தமிழ் அரசியல் கைதிகள் இன்று தொடக்கம் விடுதலை; பிரதமர் ரணில் உறுதி

🕔 November 11, 2015

Ranil - 0998மிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதனடிப்படையில், இன்று புதன்கிழமை தொடக்கம் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கும் செயற்பாடு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமது விடுதலையை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் இவ்விடயம் குறித்து தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன், நேற்று செவ்வாய்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தொடர்புகொண்டு வினவியுள்ளார்.

இதன்போதே, இன்று புதன்கிழமை தொடக்கம் பிணை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், கைதிகளின் பிணை கோரிக்கைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தின்போது, கைதி­களில் 32 பேரை நேற்று முன்தினம் திங்கட்கிழமை பிணையில் விடுவிப்பது என்றும் ,ஏனைய 30 பேரை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் பிணையில் விடுவிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இதனைவிட குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட கைதிகள் தொடர்பில் விசேட அமைச்சரவை உபகுழுவை நியமித்து நடவடிக்கைகளை எடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனாலும் கடந்த திங்கட்கிழமை 32 அரசியல்கைதிகள் பிணையில் விடுவிக்கப்படவில்லை. இந்த நிலையிலேயே இன்று முதல் கைதிகளுக்கு பிணை வழங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்