ஜெமீல்: இருக்கு ஆனால் இல்லை

🕔 October 6, 2015

Article - 022
தி
ருமணமொன்று விவாகரத்தில் முடியும்போது, மனைவியிடமிருந்து கணவர் சட்ட ரீதியாகப் பெற்றுக் கொண்ட சொத்துக்கள் அனைத்தையும் திருப்பிக் கொடுத்து விட வேண்டும். மனைவி வேண்டாம், ஆனால், அவரிடமிருந்து பெற்றுக் கொண்ட எதையும் திருப்பிக் கொடுக்க மாட்டேன் என்று கூற முடியாது. அப்படிச் சொல்வது வெட்கக்கேடான விடயமாகவும் பார்க்கப்படும்.

இதுபோல, முஸ்லிம் காங்கிரசுக்கும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெமீலுக்கும் இடையிலான உறவு அறுந்து விட்டதாக அந்தக் கட்சி சொல்கிறது. எனவே, மு.காங்கிரஸ் மூலமாகப் பெற்றுக் கொண்ட – மாகாணசபை உறுப்பினர் பதவியை, ஜெமீலிடமிருந்து பிடுங்கிக் கொள்வதற்கு அந்தக் கட்சி முயற்சிக்கிறது. ஆனால், மாகாணசபை உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது என்கிறார் ஜெமீல். ஏனென்று கேட்டால், ‘மு.காங்கிரசுக்கும் எனக்குமிடையிலான உறவு, இன்னும் அப்படியேதான் இருக்கிறது. எங்களுக்குள் எந்தப் பிளவும் இல்லை’ என்கிறார்.

இதை வாசிக்கும்போது, எஸ்.ஜே. சூரியா ஒரு திரைப்படத்தில் கூறுகின்ற, ‘இருக்கு ஆனால் இல்லை’ என்கிற பகிடி, உங்களில் சிலரின் நினைவுக்கு வரக்கூடும்.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல், மு.காங்கிரசினூடாக அந்தப் பதவியியினைப் பெற்றவர். மு.காங்கிரசின் இளைஞர் பிரிவுக்கான தேசிய அமைப்பாளராகவும் பதவி வகித்தார். இந்த நிலையில், மு.காங்கிரசின் தலைமையோடு கொண்ட முரண்பாடு காரணமாக, கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் அமைச்சர் றிசாத் பதியுத்;தீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்ட ஜெமீல், அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரானார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

கடந்த பொதுத் தேர்தலில் அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அ.இ.ம.காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்டது. இதன்போது, ஜெமீலை தேசிய பட்டியலூடாக நாடாளுமன்ற உறுப்பினராக்குவேன் என்று அமைச்சர் றிசாத் பதியுத்தீன் கூறினார். அதற்கிணங்க, அ.இ.ம.காங்கிரசின் சார்பில் ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியலில் ஜெமீலின் பெயர் சேர்க்கப்பட்டது. கடைசியில், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படாமல் ஜெமீல் ஏமாற்றப்பட்டமை வேறு கதை.

ஒரு காலத்தில் மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய ‘செல்லப் பிள்ளை’யாக, கட்சிக்குள் பார்க்கப்பட்டவர் ஜெமீல். 2008 ஆம் ஆண்டு, கிழக்கு மாகாணசபையின் உறுப்பினராக மு.காங்கிரஸ் மூலம் தெரிவானார். பின்னர், 2012 ஆம் ஆண்டு, இரண்டாவது தடவையாகவும் மு.காங்கிரசினூடாக கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரானார். இப்படி நன்றாக ஓடிக்கொண்டிருந்த படத்தில், மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒரு கீறல் விழுந்தது.

தற்போதைய கிழக்கு மாகாணசபையில் ஐ.ம.சு.முன்னணி ஆட்சியமைப்பதற்கு மு.காங்கிரஸ் ஆதரவு வழங்க முன்வந்தது. இதற்காக, மு.காங்கிரசுக்கு இரண்டு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன. அத்தோடு, மாகாணசபையின் அரைவாசிக் காலத்துக்கு, மு.காங்கிரசைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக்குவதாகவும் ஐ.ம.சு.முன்னணியினால் வாக்குறுதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், மு.காங்கிரசுக்கு கிடைத்த அமைச்சுப் பதவிகளில் ஒன்றினை, தனக்கு வழங்குமாறு, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெமீல் கோரிக்கை விடுத்தார். அதைப் பெற்றுக் கொள்வதற்குரிய எத்தனங்களையெல்லாம் மேற்கொண்டார். ஆனால், கடைசிவரை ஜெமீலுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை. இதனால், கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீமுடன் ஜெமீல் மிகவும் கோபம் கொண்டார். கட்சியின் தலைவரை விமர்சிக்கத் தொடங்கினார். ஆயினும், ஜெமீலை சமாதானப்படுத்தும் பொருட்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மாகாணசபை குழுத் தலைவர் எனும் பதவி, அவருக்கு வழங்கப்பட்டது. ஆனாலும், ஜெமீலுடைய கோபம் அடங்கவில்லை. இதனை பின்நாட்களில் அறியக் கூடியதாக இருந்தது.

காலவோட்டத்தில், மு.காங்கிரசுக்கு வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி மு.கா.வுக்குக் கிடைத்தது. இந்த நிலையில், முதலமைச்சர் பதவியினை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் மு.கா.வுக்குள் பாரிய இழுபறி தொடங்கியது. இதன்போது, முதலமைச்சர் பதவியை தனக்கு வழங்கு வழங்க வேண்டுமென்று ஜெமீல் கோரிக்கை விடுத்தார். ஆனால், இந்தக் கோரிக்கையும் மு.கா. தலைவரிடம் எடுபடவில்லை. ஹாபீஸ் நசீர் அஹமட் முதலமைச்சரானார். மீண்டும் ஜெமீலுக்கு ஏமாற்றமே எஞ்சியது. இதனால், மு.கா. தலைவர் ஹக்கீம் மீது, ஜெமீல் கடுமையாக ஆத்திரம் கொண்டார், பொறுமையை மீறினார். இதன் விளைவாக, 06 பெப்ரவரி 2015 வெள்ளிக்கிழமையன்று சாய்ந்தமருது பிரதேசத்தில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டதோடு, அவரின் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் பின்னால், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெமீல்தான் இருந்தார் என்பதை மு.கா. தலைமை ஆதாரங்களுடன் தெரிந்து கொண்டது.

இதனையடுத்து, மு.கா. தலைவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட அதே தினம், மு.காங்கிரசின் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றினை வெளியிட்டது. அதில், மு.காங்கிரசிலிருந்து கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெமீல் இடைநிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், கட்சியில் தனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த முடிவினை எடுத்ததாகவும், இதற்கிணங்க மு.காங்கிரசின் உறுப்புரிமையிலிருந்தும் கட்சியில் வகித்த அனைத்துப் பதவிகளிலிருந்தும் ஜெமீல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, அந்த அறிக்கையில் விபரிக்கப்பட்டிருந்தது.

மு.கா. தலைவருக்கு எதிராக நடத்தி முடித்த அந்த ஆர்ப்பாட்டமானது, கடைசியில் ஜெமீலுடைய கழுத்துக்கே கத்தியாய் வந்து நின்றதும் ஜெமீல் பதறிப் போனார். தன்னைத் தற்காத்துக் கொள்வதே ஜெமீலுக்கு இருந்த ஒரே தெரிவாக, அப்போது இருந்தது. உடனடியாக, மு.கா. தலைவர் ஹக்கீமுடைய வீடு சென்றார் ஜெமீல். நடந்த விடயங்கள் அனைத்துக்கும் தலைவரிடம் மன்னிப்புக் கோரினார். இதனையடுத்து, 08 பெப்ரவரி 2015 அன்று, மு.காங்கிரசின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை மு.கா. தலைவர் ஹக்கீம் நடத்தினார். அதில், ஜெமீலுக்கு மன்னிப்பு வழங்கப்படுவதாகவும், கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட அவரை, மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்வதாகவும் ஹக்கீம் அறிவித்தார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஜெமீலும் கலந்து கொண்டதோடு, அங்கு வைத்து தனது நடத்தைக்காக அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இத்தனை நடந்த பிறகும், ஜெமீலுடைய நெஞ்சுக்குள் எரிந்து கொண்டிருந்த நெருப்பு அணைந்து விடவில்லை என்பதுதான் ஆச்சரியமான விடயமாகும்.

இவ் வருடம் ஜுலை 09 ஆம் திகதி, இணையத்தளங்களில் ஒரு செய்தி பரவியது. புனித உம்ரா கடமையினை நிறைவேற்றுவதற்கு மக்கா சென்றிருந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெமீல், அங்கு வைத்து மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு ஒரு கடிதம் எழுதியதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்தோடு, ஜெமீல் எழுதியதாகக் கூறப்படும் அந்தக் கடிதத்தின் முழு விபரத்தினையும் குறித்த ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.

அந்தக் கடிதம் நீண்டதாக இருந்தது. மு.காங்கிரசின் தலைவர் ஹக்கீமுடன், தான் கொண்டிருந்த அதிருப்தியினை, அந்தக் கடிதத்தின் பல இடங்களில் ஜெமீல் வெளிப்படுத்தியிருந்தார். மேலும், அந்தக் கடிதத்தின் இறுதியில் ‘இப்போது நமது கட்சிக்குள் எந்த கொள்கை, கோட்பாடுகளும் இல்லை. போராட்ட வழி முறையும் கிடையாது. அதனால்தான் இந்த அரசியல் பயணத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு என் உள்ளம் தூண்டிக் கொண்டிருக்கிறது’ என்றும் ஜெமீல் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதத்தினை வாசித்தவர்கள், ‘மு.கா.வை விட்டு விலகுவதற்கான முடிவினை ஜெமீல் எடுத்து விட்டார்’ எனப் பேசிக் கொண்டனர். ஜெமீலுடைய கடிதம் வெளியாகிய மறுநாள், 10 ஜுலை 2015 அன்று, ‘றிசாத்துடன் இணைகிறார் ஜெமீல்’ என்கிற தலைப்பில் ஊடகங்கள் செய்திகளை வெளியிடத் துவங்கின.

இதனையடுத்து, அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் இணைந்து கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. மேலும், அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளராக ஜெமீல் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்திகள் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து, கடந்த பொதுத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் ஐ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட மு.காங்கிரசின் வேட்பாளர்களை எதிர்த்து, அமைச்சர் றிசாத்தின் அ.இ.ம.காங்கிரஸ் மயில் சின்னத்தில் களமிறங்கியது. இதன்போது, அ.இ.ம.காங்கிரஸ் நடத்திய தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ஜெமீல் கலந்து கொண்டு, மு.காங்கிரசையும் அதன் தலைமைத்துவத்தினையும் கடுமையாகச் சாடி உரையாற்றினார். ஜெமீலுடைய அந்த உரைகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

இதேவேளை, அ.இ.ம.காங்கிரசின் சார்பாக ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியலுக்கு ஜெமீலுடைய பெயரினை அமைச்சர் றிசாத் பதியுத்தீன் சிபாரிசு செய்தார். மேலும், ‘ஜெமீலை நாடாளுமன்றத்துக்குக்கு நான் அழைத்துச் செல்வேன்’ என்று, அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில், அமைச்சர் றிசாத் உறுதிமொழி வழங்கினார்.

இப்போதுதான் இந்தக் கதையின் முக்கியமான கட்டத்துக்கு நாம் வந்திருக்கின்றோம்.

ஜெமீலுடைய இந்த செயற்பாடுகளை உன்னிப்பாக அவதானித்த மு.காங்கிரஸ், ஜெமீலுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையொன்றினை மேற்கொள்வதெனத் தீர்மானித்தது. அதற்கு முன்பதாக, இது தொடர்பில் ஜெமீலுக்கு மு.காங்கிரஸ் கடிதமொன்றினை அனுப்பி வைத்தது. அந்தக் கடிதத்தில், ‘அ.இ.ம.காங்கிரசில் நீங்கள் இணைந்து கொண்டதாக அறிய முடிகிறது. இதிலுள்ள உண்மைத் தன்மை குறித்து உங்களிடமிருந்து விளக்கத்தினை எதிர்பார்க்கிறோம். அ.இ.ம.காங்கிரசில் நீங்கள் இணைந்ததாக வரும் செய்திகளில் உண்மையில்லையாயின் அதனை பகிரங்கமாக நீங்கள் கூறவேண்டும். மேலும், ஊடகங்களில் அவ்வாறு வெளிவந்த செய்திகளை மறுத்து ஓர் அறிக்கையினையும் வெளியிட வேண்டும். அதேவேளை, தொடர்ந்தும் நீங்கள் மு.காங்கிரசில் இருக்கின்றீர்கள் என்றால், அதனை சத்தியக் கடதாசி மூலம் உறுதிப்படுத்த வேண்டும்’ என்கிற சாரப்பட குறிப்பிடப்பட்டிருந்தது.

பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர் ஜெமீலுக்கு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டதோடு, இதற்கான பதிலினை வழங்குவதற்காக அவருக்கு 10 நாட்கள், கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்ததாக மு.கா. தரப்பு கூறுகிறது. ஆயினும், குறித்த கடிதம் தொடர்பில் ஜெமீலிடமிருந்து எவ்விதமான பதிலும் கிடைக்கவில்லை என்று, மு.காங்கிரசின் பிரதி செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பர் கூறுகின்றார்.

இதனையடுத்து, ஓகஸ்ட் 15 ஆம் திகதி நடைபெற்ற மு.காங்கிரசின் உயர்பீடக் கூட்டத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீலை கட்சியின் உறுப்புரிமையில் இருந்தும், கட்சியில் அவர் வகிக்கும் அனைத்துப் பதவிகளில் இருந்தும், மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. மேலும். இந்தத் தீர்மானம் தொடர்பிலான அறிவித்தல் கடிதம் ஓகஸ்ட் 21 ஆம் திகதி ஜெமீலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதேவேளை, குறித்த உயர்பீடக் கூட்டத்தின்போது, மத்திய மாகாணசபையின் உறுப்பினர் ஏ.எல்.எம். உவைஸ் என்பவரையும் கட்சியிலிருந்தும், கட்சி சார்பாக வகிக்கும் பதவிகளிலிருந்தும் நீக்குவதெனத் தீர்மானிக்கப்பட்டமை நினைவுகொள்ளத்தக்கது.

இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டு சரியாக ஒரு வாரத்தின் பின்னர், அதாவது 22 ஓகஸ்ட் 2015ஆம் நாள், ‘கிழக்கு மாகாண சபையில் – தான் வகிக்கும் உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக’ ஜெமீல் அறிவித்தார். கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, இந்த விடயத்தினை அவர் கூறினார்.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து ஜெமீல் விலக்கப்பட்டால், அவரின் இடத்துக்கு மு.காங்கிரசின் பிரதிப் பொருளாளரான கே.எம். ஜவாத் நியமிக்கப்படுவார். 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில், 17468 விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்ட ஜவாத், 859 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பினைத் தவற விட்டார். இதனடிப்படையில், கிழக்கு மாகாணசபை உறுப்புரிமையிலிருந்து ஜெமீல் நீக்கப்பட்டதும், அந்த இடத்துக்கு ஜவாத்தை நியமிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு மு.காங்கிரஸ் முயற்சித்துக்கொண்டிருந்த வேளையில், 18 செப்டம்பர் 2015 அன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், மு.கா.வுக்கு எதிராக ஜெமீல் வழக்கொன்றினைத் தாக்கல் செய்துள்ளார்.

வழக்கில் ஜெமீல் குறிப்பிட்டுள்ள விடயத்தின் சாரம்சம் இதுதான். அதாவது, ‘நான் இன்னும் மு.காங்கிரஸ் உறுப்பினராகத்தான் இருக்கிறேன். ஆகவே, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து என்னை விலக்க முடியாது. கட்சியால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் வேண்டப்பட்டவாறு, நான் இன்னும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினராகத்தான் உள்ளேன் என்பதை, சத்தியக் கடதாசி மூலம் உறுதிப்படுத்தவும் தயாராக உள்ளேன். மேலும், கடந்த பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சி சார்பாகத்தான் மு.காங்கிரஸ் போட்டியிட்டது. அதனடிப்படையில் நானும் ஐ.தே.கட்சியின் வெற்றிக்காக செயற்பட்டேன். மேலும், கட்சியிலிருந்து என்னை நீக்கியதாக அறிவித்தல் விடுத்தமைக்கு பதிலளிக்கும் முகமாக, நான் கால அவகாசம் கேட்டிருந்தேன். ஆனால், எனக்கு அவ்வாறான கால அவகாசம் எதனையும் வழங்காமல், மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து விலக்குவதற்கு மு.காங்கிரஸ் முடிவெடுத்துள்ளமையானது பிழையாகும்’.

மாகாணசபை உறுப்பினரொவருவர், அவர் அங்கத்துவம் வகிக்கும் அரசியல் கட்சியிலிருந்து விலக்கப்பட்டால் அல்லது விலகிக் கொண்டால், அந்நபர் வகிக்கும் மாகாணசபை உறுப்பினர் பதவியினை வறிதாக்குமாறு தேர்தல் ஆணையாளருக்கு, குறித்த கட்சி கோரிக்கை விடுக்க முடியும். ஆனாலும், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மாகாணசபை உறுப்பினரொருவர், அத்தீர்மானத்துக்கு எதிராக, தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு ஒரு மாதத்துக்குள், மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கொன்றினைத் தாக்கல் செய்ய முடியும் என்று 1988 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டம் கூறுகிறது. இதனடிப்படையில்தான், மேற்படி வழக்கினை ஜெமீல் தாக்கல் செய்திருக்கின்றார். இந்த வழக்கு முடியும் வரையில், கிழக்கு மாகாணசபையின் உறுப்பினராக ஜெமீல் தொடர்ந்தும் பதவி வகிப்பார்.

எவ்வாறாயினும், இவ்வாறானதொரு வழக்கொன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு வரும்போது, அவ்வழக்கினை மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வின் முன் விசாரணை செய்து, இரண்டு மாதங்களுக்குள் தீர்ப்பினை வழங்கிவிட வேண்டுமென சட்டம் கூறுகிறது.

அந்தவகையில், நேற்று திங்கட்கிழமை மேற்படி வழக்கு, மூன்று நீதிபதிகள் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. முஸ்லிம் காங்கிரஸ் சார்பில், நாடாளுமன்ற உறுப்பினரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம். சுமந்திரன் ஆஜராகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் – மு.காங்கிரசுக்கு எதிராகவும், அ.இ.ம.காங்கிரசுக்கு ஆதரவாகவும் ஊடகங்கள் முன்னிலையில் ஜெமீல் தெரிவித்த பல்வேறு கருத்துக்களை மு.காங்கிரஸ் ஆதாரமாக வைத்துள்ளது. இதேவேளை, கட்சியிலிருந்து விலக்கப்பட்டதாக ஜெமீலுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டும், அவர் அது தொடர்பில் எதுவித பதிலையும் வழங்கவில்லையென்று மு.கா. தரப்பு கூறுகின்றது. ஆயினும், பதில் வழங்குவதற்கு, தான் கால அவகாசம் கோரியபோதிலும், தனக்கு அவ்வாறான அவகாசம் எவையும் வழங்கப்படவில்லை என்று ஜெமீல் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறாயின், தான் கால அவகாசம் கோரியமையினை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களை நீதிமன்றில் ஜெமீல் சமர்ப்பிக்க வேண்டிய தேவையும் உள்ளது.

கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்டமைபோல, முஸ்லிம் காங்கிரசில் ஜெமீலுடைய உறுப்புரிமையின் தற்போதைய நிலைவரமானது, ‘இருக்கு ஆனால் இல்லை’ என்பதாகவே உள்ளது.

எவ்வாறாயினும், 2015 முடிவதற்குள், இருக்கிறதா? இல்லையா? என்பது தொடர்பில் ஒரு முடிவு தெரிந்து விடும்.

நன்றி: ‘தமிழ் மிரர்’ பத்திரிகை (07 ஒக்டோபர் 2015)

Jameel - 01Jameel - 02Jameel - 04
Jameel - 03

Comments

புதிது பேஸ்புக் பக்கம்