ஒலுவில்: களவாடப்பட்ட நிலங்கள்

🕔 October 24, 2015

Article - 29
ரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதுவும், அதுபோலானதொரு கதைதான். இந்தக் கதையை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் ஒரு தருணத்தில், இது – வெந்த புண்ணில் வேல் பாய்ந்த கதையாக மாறத் துவங்கும். எப்படித்தான் இந்தக் கதை பெயர் மாறினாலும், இதற்குள் இருக்கும் வலி மட்டும் மாறாதது.

அஷ்ரப் நகர் பற்றி முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இது அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஒரு கிராமமாகும். முன்னர் ‘ஆலிம்சேனை’ என்றுதான் இந்தக் கிராமம் அழைக்கப்பட்டது. பிறகு, மு.காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் அவர்களின் பெயர் இந்தக் கிராமத்துக்கு சூட்டப்பட்டதால், ‘அஷ்ரப் நகர்’ ஆயிற்று.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் தீகவாபி என்றொரு கிராமமும் உள்ளது. இது முற்று முழுதாக சிங்களவர்களைக் கொண்ட பகுதி. அஷ்ரப் நகரும் தீகவாபியும் எல்லைக் கிராமங்கள். தீகவாபியின் சில பகுதிகள் ‘புனி பூமி’ என்கிற வரையறைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனை வைத்துக் கொண்டு, அஷ்ரப் நகருக்குச் சொந்தமான காணிகளில் தீகவாபி மூக்கை நுழைப்பதும், பின்னர் அது முறுகலாக மாறுவதும் நீண்ட காலப் பிரச்சினையாக உள்ளது.

இப்படி இருந்து வந்த விவகாரமானது, ஒருநாள் வேறொரு வடிவத்தினை எடுத்தது. 2011 ஆம் ஆண்டு நொவம்பர் 05 ஆம் திகதி அஷ்ரப் நகருக்குள் திடீரென நுழைந்த ஒரு தொகை ராணுவத்தினர், அங்குள்ள பொதுமக்களின் காணிகளில் முகாம் அமைக்கத் தொடங்கினர். இதன்போது, அஷ்ரப் நகரில் 186 குடும்பங்கள் வசித்து வந்தன. இந்தக் காலப் பகுதியில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக எம்.எம்.எம். நஸீர் என்பவர் பதவி வகித்தார்.

அஷ்ரப் நகரிலுள்ள மக்களின் பிரதான தொழில் சேனைப் பயிர்ச் செய்கையாகும். இவர்கள் தமது வீடுகளையொட்டி அமைந்துள்ள, தங்களின் காணிகளில் சோளம், கச்சான் போன்ற பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வருடம், பயிர்ச் செய்கைக்காக தமது நிலத்தினை உழுது பண்படுத்தி, விதைத்து ஒரு சில நாட்களேயான நிலையில்தான், அந்த மக்களின் காணிகளில் ராணுவத்தினர் நுழைந்து முகாம்களை அமைத்தனர். மட்டுமன்றி, மக்கள் தமது சொந்தக் காணிகளுக்குள் நுழைவதையும் ராணுவத்தினர் தடுத்தார்கள்.

இதனால், கோபமும் கலவரமுமடைந்த மக்கள், ராணுவத்தினருக்கு எதிராக 2011 நொவம்பர் 08 ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். தமது காணிகளில் அடாத்தாக நுழைந்து முகாம்களை அமைத்துள்ள ராணுவத்தினரை உடனடியாக வெளியேறுமாறு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன்போது கோஷமெழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டம் குறித்த செய்திகள் அப்போது ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

இருந்தபோதும், மக்களின் காணிகளிலிருந்து ராணுவத்தினர் வெளியேறவில்லை. காணிகளைப் பறிகொடுத்தவர்கள் தமது நிலங்களை மீட்பதற்காக எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டனர். எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகவே போயின.

தமது வாழ்விடங்களை ராணுவத்தினரிடம் பறிகொடுத்த மக்கள், மனச் சோர்வடைந்த நிலையில், ஒலுவில் பிரதேசத்திலுள்ள தமது உறவினர்களின் வீடுகளுக்குத் திரும்பினார்கள். அங்கு சில காலம் வசித்து வந்த இவர்களில் சிலர், சுமார் 03 வருடங்களுக்கு முன்னர், ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு அருகாமையிலுள்ள, காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான அரசாங்கக் காணிகளில் குடியேறி குடிசைகளை அமைத்து, சேனைப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட நிலையில் வசித்து வருகின்றனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், மேற்படி அரசாங்கக் காணிகளில் குடியேறிய 06 பேருக்கு எதிராக, 2014 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 06 ஆம் திகதி, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் வழக்குத் தாக்கல் செய்தார். ‘அரசாங்கக் காணிகளில் சட்டவிரோதமாக குடியேறினார்கள்’ எனும் குற்றச்சாட்டின் பேரிலேயே, இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு அருகாமையிலுள்ள அரசாங்கக் காணியில் குடியேறியுள்ள அஷ்ரப் நகர் மக்களை சந்திக்கும் நோக்கில், சில நாட்களுக்கு முன்னர், நாம் அங்கு சென்றிருந்தோம்.

அந்தப் பகுதிக்குள் நாம் நுழைந்தபோது, அங்கிருந்தவர்களில் அதிகமானோர் தாம் குறியேறியுள்ள காணிகளைத் துப்புரவு செய்வதிலும், அங்குள்ள தமது சேனைப் பயிர்களைப் பராமரிக்கும் வேலைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அங்கிருந்தவர்களிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு, உரையாடத் துவங்கினோம். முதலில் ஆதம்பாவா இப்றாலெப்பை நம்முடன் பேசினார். அஷ்ரப் நகரில் ராணுவத்தினரிடம் தனது வாழ்விடத்தினைப் பறிகொடுத்து விட்டு, தற்போது ஒலுவிலிலுள்ள அரசாங்கக் காணியில் குடியிருப்பவர்களில் இவரும் ஒருவர்.AB. Ibaralebbe - 01

“அஷ்ரப் நகரில் நாங்கள் வாழ்ந்து வந்தபோது, 2011 ஆம் ஆண்டு ராணுவத்தினர் வந்து எங்கள் காணிகளைச் சுற்றி வேலை அமைத்தார்கள். ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று ராணுவத்தினரிடம் கேட்டோம். உங்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காகவே நாம் இங்கு வந்துள்ளோம் என்றார்கள். 2011 ஆம் ஆண்டு எந்தவிதமான பயங்கரவாத அச்சுறுத்தலும் அங்கு இருக்கவில்லை. ஆனாலும், எங்களைப் பாதுகாப்பதற்காகத்தான் தாங்கள் வந்துள்ளதாக ராணுவத்தினர் கூறினார்கள்.

இதனால், எங்கள் வாழ்விடங்களிலிருந்து நாங்கள் வெளியேற நேர்த்தது. இப்போது, இங்குள்ள அரசாங்கக் காணியில் நாங்கள் குடியிருக்கின்றோம். ஆனால், இங்கும் நிம்மதியில்லை. இந்தக் காணியில் நாங்கள் குடியேறியுள்ளதால் எங்களுக்கெதிராக பிரதேச செயலாளர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இங்கிருந்தும் எங்களை விரட்டினால் நாங்கள் எங்குதான் போவது?

எங்கள் வாழ்விடங்களை ராணுவத்தினர் ஆக்கிரமித்தமையினால்தான், நாங்கள் இங்கு வந்து குடியேறியுள்ளோம். ஏங்களுக்கு எதிராக பிரதேச செயலாளர் தொடுத்துள்ள வழங்கினை எதிர்த்துப் பேசுவதற்கான சட்ட உதவிகளைப் பெறுவதற்குரிய நிதி வசதிகள் கூட எங்களிடமில்லை.

இன்னொருபுறம், சில அரசாங்க அதிகாரிகள் இந்தக் காணியில் சில பகுதிகளை எடுத்துள்ளார்கள். அவர்களுக்கு அரசாங்கக் காணியை எடுக்க முடியுமென்றால், பாதிக்கப்பட்ட ஏழைகளாகிய நாங்கள் இந்தக் காணியில் ஏன் குடியேற முடியாது’ என்கிற கேள்வியோடு, தனது ஆதங்கங்களைக் கொட்டித் தீர்த்தார் ஆதம்பாவா இப்றாலெப்பை.

இதன்போது, அங்கிருந்த ஏ.எல். சுபைதா உம்மாவிடம் பேச்சுக் கொடுத்தோம்.AL. Subaitha umma - 01

“அஷ்ரப் நகரில் சேனைப்பயிர் செய்து கொண்டு, ஓரளவு சந்தோசமாக வாழ்ந்து வந்தோம். ராணுவத்தினர் வந்து, எங்களை விரட்டி விட்டார்கள். இங்கு வந்து குடியேறினால், இங்கும் வாழ விடுகிறார்களில்லை. வேறு எங்குதான் போவது? புதிய அரசாங்கத்தில் எங்கள் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்றார்கள். இன்னும் கிடைத்தபாடில்லை. வாழ்வின் இடைநடுவில் நாங்கள் நின்று கொண்டிருக்கிறோம்” என்று, சுபைதா உம்மா பேசி முடித்தார்.

இவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, சற்று தூரத்தில், தான் குடியேறியுள்ள காணியினைத் துப்புரவு செய்து கொண்டிருந்த ஒருவரைக் கண்டோம். அவர் பெயர் உதுமாலெப்பை மீராலெப்பை. அவரிடம் சென்று பேசினோம். அஷ்ரப் நகரில் இவர் வாழ்ந்தபோது, இவரை அங்கிருந்து விடுட்டுவதற்காகப் புரியப்பட்ட அநியாயங்கள் குறித்து நிறையவே கூறினார். அனைத்தையும் பதிவு செய்து கொண்டோம். ஒரு கட்டத்தில் அவர் அழுது விட்டார்.UL. Meeralebbe - 01

“1977ஆம் ஆண்டு காடு வெட்டி, இரண்டு ஏக்கர் காணியைச் சொந்தமாக்கிக் கொண்டு, 40 வருடங்களாக அஷ்ரப் நகரில் வாழ்ந்து வந்தேன். ராணுவத்தினர் வந்து எனது காணியை ஆக்கிரமிப்பதற்கு முன்பாகவும் என்னை அங்கிருந்து விரட்டி விடுவதற்கான முயற்சிகள் நடந்தன. 2008 ஆம் ஆண்டு வன விலங்குத் திணைக்களத்தினர் வந்து எனது குடிசையை எரித்து விட்டு, நான் வாழ்ந்த இடத்திலிருந்து என்னை வெளியேறுமாறு நிர்ப்பந்தித்தார்கள். ஆனால், அதற்கெதிராக நான் நீதிமன்றம் சென்றேன். எனக்குச் சாதகமாகத்தான் தீர்ப்புக் கிடைத்தது. அதனால், நான் அங்கு தொடர்ந்து வசித்து வந்தேன்.

அதன் பிறகுதான் ராணுவத்தினர் எனது காணிகளை ஆக்கிரமித்துக் கொண்டு, எங்களை அங்கிருந்து வெளியேறுமாறு கூறினனர். நான் மறுத்து விட்டேன். இது எனது நிலம், 40 வருடங்களாக இங்கு வாழ்ந்து வருகிறேன். நான் ஏழை. இந்த இடம் தவிர, எனக்கு வேறு காணிகள் இல்லை என்று கூறினேன். ஆனால், அவர்கள் எதையும் கேட்கும் நிலையில் இல்லை. எனது குடிசையை அழித்து விட்டு, என்னையும், எனது மனைவியையும் எனது நிலத்திலிருந்து விரட்டி விட்டனர்’ என்று மீராலெப்பை கண்ணீர் கசிய பேசி முடித்தார்.

இப்படி, அங்கிருக்கும் ஒவ்வொருவரிடமும் வலி நிறைந்த ஏராளமான கதைகள் உள்ளன.

இந்த மக்கள், தமக்கு நேர்ந்த அநீதி குறித்து, அரசாங்க அதிகாரிகளிடமும், அரசியல்வாதிகளிடமும் நிறையவே முறையிட்டுள்ளனர். ஆனால், நல்லவை எதுவும் நடந்ததாக இல்லை.

எனவே, இப்போது தாங்கள் குடியேறியுள்ள அரசாங்கக் காணியில் தொடர்ந்தும் வசிப்பதற்கு அனுமதிக்குமாறு இந்த மக்கள் கேட்கின்றார்கள்.

இவர்களின் கோரிக்கையினை உரிய தரப்பினர் கவனத்திற்கொள்ள வேண்டும் என்பதுதான் நம்முடைய எதிர்பார்ப்புமாகும்.

இந்த நிலையில், “வாழ்விடங்களிலிருந்து துரத்தப்பட்ட இந்த மக்களுக்கு எதிராக, ஏன் வழக்குத் தாக்கல் செய்தீர்கள்” என்று, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபாவை சந்தித்துக் கேட்டோம்.Hanifa - DS - 01

“அஷ்ரப் நகர் மக்களின் நிலைமை மிகவும் கவலைக்குரியது. அவர்களுக்கு நியாயமானதொரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே தனிப்பட்ட ரீதியில் எனவு விருப்பமாகும். ஆனாலும், ஒரு பிரதேச செயலாளர் என்கிற வகையில், எனது நிருவாகத்துக்குட்பட்ட பகுதிகளில், இப்படி யாராவது அரசாங்கக் காணிகளில் குடியேறுவார்களாயின், அவர்களுக்கு எதிராக, நான் சட்ட நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும். அப்படி செய்யாது விட்டால், அது – எனக்குப் பாதகமாக மாறிவிடும்’ என்றார்.

கட்டுரையினை முடிக்க நினைத்து, மேலே எழுதியுள்ள விடயங்களை மீளவும் ஒரு முறை படித்துப் பார்த்தபோது, ஏதோ ஒரு விடயம் உறுத்துவதுபோல் தெரிந்தது.

இந்தக் கட்டுரையில், ஆதம்பாவா இப்றாலெப்பை என்பவர் பேசிய விடயங்களைப் பதிவு செய்துள்ள பந்திகளை திரும்பவும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள். அதில் சில வரிகளை நாம் சிவப்பு நிறத்தினால் அடையாளமிட்டிருப்பதைக் கவனித்தீர்களா? ‘சில அரசாங்க அதிகாரிகள் இந்தக் காணியில் சில பகுதிகளை எடுத்துள்ளார்கள்’ என, அவர் தெரிவித்துள்ள விடயம் என்ன என்று, உங்களில் எவருக்கும் கேட்கத் தோன்றவில்லையா?

நாம் கேட்டோம், அவ்விடயம் குறித்து தேடத் துவங்கினோம். ஆதம்பாவா இப்றாலெப்பை தெரிவித்த அந்த விடயம் என்ன என்பது குறித்தும், அவர் கூறியமைபோல், ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு அருகிலுள்ள, காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான அரசாங்கக் காணிகளை, யாராவது அரசாங்க உத்தியோகத்தர்கள் சொந்தமாக்கிக் கொண்டுள்ளார்களா என்கின்றமை தொடர்பிலும் விசாரிக்கத் தொடங்கினோம்.

தோண்டத் தோண்ட பூதங்கள் கிளம்பிக் கொண்டேயிருந்தன.

மாபெரும் காணி மோசடியொன்று அங்கு நடைபெற்றுள்ளமை குறித்த தகவல்கள் நமது கைகளுக்குக் கிடைக்கத் துவங்கின.

அடுத்த கட்டுரை – அதை அம்பலமாக்கும்.

நன்றி: ‘தமிழ் மிரர்’ பத்திரிகை (23 ஒக்டோபர் 2015)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்