‘சிங்க லே’ விவகாரம், தட்டிக் கழிக்கும் விடயமல்ல: அமைச்சர் ஹக்கீம்

🕔 January 9, 2016

Hakeem - 976
– மப்றூக் –

முஸ்லிம் மக்களிடையே பீதியினை உருவாக்கி, அதனால் நன்மைகளை அனுபவித்த கூட்டத்தினர், ‘சிங்க லே’ என்கிற சுலோகத்தின் மூலம் மீண்டும் அதுபோன்ற பீதியினை உருவாக்கும் காரியங்களைச் செய்து பார்ப்பதற்கு முயற்சித்து வருவதாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரஊப் ஹக்கீம் குற்றம்சாட்டியுள்ளார்.

‘நேத்ரா’ தொலைக்காட்சி அலைவரிசையில், சிரேஷ்ட ஊடகவியலாளரும் இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபன செய்திச் சேவையின் தமிழ் பிரிவு பணிப்பாளருமான யூ.எல். யாக்கூப் நடத்தி வரும் ‘வெளிச்சம்’ எனும் நேரடி கலந்துரையாடல் நிகழ்வில் நேற்று வெள்ளிக்கிழமை கலந்து கொண்டபோதே, அமைச்சர் ஹக்கீம் மேற்படி குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

இந் நிகழ்வில் அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவிக்கையில்

“சிங்க லே எனும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ‘ஸ்டிக்கர்’ விவகாரத்தினை தட்டிக் கழிக்கும் ஒரு சாமான்ய விடயமாக எடுத்துக் கொள்ள முடியாது.

வாகனங்களில் மிகப் பகிரங்கமாக மேற்படி ‘ஸ்டிக்கர்’கள் ஒட்டப்பட்டுள்ளமையானது, இதைச் செய்வதற்கென்று ஒரு கும்பல், நாடு முழுவதிலும் ஆங்காங்கே இருப்பதனை அடையாளப்படுத்துகின்றது.

அதேபோன்று, முஸ்லிம்களின் வீட்டுச் சுவர்களிலும், வாயிற் கதவுகளிலும் ‘சிங்க லே’ என்கிற சுலோகத்தினை எழுதி, அதன் மூலம் ஒரு பீதி உணர்வினை ஏற்படுத்தலாமா என்று, அந்தக் கூட்டம் வெள்ளோட்டம் பார்க்கிறது.

மேற்படி விவகாரம் தொடர்பில் நாங்கள் விவஸ்தையில்லாமல் இருக்க முடியாது. இந்த விடயத்தினை அவதானமாகவும், பக்குவமாகவும் கையாள வேண்டியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் தற்போது உளவுத் துறையினர் உசார்படுத்தப்பட்டுள்ளார்கள். இந்த செயற்பாட்டினை முளையிலேயே கிள்ளி விட வேண்டும். இதை வளர விடுவது ஆபத்தானது.

இனங்களுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும் பிரச்சினைகள் வந்து விடக் கூடாது என்பதற்காக, கருத்து மற்றும் பேச்சுச் சுதந்திரம் போன்றவற்றினைக் கட்டுப்படுத்த முடியும். மனித உரிமை சாசனத்தில் இந்த விடயம் சொல்லப்பட்டுள்ளது’ என்றார்.

எனவே, இவ்வாறான விடயங்களில் கொஞ்சம் தீவிரமாகத் தலையிட வேண்டிய அவசியம் உள்ளது.

மேற்படி செயற்பாடுகளினால் மக்களிடையே பீதியினை உருவாக்கி, அதனால் நன்மைகளை அனுபவித்த கூட்டத்தினர், மீண்டும் அதனைச் செய்து பார்க்கலாமா என்று முயற்சிக்கின்றனர்.

ஆனாலும், இவ்வாறு செயற்படுகின்றவர்களுக்கு இப்போது அரசாங்கத்தின் ஆதரவுகள் எவையும் இல்லை” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்