விசாரணைப் பொறிமுறைக்குரிய காலம் 1985 ஆம் ஆண்டிலிருந்து தொடங்க வேண்டும்; மு.கா. பேராளர் மாநாட்டில் தீர்மானம்

🕔 November 8, 2015

Jawad - 01
– முன்ஸிப் –

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை புலன்விசாரணை செய்வதற்கும், அவர்களுக்கு நீதிவழங்குவதற்கும் உருவாக்கப்படும் பொறிமுறைக்கு குறைந்தபட்சம் 1985 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் வரையிலான காலப்பகுதி உள்ளடக்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டமக்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறல் சம்பந்தமாக, ஏற்றுக் கொள்ளக் கூடியதும் சுயாதீனமான பொறிமுறைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதாக வழங்கிய உறுதிமொழிகளை தாம் வரவேற்பதாகவும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

மு.காங்கிரசின் 26 ஆவது பேராளர் மாநாடு, நேற்று சனிக்கிழமை கண்டி, பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ மண்டபத்தில், அந்தக் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, பேராளர் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் ஒன்றாக, மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மு.காங்கிரசின் பிரதிப் பொருளாளரும், கிழக்கு மாகாணசபையின் உறுப்பினருமான கே.எம்.ஜவாத், பேராளர் மாநாட்டின் தீர்மானங்களை அங்கு அறிவித்தார்.

மு.காங்கிரசின் மேற்படி 26 ஆவது பேராளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன

1. இலங்கை வாழ் சகல பிரஜைகளும், சமூகங்களும் திருப்திப்படும் வகையிலான அதிகாரப் பகிர்வினையும், கௌரவமான சகவாழ்வினையும் உறுதிப்படுத்தக் கூடிய அரசியல் தீர்வின் அவசியத்தை, மு.காங்கிரசின் 26 ஆவது பேராளர் மாநாடு வலியுறுத்துவதோடு, இத்தீர்வை செயற்படுத்துவதற்குத் தேவையான அனைத்து அரசியல் அமைப்புச் சீர்திருத்தங்களையும் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் வாக்குறுதி வழங்கப்பட்டமைக்கு இணங்க, நிறைவேற்றுமாறு இப்பேராளர் மாநாடு அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

2. இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டவாறு சகல மாகாணசபைகளுக்கும் உரிய அதிகாரங்களை முழுமையாக அமுல்படுத்துவதற்கு வழிவகுக்குமாறு அரசாங்கத்தினை மாநாடு வலியுறுத்துகிறது.

3. யுத்தம் முடிந்து 06 ஆண்டுகள் கடந்தும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்க்கப்பட்டு, நீண்டகாலமாக இடம்பெயர்ந்து அகதிகளாக வாழுகின்ற மக்கள் இதுவரை மீள்குடியேற்றப் படாமைக்கு எமது விசனத்தைத் தெரிவிக்கின்றோம். இதேவேளை, 1990ஆம் ஆண்டு இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை, தங்கள் பூர்வீக இடங்களில் மீளக்குடியேற்றுவதற்கு பொருத்தமான தேசிய மீள்குடியேற்றக் கொள்கையொன்றினை உடனடியாக நிறைவேற்றி நடைமுறைப்படுத்துமாறு, இம்மாநாடு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றது. இதுதொடர்பில், அழிந்துகிடக்கின்ற பொது உட்கட்டமைப்பு வசதிகளை சீர் திருத்தி சுயமான மீள்குடியேற்றத்தினை ஊக்குவிப்பதோடு அவர்களின் பொருளாதார, சமூக மற்றும் கலாசாரங்களைப் பேணுவதற்கான உரிமைகளை உறுதிப்படுத்துமாறு, இம்மாநாடு அரசாங்கத்தை வலியுத்துகிறது.

4. பாரியளவில் இடம்பெயர்க்கப்பட்டு தங்களின் பூர்வீக இடங்களில் குடியேற முடியாமல் இலங்கைக்கு உள்ளேயும், வெளியேயும் அகதிகளாக வாழுகின்ற தமிழ் மக்களின் துயரங்களில் நாமும் பங்குகொள்கிறோம். அவர்களை உடனடியாக சகல வசதிகளுடனும் அவர்களுக்குரிய பூர்வீக இடங்களில் குடியேற்ற உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இம்மாநாடு அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

5. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும், அவ் ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களையும், அதற்கான தீர்வுகளையும் உடனடியாக அமுல் நடத்துமாறு அரசாங்கத்தை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

6. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி, பொறுப்புக் கூறல் சம்பந்தமாக ஏற்றுக் கொள்ளக் கூடியதும், சுயாதீனமான பொறிமுறைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதாக வழங்கப்பட்ட உறுதிமொழிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வரவேற்கின்றது.

7. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை புலன்விசாரணை செய்வதற்கும், அவர்களுக்கு நீதிவழங்குவதற்கும் உருவாக்கப்படும் பொறிமுறைக்கு குறைந்தபட்சம் 1985 தொடக்கம் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் வரையிலான காலப்பகுதி உள்ளடக்கப்படவேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

8. வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் பலதரப்பட்ட காணி உரித்துப் பிரச்சினையை அவசரமாகத் தீர்த்துவைப்பதற்கு, வெளிப்படைத்தன்மை கொண்ட பொறிமுறையொன்றினை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

9. கல்முனை,சம்மாந்துறை மற்றும் பொத்துவில் தொகுதிகள் உள்ளடக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களுக்கான கரையோர மாவட்டக் கோரிக்கையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்துகிறது.

10. சிலாபத்துறை, கருமலையூற்றுப்பள்ளி மற்றும் அஷ்ரப்நகர் உள்ளிட் பிரதேசங்களில் பாதுகாப்புப்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் உரித்துக் காணிகளையும், அங்குள்ள அரச அனுமதிப்பத்திர உரித்துக் காணிகளையும் இழந்த முஸ்லிம்களுக்கு, மீண்டும் அக்காணிகளின் உரிமைகளை வழங்குவதோடு, அவ்வுடமைகள் மீளளிக்கப்பட வேண்டுமெனவும் இம்மாநாடு அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

11. மதம் சார்ந்த வன்முறைக்கு உட்படுத்தப்பட்டவர்களை சுதந்திரமாக தங்களின் மத அனுஸ்டானங்களைப் பேணுவதற்கும், பேச்சுரிமைகளை வழங்குவதற்கும், நீதி வழங்குவதற்கும் தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென அரசாங்கத்தை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

12. இந் நாட்டில் வாழும் சகல இன மக்களுக்கும் அரசியலமைப்புச் சட்டத்தில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளவாறு, மத, கலாசார, மொழி சார்ந்த உரிமைகளை அனுபவிப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

13. குற்றப்பத்திரிகை வழங்கப்படாமல் தடுப்புக் காவலிலுள்ள சகல தமிழ் பேசும் கைதிகளையும் விடுவிக்க வேண்டுமென இம்மாநாடு அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

14. புனித நகரான ஜெரூசலத்தில் ஒருதலைப்பட்சமாக இஸ்ரவேலர்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் சர்வதேச சட்டங்களுக்கு முரணான அனைத்துச் செயற்பாடுகளையும் இப் பேராளர் மாநாடு வன்மையாகக் கண்டிப்பதோடு, அவற்றை உடனடியாக நிறுத்தவேண்டுமெனவும் இப்பேராளர் மாநாடு வலியுறுத்துகிறது.SLMC - Kandy - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்