந்த மயக்கத்தில் அவர் இருந்தார். இதனால், சுயநினைவற்ற நிலையிலேயே ‘மறு சிறா’ எனப்படுகின்ற டி.ஜே. சிறிபால தூக்கிலிடப்பட்டார்.Article - 58 - 05

இலங்கையில் கடந்த 40 வருடங்களாக மரண தண்டனை நிறைவேற்றப்படாத போதும், அதனை மீளவும் நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் மேற்கொண்டிருந்தார். ஆயினும், மரண தண்டனைக்கு எதிராகக் கிளம்பிய எதிர்ப்புக் காரணமாக அவர் தனது முடிவினைக் கைவிட்டார்.

இருந்தபோதும், 2004 ஆம் ஆண்டு, மேல் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய சரத் அம்பேபிட்டிய சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, மரண தண்டனையை மீளவும் அமுல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டமையும் இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

மரண தண்டனைக்கு எதிரான குரல் உலகெங்கும் மேலெழுந்து வரும் நிலையில், உலகில் 103 நாடுகள் மரண தண்டனையை இல்லாதொழித்துள்ளன. ஆயினும் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகள் இன்னும் மரண தண்டனையை அமுல்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதிலும், ஒவ்வொரு வருடமும் உலகில் அதிகமாக மரண தண்டனையை நிறைவேற்றும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா உள்ளடங்குகின்றது என்பது இங்கு கவனிப்புக்குரியது.

நவீன உலகில் முதன் முதலாக மரண தண்டனையை இல்லாதொழித்த நாடு வெனிசுலாவாகும். 1863 ஆம் ஆண்டு அந்த நாடு மரண தண்டனையை இல்லாதொழித்தது.

இதேவேளை, அமெரிக்க நாட்டவர்களில் பெரும்பான்மையானோர் மரண தண்டனைக்கு ஆதரவான எண்ணத்தைக் கொண்டவர்களாக உள்ளனர். கொலைக் குற்றத்துக்காக மரண தண்டனை வழங்க வேண்டும் என 10 அமெரிக்கர்களில் 06 பேர் விரும்புகின்றனர் என்று புள்ளி விபரமொன்று கூறுகிறது.

அடுத்தவரின் உயிரைப் பறிப்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது என்று மரண தண்டனைக்கு எதிரானவர்கள் ஒரு பக்கம் கோசமிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இன்னொருபுறம், அடுத்தவரின் வாழ்வை அழிக்கும் வகையிலான பெருங் குற்றங்களைப் புரிகின்றவர்கள், எவ்வகையிலும் வாழ்வதற்குத் தகுதியற்றவர்கள் என்று, மரண தண்டனைக்கு ஆதரவானவர்கள் குரலெழுப்பி வருகின்றனர்.

குற்றங்கள் இல்லாத ஓர் உலகு உருவாக வேண்டும் என்பதே எல்லோரினதும் பெரு விருப்பாகும்.

நன்றி: ‘தமிழ் மிரர்’ பத்திரிகை (13 ஜனவரி 2016)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்