பலம் அறிதலுக்கான தேர்தல் களம்

🕔 October 28, 2015

Article - 32
ட்சி மாற்றங்கள் அநேகமாக உள்ளுர் மட்டங்களிலிருந்துதான் ஆரம்பமாகும். உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகளைக் கைப்பற்றிக் கொள்ளும் அரசியல் அணிதான், மத்தியிலும் ஆட்சியைப் பிடித்துக் கொள்ளும்.
ஆனால், இம்முறை நிலைமை தலைகீழ். உள்ளுராட்சி சபைகளில் அநேகமானவை ஐ.ம.சு.கூட்டமைப்பின் ஆட்சியின் கீழ் இருக்;கும் நிலையில், மத்திய அரசாங்கத்தினை ஐ.தே.கட்சி கைப்பற்றியுள்ளது.

இப்போது, உள்ளுராட்சி சபைகளைக் கைப்பற்றிக் கொள்ளும் அரசியல் யுத்தத்துக்காக, கட்சிகள் அனைத்தும் காத்துக் கொண்டிருக்கின்றன. ஆளுந்தரப்பாக ஐ.தே.கட்சி உள்ளதால், பெரும்பான்மையான உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றுவதற்குரிய எத்தனங்களை அந்தக் கட்சி எடுக்கும்.

இதேவேளை, ஐ.ம.சு.கூட்டமைப்பும் இந்த ஆட்டத்தில் ஒரு கை பார்க்காமல் விடாது. ஆனால், உள்ளுராட்சி தேர்தல்களில் மஹிந்த தரப்பு தனித்துக் களமிறங்கலாம் என்கிற பேச்சு பரவலாக உள்ளது. அப்படி நடந்தால். ஐ.தே.க.வின் காட்டில் நல்ல மழை பெய்யும்.

இந்த நிலையில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற ஒரேயொரு மாவட்டமான அம்பாறையில், எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தல் எப்படியிருக்கும் என்கிற எதிர்பார்ப்பும், பேச்சுக்களும் இப்போதே தொடங்கி விட்டன.

அம்பாறை மாவட்டம் என்பது முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தளமாகும். இந்த மாவட்டத்தில் எந்தக் கட்சி கோலோச்சுகின்றதோ, அதுதான் முஸ்லிம்களின் கட்சி என்கிறதொரு தோற்றப்பாடும் உள்ளது. அதனால், இங்குள்ள உள்ளுராட்சி சபைகளைக் கைப்பற்றிக்கொள்வதில் முஸ்லிம் கட்சிகளுக்கிடையில் பலத்த போட்டி நிலவி வருகிறது.

1994 ஆம் ஆண்டு உள்ளுராட்சி தேர்தல்கள் நடைபெறுவதற்கான திகதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்திருந்தன. அப்போது, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள 06 உள்ளுராட்சி சபைகள் இருந்தன. இப்போது 08 சபைகளாக அதிகரித்துள்ளன.

மு.காங்கிரஸ் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த காலமது. அந்தக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

அப்போது, மு.கா.வுக்கு சவாலாக முஸ்லிம் பகுதிகளில் ஐ.தே.கட்சிதான் அரசியல் செய்து கொண்டிருந்தது. இந்த நிலையில், மு.கா. தலைவர் அஷ்ரப் அவர்கள் அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலுக்கான பிரசார மேடையொன்றில் சவாலொன்றினை விடுத்தார். அம்பாறை மாவட்டத்தில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள 06 உள்ளுராட்சி சபைகளையும் மு.கா. கைப்பற்றும். அப்படியில்லாமல் 06 சபைகளில் ஒன்றிலாவது மு.கா. தோற்று விட்டால், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை ராஜிநாமாச் செய்து விடுவதாக அஷ்ரப் பிரகடனம் செய்தார்.

இதனையடுத்து, அம்பாறை மாவட்டத்தில் எல்லாத் தரப்பு மேடைகளிலும் அஷ்ரப் அவர்களின் சவால் பற்றிய பேச்சாகவே இருந்தன. இந்தச் சவாலானது எல்லாத் தரப்பினரையும் உற்சாகப்படுத்தியது. தன்னுடைய சவாலில் தலைவர் தோற்று விடக் கூடாது என்று மு.காங்கிரஸினர் மிகத் தீவிரமாக பிரசாரம் செய்தனர். அதேபோன்று, ஐ.தே.கட்சினருக்கு அஷ்ரப் அவர்களின் சவாலானது, ஒரு வகையான கௌவரப் பிரச்சினையை உருவாக்கியது. அதனால், அவர்களும் மடித்துக் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி வேலை செய்தனர்.

ஆனாலும், மு.கா.வின் ஸ்தாகத் தலைவர் அஷ்ரப் அவர்கள் தன்னுடைய சவாலில் தோற்றும் போனார். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த 06 உள்ளுராட்சி சபைகளில் 04 சபைகளை மட்டுமே மு.காங்கிரஸால் கைப்பற்ற முடிந்தது. பொத்துவில் மற்றும் நிந்தவூர் ஆகிய பிரதேச சபைகளை ஐ.தே.கட்சி கைப்பற்றியது.

எனவே, தன்னுடைய சவாலுக்கிணங்க, மு.கா. ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் அவர்கள் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமாச் செய்தார். இதனால், ஏற்பட்ட பதவி வெற்றிடத்துக்கு, அப்போது சம்மாந்துறையைச் சேர்ந்த தொப்பி முகைதீன் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளை வெற்றி கொள்வதில், முஸ்லிம் கட்சிகள் காட்டும் ஈடுபாட்டினை விபரிப்பதற்காகவே, மேலுள்ள சம்வத்தினைப் பதிவு செய்தோம். அஷ்ரப் அவர்கள் தன்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமாச் செய்து சுமார் ஆறு மாதங்களுக்குள் பொதுத் தேர்தல் நடைபெற்றதும், அதில் அஷ்ரப் அவர்கள் வெற்றி பெற்று அமைச்சரானதும் வேறு கதையாகும்.

அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி சபைகளைக் கைப்பற்றுவதில் அப்போதே அந்தளவு போட்டியிருந்ததென்றால், இப்போதைய நிலையினை நினைத்துப் பாருங்கள். அப்போது, மு.கா.வுக்குப் போட்டியாக ஐ.தே.கட்சி மட்டும்தான் இருந்தது. ஆனால், இப்போது ஐ.தே.கட்சியோடு, ஐ.ம.சு.கூட்டமைப்பு, முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் மற்றும் அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அ.இ.ம.காங்கிரஸ் என்று ஏகப்பட்ட போட்டியாளர்கள் களத்தில் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் முட்டி மோதும் களம் எதிர்வரும் மார்ச் மாதம் வருகிறது.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள உள்ளுராட்சி சபைகளாக பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை இறக்காமம், சம்மாந்துறை, நிந்தவூர் ஆகிய பிரதேச சபைகளும், அக்கரைப்பற்று மற்றும் கல்முனை ஆகிய மாநகர சபைகளும் உள்ளன. அக்கரைப்பற்று மாநகர சபையும், இறக்காமம் பிரதேச சபையும் அண்மையில்தான் உருவாக்கப்பட்டன. ஆக, இந்த மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள 08 உள்ளுராட்சி சபைகள் இருக்கின்றன.

மேலுள்ள உள்ளுராட்சி சபைகளில், கல்முனை மாநகரசபை தவிர்ந்த ஏனைய 07 சபைகளும் கலைக்கப்பட்டு விட்டன. இவற்றில் பொத்துவில் பிரதேச சபை மு.கா.வின் அதிகாரத்தின் கீழ் இருந்தது. இந்த சபையில் மு.கா. 06 ஆசனங்களையும், ஐ.ம.சு.கூட்டமைப்பு 02 ஆசனங்களையும், இலங்கை தமிழரசுக் கட்சி 01 ஆசனத்தையும் வென்றிருந்தது. அக்கரைப்பற்று பிரதேச சபையில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் 06 ஆசனங்களையும், மு.கா. 01 ஆசனத்தையும் கைப்பற்றியது. இதுபோலவே, அக்கரைப்பற்று மாநகரசபையில் தேசிய காங்கிரஸ் 08 ஆசனங்களையும், மு.கா. 01 ஆசனத்தினையும் வென்றிருந்து.

அட்டாளைச்சேனை பிரதேச சபையினையும் மு.காங்கிரஸ்தான் கைப்பற்றியிருந்தது. இங்கு மு.கா. 07 ஆசனங்களையும், ஐ.ம.சு.கூட்டமைப்பு 02 ஆசனங்களையும் வைத்திருந்தன. நிந்தவூர் பிரதேச சபையில் மு.கா. 06 உறுப்பினர்களையும், ஐ.ம.சு.கூட்டமைப்பு 01 உறுப்பினரையும் வென்றமையினால், அந்த சபை மு.கா.வினுடைய அதிகாரத்தின் கீழ் வந்தது. இதேபோன்று இறக்காமம் பிரதேச சபையையும் மு.காங்கிரஸ்தான் கைப்பற்றியது. இங்கு மு.கா.வுக்கு 05 ஆசனங்களும், ஐ.ம.சு.கூட்டமைப்புக்கு 02 ஆசனங்களும் இருந்தன.

கல்முனை மாநகரசபை இன்னும் கலைக்கப்படவில்லை. அங்கு மொத்தமாக 19 உறுப்பினர்கள் உள்ளனர். மு.கா.வுக்கு 11 உறுப்பினர்களும், தமிழரசுக் கட்சிக்கு 04 உறுப்பினர்களும், ஐ.ம.சு.கூட்டமைப்புக்கு 03 உறுப்பினர்களும் உள்ள நிலையில் ஐ.தே.கட்சி சார்பில் ஒரு உறுப்பினர் இருக்கின்றார். அந்த வகையில், கல்முனை மாநகரசபை மு.கா.வின் ஆட்சியின் கீழ் உள்ளது.

இந்த நிலையில், சம்மாந்துறை பிரதேசசபையினை கடந்த முறை ஐ.ம.சு.கூட்டமைப்பு கைப்பற்றியிருந்தது. அங்கு ஐ.ம.சு.கூட்டமைப்பின் 05 உறுப்பினர்களும், மு.கா.வின் 03 உறுப்பினர்களும், ஐ.தே.கட்சியின் சார்பில் 01 உறுப்பினரும் இருந்தனர்.

ஆக, அம்பாறை மாவட்டத்திலுள்ள 08 உள்ளுராட்சி சபைகளில் 05 சபைகளை மு.கா.வும், இரண்டு சபைகளை அதாஉல்லாவின் தேசிய காங்கிரசும், ஒரு சபையினை ஐ.ம.சு.முன்னணியும் கடந்தமுறை கைப்பற்றியது.

ஆனால், வருகின்ற உள்ளுராட்சி தேர்தலில் நிச்சமாக மாற்றங்கள் நடைபெறும் என்பது மட்டும் உறுதி.

மு.காங்கிரசின் ஆளுகையிலிருந்த உள்ளுராட்சி சபைகளை வேறு கட்சிகள் கைப்பற்றுவதற்கான சாத்தியங்கள் பெரிதாக இல்லை. நிந்தவூரிலும், கல்முனையிலும் பைசால் காசிம் மற்றும் எச்.எம்.எம் ஹரீஸ் ஆகியோர் மு.கா.ங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், பிரதியமைச்சர்களாவும் உள்ளனர். மேலும், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் மு.கா. உறுப்பினரான கல்முனை ஜவாத், ஒரு இடைவெளியின் பின்னர் கடந்த வாரம் மீண்டும் கிழக்கு மகாண சபையின் உறுப்பினராகியுள்ளார். இந்த நிலையில், மேற்படி இரண்டு பிரதேசங்களின் உள்ளுராட்சி சபைகளையும் மு.கா. இலகுவாகக் கைப்பற்றிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோன்று, அட்டாளைச்சேனை பிரதேச சபையையும் மு.கா. கைப்பற்றுவதில் சிக்கல்கள் இருக்காது. காரணம், அந்தப் பிரதேச சபையை மு.கா. தவிர வேறு எந்தக் கட்சியும் இதுவரை கைப்பற்றியது கிடையாது. இதுதவிர, கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர் அட்டாளைச்சேனையில் இருக்கின்றார். இந்தக் கட்டுரையை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் போது, கிழக்கு மாகாணசபையின் சுகாதார அமைச்சராக பெரும்பாலும் நசீர் சத்தியப் பிரமாணம் செய்திருப்பார். எனவே, அட்டாளைச்சேனை பிரதேச சபையினை வென்றெடுப்பதும் மு.கா.வுக்கு பிரச்சினையாக இருக்காது.

இந்த நிலையில், சம்மாந்துறை பிரதேச சபையினை கடந்த முறை மு.கா. கைப்பற்றத் தவறியது. எனவே, வரும் தேர்தலில் அச் சபையினை மு.கா. வென்றெடுக்குமா என்கிற கேள்வி உள்ளது. தற்போது அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ள எம்.ஐ.எம். மன்சூர் சம்மாந்துறையைச் சேர்ந்தவர். மு.காங்கிரஸ்காரர். சம்மாந்துறை உள்ளுராட்சித் தேர்தலில் கடந்தமுறை மன்சூர் போட்டியிட்டிருந்த போதிலும், அந்த சபையை மு.கா.வால் கைப்பற்ற முடியவில்லை. ஆனால், எதிர்வரும் தேர்தலில் சம்மாந்துறை பிரதேச சபையினை மு.கா. கைப்பற்றியே ஆகவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு அம்பாறை மாவட்ட மு.கா. ஆதரவாளர்களிடம் உள்ளது. காரணம், சம்மாந்துறையில் மு.கா. சார்பாக எம்.ஐ.எம். மன்சூர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ள அதேவேளை, அப் பிரதேசத்தில் மு.கா.வின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. எனவே, மு.கா. சார்பில் சம்மாந்துறையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும், மாகாணசபை உறுப்பினரையும் வைத்துக்கொண்டு அங்குள்ள பிரதேச சபையினை மு.கா. கைப்பற்றாமல் விடுவதென்பது அசாதாரணமானதொரு முடிவாகவே அமையும்.

இருந்தபோதும், இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் அ.இ.ம.காங்கிரசின் சார்பில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றவர்களில் ஒருவரான, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில் சம்மாந்துறையைச் சேர்தவராவார். இவர், அல்லது இவர் சார்பான நபர்கள் எதிர்வரும் சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில் அ.இ.மு.காங்கிரஸ் சார்பாக நிச்சயம் போட்டியிடுவார்கள். இந்த நிலையில், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளராக பதவி வகித்த ஏ.எம்.எம். நௌசாத், எதிர்வரும் சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில், எந்த அணி சார்பில் போட்டியிடுவார் என்பது கவனத்துக்குரிய விடயமாக அமையும். நௌசாத் – முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர். நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொந்தக்காரர். இவருக்கென்று தனிப்பட்ட செல்வாக்கு சம்மாந்துறையில் உள்ளது. இந்த நிலையில், மு.கா.வுக்கு எதிரான அணியில் களமிறங்கி, சம்மாந்துறை பிரதேச சபையில் நௌசாத் போட்டியிடுவாராயின், அந்தக் களநிலைவரம் மு.கா.வுக்கு சவாலாக அமையக் கூடும்.

இதேவேளை, பொத்துவில் மற்றும் இறக்காமம் ஆகிய பிரதேச சபைகளை இறுதியாக மு.கா. கைப்பற்றி வைத்திருந்தது. எதிர்வரும் தேர்தலில் இந்தச் சபைகளை மு.கா. கைப்பற்றிக் கொள்வதில் பாரிய சவால்களென்று எவையும் இருப்பதாகத் தெரியவில்லை.

இவ்வாறானதொரு நிலையில், அக்கரைப்பற்று மாநகரசபை மற்றும் பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள்தான் சூடும், சுவாரசியமும் நிறைந்தவையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்கரைப்பற்று பிரதேசம் – முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் சொந்த ஊர். அங்குள்ள மாநகரசபை மற்றும் பிரதேச சபை என, இரண்டினையும் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சிதான் கைப்பற்றியிருந்தது.

அக்கரைப்பற்று மாநகரசபை மற்றும் பிரதேசசபைத் தேர்தல்கள் நடைபெற்ற காலத்தில், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி நடந்தது. பலம்பொருந்திய அமைச்சராக அதாஉல்லா இருந்தார். அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் அதாஉல்லாவுக்கு சேவகம் செய்து கொண்டிருந்தது. இவ்வாறானதொரு சூழ்நிலையில்தான் அந்த சபைகள் இரண்டினையும் அதாஉல்லாவின் கட்சி வென்றெடுத்தது.

ஆனால், இப்போது நிலைமை தலைகீழ். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி மாறிவிட்டது. நாடாளுமன்ற உறுப்பினராகக் கூட அதாஉல்லா இல்லை. முன்னரைப்போல், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தினை அதாஉல்லாவினால் ஆட்டிப் படைக்க முடியாது. இவை போக, மு.காங்கிரசின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம் அக்கரைப்பற்றில் இருக்கின்றார். இவ்வாறானதொரு சூழ்நிலையில், அக்கரைப்பற்று மாநகரசபை மற்றும் பிரதேசசபை ஆகியவற்றை அதாஉல்லா வெல்வாரா என்கிற கேள்வி உள்ளது.

மு.காங்கிரசின் தற்போதைய கிழக்கு மாகாணசபை உறுப்பினரான அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏ.எல். தவம், முன்னர் அதாஉல்லாவின் கட்சியில் இருந்தவர். அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் சார்பாக அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராகப் பதவி வகித்தவர். ஆனால், அதாஉல்லாவுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மு.காங்கிரசில் இணைந்தார். இப்போது, மு.கா. சார்பில் கிழக்கு மாகாணசபை உறுப்பினராகப் பதவி வகிக்கின்றார். இவ்வாறானதொரு சூழ்நிலையில், எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில், அதாஉல்லா தரப்பினரைத் தோற்கடித்துக் காட்ட வேண்டியதொரு பொறுப்பு தவத்துக்கு உள்ளது. அக்கரைப்பற்றிலுள்ள உள்ளுராட்சி சபைகளை அதாஉல்லா கைப்பற்றி விட்டால், மு.காங்கிரசுக்குள் தவம் உரத்துப் பேச முடியாததொரு நிலை உருவாகிவிடும்.

இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றுப்போன நிலையில், அரசியலிலிருந்து ஒதுங்குவதற்கு அதாஉல்லா நினைத்திருந்தால் கூட, அவரைச் சுற்றியுள்ள சிலர் விடுவதாக இல்லை. குறிப்பாக, அக்கரைப்பற்று மாநகர மற்றும் பிரதேச சபைகளில் கடந்தமுறை அதாஉல்லாவின் கட்சி சார்பில் உறுப்பினர்களாக இருந்தவர்களில் சிலர் அரசியல் செய்வதற்கு, முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தேவையாக இருக்கின்றார்.

எதிர்வரும் அக்கரைப்பற்று மாநகரசபை மற்றும் பிரதேச சபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்காகவேனும், அரசியலில் அதாஉல்லா இயங்கு நிலையில் இருக்க வேண்டுமென அதாஉல்லாவின் ‘முன்னாள் உள்ளுராட்சி உறுப்பினர்கள்’ விரும்புகின்றனர்.

இவ்வாறான பல காரண, காரியங்களின் நிமித்தம், அக்கரைப்பற்று உள்ளுராட்சி சபைகளுக்கான எதிவரும் தேர்தல்கள் சூடு பிடித்தேயாக வேண்டிய நிலையில் உள்ளன.

இதற்கிடையில், சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையும் விரைவில் உருவாக்கப்படும் என்கிற தகவல்கள் வந்த வண்ணமுள்ளன. அதுவும் சாத்தியமானால், அம்பாறை மாவட்டத்தில் நடைபெறும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில் சுவாரசியங்களுக்குப் பஞ்சமிருக்காது.

நன்றி: ‘தமிர் மிரர்’ பத்திரிகை (27 ஒக்டோபர் 2015)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்