தேசிய காங்கிரஸிலிருந்து பிரிந்த முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை, மு.காங்கிரஸில் இணைய முயற்சி

🕔 April 1, 2019

– முன்ஸிப் –

முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமை வகிக்கும் தேசிய காங்கிரஸிலிருந்து அண்மையில் விலகிய, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவதற்கான முன்னெடுப்பில் ஈடுபட்டுள்ளார் என்று, ஊடகவியலாளர் ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார்.

இதனடிப்படையில் மு.காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீமை உதுமாலெப்பை, மூன்று தடவை சந்தித்துப் பேசியுள்ளதாகவும் அந்த ஊடகவியலாளர் கூறினார்.

கண்டியில் வைத்தும் மு.கா. தலைவரை உதுமாலெப்பை சந்தித்துப் பேசியதாகவும் அந்த ஊடகவியலாளர் தகவல் தந்தார்.

“உதுமாலெப்பை அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவர் என்பதால், இது தொடர்பில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீரிடம் மு.கா. தலைவர் பேசியுள்ளார்.

அதற்கு, கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவிடம் பேசுமாறு ஹக்கீமிடம் நசீர் கூறியுள்ளார்” எனவும், இது தொடர்பில் தகவல் வழங்கிய ஊடகவியலாளர் மேலும் கூறினார்.

எவ்வாறாயினும், முஸ்லிம் காங்கிரஸில் உதுமாலெப்பை இணைவதில், நாடாளுமன்ற உறுப்பினர் நசீருக்கு விருப்பம் இல்லை என்றும் மேற்படி ஊடகவியலாளர் சுட்டிக்காட்டினார்.

மு.காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் காலத்தில் – முஸ்லிம் காங்கிரஸில் இணைந்திருந்த எம்.எஸ். உதுமாலெப்பை, முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவுடன் சேர்ந்து, மு.காங்கிரஸை விட்டும் பிரிந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

எவ்வாறாயினும் மேற்படி தகவலை ‘புதிது’ செய்தித்தளம் சுயமாக உறுதிப்படுத்திக் கொள்ளவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்