வடக்கு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரிவிட்டு, அவர்களை புறக்கணிப்பது நல்லதல்ல; மு.கா. தலைவர் ஹக்கீம்

🕔 October 31, 2015

North muslims - 07
வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனையொட்டி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில், மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்.

டக்கிலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதற்கு இந்த வட்ட மேசைக் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளோம். 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ம் திகதி அங்கிருந்து முழு முஸ்லிம் சமூகத்தினரும் விடுதலை புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள்.

போரினால் பாதிக்கப்பட்ட எல்லா மக்களினதும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு பற்றி பேசப்படுகின்ற இக்காலகட்டத்தில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் கடந்த 25 ஆண்டு காலப்பகுதியில் அனுபவித்து வரும் துன்ப துயரங்களைப்பற்றியும் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டிய தேவை இன்றியமையாதது.

அடக்கி வைக்கப்பட்டுள்ள துயரங்கள்

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி எல்லா தீமைகளும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு விட்டதாக அநேகர் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால், நல்லவை இன்னும் ஆரம்பமாக வேண்டி இருக்கின்றது. ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து கொள்கை வகுப்பானவர்களான எங்களை பொறுத்தவரை காலம் விரயமாகி விட்டது. கடந்த அரசாங்கத்தின் இழுத்தடிப்பும், ஈடுபாடின்மையும் எமது இடம்பெயர்ந்த மக்களின் அவசிய தேவைகளை நிறைவேற்றுவதில் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.
உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளாக்கப்பட்ட முஸ்லிம்களின் அவல நிலையை நன்கறிந்தவர்களும் உணர்ந்தவர்களும் இந்த கூட்டத்துள் அநேகர் உள்ளனர்.

இங்கு வந்திருக்கும் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் அனுபவிக்கும் துயரங்களையும், அவர்களுக்கு தமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு இருக்கும் தடைகளையும் தங்களுக்குள் அடக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இங்கு வருகை தந்துள்ள வளவாலர்கள், அமைச்சர்கள் மற்றும் இராஜ தந்திரிகள் புரிந்து கொள்வதற்கு வாய்ப்பாக இந்நிகழ்வை ஆங்கிலத்தில் நடாத்துவதே சால பொருத்தமானது என்பதால் தமிழில் இதனை நடாத்துவதற்கு இயலவில்லை. வட்ட மேசை கலந்துரையாடலாக இதனை ஏற்பாடு செய்திருந்தாலும், இதைத் தொடர்ந்து பதவியேற்றுள்ள புதிய அரசாங்கம், ஜெனிவா பிரேரணையின் பின்னரான காலப்பகுதியில் ஒட்டுமொத்தமாக வடகிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த அனைத்து சமூகங்களையும் சேர்ந்த எல்லா அகதிகளும் தங்களது பூர்வீக இடங்களில் மீண்டும் சென்று குடியேறுவதற்கான ஒரு நிதித்திரட்டல் மாநாடொன்றை நடாத்துவதற்காக தயாராகி வருகின்றது.

அந்த நிலையில் இடம்பெயர்ந்தவர்களுடைய தேவைப்பாடுகள் சம்பந்தமான ஒரு மதிப்பீடு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுவதற்கு ஆயத்தமாக இருக்கின்ற சூழ்நிலையில், வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுடைய மீள் குடியேற்றம் சம்பந்தமான முயற்சியில் இருக்கின்ற ஒரு சில வித்தியாசமான பரிமாணங்களை கொள்கை வகுப்பாளர்கள் உளம் கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான், நாங்கள் இவ்வாறான கலந்துரையாடலை இன்றைய நாளில், பலவந்தமான ஒரு வெளியேற்றம் நடந்து 25 ஆண்டு நிறைவாண்டிலேயே அடையாள ரீதியாக ஆரம்பித்து வைப்பது என்ற தீர்மானத்துக்கு வந்திருக்கின்றோம்.

அடையாளம் இழக்கும் நிலை

வட மாகாணத்தின் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மீள் குடியேற்றத்துக்கான தாகத்தினால் 25 ஆண்டுகள் தவித்து கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் கண்ட பயன் ஒன்றுமில்லை. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றார்கள். வறுமையால் வாடுகின்றார்கள். மறக்கப்பட்ட மக்களாக ஆகிவிட்டார்கள். யுத்தத்தின் பின்னரான இலங்கையில் அடையாளமில்லாத மக்களாக அவர்கள் கருதப்படும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது.

வடகிலிருந்து 60,000க்கும் மேற்பட்ட மக்கள் வீடற்றவர்களாகவும், உடமைகளை பரிகொடுத்தவர்களாகவும் வெளியேற்றப்பட்ட பொழுது, அதனை விடுதலை புலிகளின் தத்துவ ஆசிரியரான அன்ரன் பாலசிங்கம் – பின்னர் பெருந்தவறு எனக் குறிப்பிட்டதை சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். அவர் குறிப்பிட்டது ஒரு போர்க்குற்றம் என்பதில் சந்தேகமில்லை.

புத்தளம் அரசாங்க செயலக இணையத்தளத்தில், புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவிலும், அடுத்துள்ள இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், ஆணமடுவ பிரதேச செயலாளர் பிரிவின் ஒரு பகுதியிலும் ஒக்டோபர் 1990இல் குடியமர்த்தப்பட்டுள்ளது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் தஞ்சம் வழங்கிய உள்ளுர் சமூகத்தின் நிலங்களையும் வளங்களையும் பகிந்து கொண்டவை பற்றியும் கூறுகின்றது.

யுத்தம் முடிவடைந்த பின்னரும் இடம்பெயர்ந்த மக்கள் பெரும்பாலானோர் புத்தளம் பிரதேசத்திலேயே தங்கியிருக்க தீர்மானித்தனர். அவர்கள் அதனூடாக தங்களுக்கு தஞ்சம் அளித்த மக்களுக்கு பிரச்சினைகளை உண்டு பண்ணுவதாகவும கூறப்பட்டது. இது புத்தளம் மாவட்ட செயலகத்தின் சூத்திரதாரி ஒருவரினால் வடிவமைக்கப்பட்டது. இவ்வாறான வலைதளத்தில் உள்ள தகவல் யுத்த வெற்றியை ஐந்தாண்டு நிறைவிலும் நிலைமையை சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது.

இலங்கை தேசம் இப்பொழுது ஒரு புதிய யதார்த்தத்தை நோக்கி விழித்தெழுந்து விட்டது. இது யுத்தத்தின் பின்னரான மீள் எழுச்சியின் வெளிப்பாட்டை காட்டி நிற்கின்றது. அது ஒரு தவறை செப்பனிடுவதாகவும், புண்ணை ஆற்றும் முயற்சியாகவும், சிதைந்து போன சமூகத்தை மீண்டும் செம்மைப்படுத்துவதாகவும் உள்ளது.

விடிவைத் தராத, யுத்தத்தின் முடிவு

வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தைப் பொறுத்தவரை அவர்கள் தமது முன்னைய பூர்வீக வதிவிடங்களுக்கு மீளச் செல்வது பல சிக்கல்களை தோற்றுவித்துதான் இருக்கிறது. அவர்கள் திரும்பச் செல்வதில் தயக்கமும், தாமதமும் காட்டுவதற்கு உரிய காரணங்கள் உள்ளன. அவர்கள் ஒட்டுமொத்தமாக 1990 ஒக்டோபரில் விடுதலை புலிகளால் வெளியேற்றப்பட்டார்கள். ஒலிபெருக்கி மூலம் வெளியேறுமாறு விடுதலை புலிகளால் அறிவிக்கப்பட்டது. அதனை மீறுபவர்களுக்கு மரணம்தான் பரிசு என்று தெரிவிக்கப்பட்டது. 48 மணிநேரங்களுக்குள் வெளியேறுமாறு பணிக்கப்பட்டது.

அங்கிருந்து வெளியேற்றப்பட்டதிலிருந்து தமது சொந்த நாட்டிலேயே புதிய பரம்பரையொன்று அகதிகள் என்ற நிலையில் வளர்ந்து வந்தது. யுத்தத்தின் முடிவு அவர்களுக்கு விடிவை கொண்டுவரவில்லை. வடங்கில் பூர்வீக வதிவிடங்களுக்கு திரும்பிச் சென்ற சிலர் அங்கு தமக்குச் சொந்தமான இடங்களில் வேறு மக்கள் குடியமர்ந்து வாழ்வதை கண்டார்கள். அவர்கள் அங்கு வந்து சேர்ந்த அகதிகளாகவே கருதப்பட்டார்கள்.

இந்த சூழ்நிலையில் வீடற்ற, அடிப்படை வசதிகள் அற்ற நிலைமையில் வளரும் குழந்தைகளின் கதி என்ன? பிறப்புச் சான்றிதழ்கள் அவர்களை அகதிகளாக அடையாளப் படுத்துகின்றன. அவர்கள் தங்களது சொந்த மக்களாலேயே அநீதிக்குள்ளாகின்றார்கள்.

இடம்பெயர்ந்து மீளச்செல்லும் மக்கள் பலவிதமான பாரதூரமான நெருக்குதல்களுக்கு உள்ளாகின்றார்கள். கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் போன்றவற்றில் அவர்கள் நெருக்கடிகளை சந்திக்கின்றார்கள்.

அவர்கள் மனித உரிமை பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள். மீண்டு செல்வதற்கான உரிமை மறுக்கப்படுவதற்கான நிலைமைக்குள்ளாகின்றார்கள். அவர்கள் தஞ்சம் அடைந்த இடத்திலோ, சொந்த பிறப்பிடத்திலோ உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக அல்லலுறுகிறார்கள். இவை எல்லாம் பாராதூரமான மனித அவலங்கள்.

இவை பற்றி கற்றறிந்த பாடங்கள் ஆணைக்குழு அறிக்கையில் பின்வருமாறு காணப்படுகின்றது. ‘முன்னாள் யாழ்ப்பாண பிரதிமேயரின் சாட்சியத்தின் படி, யாழ்ப்பாண முஸ்லிம்கள் ஜின்னா மைதானத்துக்கு கொண்டு வரப்பட்டனர். மாகாணத்தை விட்டு வெளியேறிச் செல்ல மறுத்தால், மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அவர்களது எல்லா அசையும் ஆதனங்களும் கைப்பற்ற பட்டன. 2006 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அறிக்கையில் 63,145 வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் புத்தளம் பிரதேசத்தில் 145 முகாம்களில் வசிப்பதாக சாட்சியங்களின் அடிப்படையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் பலர் கொழும்பைச் சூழவும் நாட்டின் ஏனைய பாகங்களிலும் வசிக்கின்றனர்.

சாட்சியமளித்த பலர் பிரச்சினைகள் தீர்ந்து விட்டதால் மீள செல்வதற்கு ஆர்வமாக இருப்பதாக கூறப்பட்டது. உடல் ரீதியாக, பௌதீக ரீதியாக மீளா விட்டாலும் தமது நிலபுலங்களையும் சொத்துக்களையும் நியாயப்படுத்துவதில் அவர்களில் பலர் நாட்டம் காட்டினர். காணி சொத்து பற்றிய முஸ்லிம்களின் கோரிக்கை மிகவும் சிக்கல் நிறைந்ததென கற்றறிந்த பாடங்கள் ஆணைக்குழு அடையாளம் கண்டது. அப்போதைய அரசாங்கம் கற்றறிந்த பாடங்கள் ஆணைக்குழுவின் அறிக்கையை ஜீரணித்துக் கொள்ளா விட்டாலும், அந்த ஆணைக்குழுவின் சமநிலையான அணுகுமுறையை நாம் பாராட்ட வேண்டும்.

ஏன் திரும்பி வந்தீர்கள்

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் பல்வேறு தொழில் துறைகளில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களது புறநகர் கிராம வாழ்விடங்களில் அவர்கள் விவசாயத்திலும் மீன்பிடியிலும் ஈடுபட்டு இருந்தார்கள். முஸ்லிம்களின் காணிகள் அவர்கள் நடத்திய பண்ணைகள் வேறு நபர்களால் கையகப் படுத்தப்பட்டிருந்தன. இதனை விடுதலைப்புலிகள் செயல்பாட்டாளர்களும், அவர்களது அனுதாபிகளும் கையாண்டதாக கற்றறிந்த பாடங்கள் ஆணைக்குழு அறிக்கை குறிப்பிட்டிருந்தது. யாழ்ப்பாண மக்கள் முஸ்லிம்களின் மீள் வருகையை வரவேற்பதாக இல்லை என்றும் அதில் காணப்பட்டது. அதன்படி தனியொரு சமூதாயத்துக்குரிய இடமாக, அது மாறியிருந்தது.

திரும்பிச்சென்ற முஸ்லிம்களிடம் அங்கிருந்த அவர்களது அயல்வாசிகள் ‘ஏன் நீங்கள் திரும்பி வந்தீர்கள்?’ என்று கேட்டார்கள் என அந்த அறிக்கை கூறுகின்றது. அந்த அறிக்கை வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் சாட்சியங்களை தொகுத்து வழங்கியிருக்கின்றது. முஸ்லிம்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பி செல்வதற்குரிய வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும்அதில் குறிப்பிட்டிருக்கிறது.

1990ஆம் ஆண்டின் இன சுத்திகரிப்பு மீண்டும் தலைகீழாக மாறிவிட்டது என்பதை உறுதி படுத்துவதற்கு, அரசாங்கம் இந்த கைங்கரியத்தை செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கை கூறுகின்றது.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை கருத்தில் கொண்டு, இந்த நீண்ட கால பிரச்சினைக்கு நிரந்தமான தீர்வு காண்பதற்கான வழிவகைகளில் கவனம் செலுத்த வேண்டும் என கற்றறிந்த பாடங்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிடுகின்றது. இந்த உள்ளக இடம்பெயர்ந்த மக்களை மீள குடியேற்றுவதற்காக, ஓர் அரச கொள்கையினூடாக இதனைச் சாதிக்கலாம் என ஆணைக்குழு கருதுகின்றது. அத்துடன் அவர்களை ஏற்றுக்கொண்ட சமூகத்தோடு ஒன்றுபட்டு வாழ்வதற்கான சுமூகமான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவ்வறிக்கை கூறுகின்றது.

இப்பொழுது திரும்பிச் செல்வதா அல்லது முன்னர் சென்று குடியேறிய இடத்தில் வாழ்க்கையை தொடருவதா என்ற சிக்கலான நிலைமைக்கு இடம்பெயர்ந்த முஸ்லிம் சமூகம் ஆளாகியிருக்கின்றது. வதிவிட உதவி, பொருளாதார வசதி என்பதை ஏற்படுத்தி கொடுப்பது முறையான அரச கொள்கையினால் அன்றி சாத்தியமாகும் சூழ்நிலை இல்லை. இந்த எரியும் பிரச்சினை அதனை மையப்படுத்துகிறது.

ஆறாத புண்

யுத்தம் முடிந்து 06ஆண்டுகள் ஆகிவிட்டன. புண்கள் சீழ் கட்டி இருப்பதால் ஆறும் நிலை தென்படவில்லை. இது உயிர்வாழும் ஓர் இனத்தின் அவலக்குரலாக ஒலிக்கின்றது. இதனை ஒரு கவிஞர் கவிதையாக்கியிருக்கின்றார். 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் யுத்தம் முடிந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் மீள் குடியேற விரும்பினார்கள். ஆனால், இன்று 600க்கும் குறைந்த குடும்பங்களே யாழ்நகரில் மீள்குடியேறியுள்ளன. நான் யாழ்ப்பாணத்தை மட்டும்தான் இங்கு சுட்டி காட்டியிருக்கின்றேன். சமூகபொருளாதார காரணிகளும் ஏனைய இடையூறுகளும் அவர்களுக்கு உள்ளன.

உலகம் அசைந்து செல்கிறது. வடக்கு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரிவிட்டு, அவர்களை புறக்கணிப்பது நல்லதல்ல. நல்லிணக்கம் முக்கியமானது. வார்ப்புகளால் பாலங்களை அமைப்பதைவிட, உள்ளங்கள் இணைவினால் அமைக்கப்படும் பாலம் உறுதியானது. உண்மையும் நீதியும், மன்னிப்பும் நல்லிணக்க நடைமுறைக்கு இன்றியமையாதவை.

நேற்று ஜனாதிபதி ஒரு சர்வசமய மாநாட்டை கூட்டியிருக்கிறார். அதனூடாக ஜெனீவா பிரேரணையின் அடிப்படையில் ஒரு கருணை மன்றத்தின் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

தொடர்பான செய்தி: வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பில், வெட்கித் தலை குனிவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்