அட்டாளைச்சேனை பிரதேச சபை, ஏன் தரமுயர்த்தப்படவில்லை: ஹரீஸ் தரப்பிலிருந்து கூறப்படும் நியாயம் இதுதான்

🕔 April 1, 2019
– அகமட் எஸ். முகைடீன் –

ட்டாளைச்சேனை பிரதேச சபையினை தரமுயர்த்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் நசீர் தலைமையில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ. அஸீஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல். அமானுல்லா மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

அட்டாளைச்சேனை நூலகத்தை புதிய கட்டடத்தில் ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் ராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டபோது, அட்டாளைச்சேனை பிரதேச சபையினை நகர சபையாக தரமுயர்த்துவதற்கான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி அதற்கான கோரிக்கையினை இப்பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழு என்னிடம் கையளிக்கும்போது அதனை நடைமுறைப்படுத்தி தரமுயர்துவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இருந்தபோதிலும் அட்டாளைச்சேனை நகர சபையினை தரமுயர்த்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான கோரிக்கை இன்னும் ராஜாங்க அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்நிலையில் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்குட்பட்ட ஒலுவில், பாலமுனை உள்ளிட்ட சகல பிரதேச மக்களின் அபிப்பிராயத்தையும் கேட்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் நேற்று கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இக்கூட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபையினை நகர சபையாக தரமுயர்த்துவதற்கான ஆலோசனை முன்வைக்கப்பட்டபோது, பிரதேச ஊர் பிரமுகர்கள் சிலர், இதற்கான இணக்கப்பாட்டை தெரிவிக்காமையினால் தீர்மானமின்றி முடிவெதுவும் எடுக்கப்படாமல் கூட்டம் நிறைவடைந்தது. இது தொடர்பான கலந்துரையாடல் கூட்டமொன்றை மீண்டும் கூட்டி பேசுவதென இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையினை தரமுயர்த்துவதற்கான வாக்குறுதியினை ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் வழங்கியபோதிலும் இன்னும் தரமுயர்த்தப்படவில்லை என, சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அட்டாளைச் சேனை பிரதேச சபையினை தரமுயர்த்துவதற்கான கோரிக்கை இன்னும் உத்தியோகபூர்வமாக ராஜாங்க அமைச்சரிடம் கையளிக்கப்படாமையினாலே இத்தாமதம் நிலவுகிறது.

அட்டாளைச்சேனை பிரதேச அரசியல் தலைமைகள் இது சம்பந்தமாக மீண்டும் கூடி தீர்மானமெடுத்து அத்தீர்மானத்தை கோரிக்கையாக ராஜாங்க அமைச்சரிடம் உத்தியோகபூர்வமாக சமர்க்கின்றபோது, நகர சபையாக தரமுயர்த்துவதற்கு ராஜாங்க அமைச்சர் தயாராகவுள்ளார்.

எனவே அட்டாளைச்சேனை பிரதேச சபையினை தரமுயர்துகின்ற விடயம் குறித்த பிரதேச அரசியல் தலைமைகளின் கையிலே தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்