பண மோசடியில் சி.ஓ. லெஸ்தகிர் தனியார் பாடசாலை; போலிச் சான்றிதழ் கொடுத்து குற்றத்தை மறைக்க முயற்சி: நிந்தவூரில் தில்லுமுல்லு

🕔 March 29, 2019

– அஹமட் –

சி.ஓ. லெஸ்தகிர் (C.O. LESTHAKIR) எனும் பெயரில் – நிந்தவூரில் இயங்கி வரும் தனியார் பாடசாலையில், விளையாட்டுப் போட்டி எனும் பெயரில் மாணவர்களிடம் மோசடியாகப் பணம் வசூலித்த விடயம், பெற்றோர் ஒருவரின் தலையீடு காரணமாக அம்பலமாகியுள்ளது.

மேற்படி பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி, கடந்த 24ஆம் திகதி நடைபெற்றது. இந்த விளையாட்டுப் போட்டியில் மாணவர்களை பங்குபற்றுமாறு கூறிய பாடசாலை நிருவாகம், அதற்காக அவர்களிடமிருந்து பெருந்தொகைப் பணத்தையும் அறவிட்டுள்ளது.

இதற்கமைய இரண்டாம் வகுப்பில் கற்கும் மாணவி ஒருவரின் தந்தையிடமிருந்து, குறித்த மாணவி விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளதாகக் கூறி 3,300 ரூபாவை பாடசாலை நிருவாகம் அறவிட்டுள்ளது.

இந்த நிலையில், 24ஆம் திகதி சி.ஓ. லெஸ்தகிர் தனியார் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிந்தவூரில் நடைபெற்றது.

இருந்த போதும், மேற்படி இரண்டாம் வகுப்பு மாணவி – எந்தவித போட்டிகளிலும் பங்குபற்ற அழைக்கப்பட்டிருக்கவில்லை.

இதனையடுத்து, தமது பிள்ளை கலந்து கொள்ளும் விளையாட்டுப் போட்டியியைப் பார்ப்பதற்காக சென்றிருந்த மேற்படி மாணவியின் பெற்றோர், அங்குள்ள ஆசிரியை ஒருவரை அணுகி, இது விடயமாகக் விசாரித்துள்ளனர்.

இதன்போது, எந்தவொரு போட்டியிலும் பங்குபற்றுநர் பெயர்ப்பட்டியலில் குறித்த மாணவியின் பெயர் இல்லை என்று, அந்த ஆசிரியை தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மேற்படி பெற்றோர் தமது பிள்ளையை அழைத்துக் கொண்டு சென்று விட்டனர்.

இதன் பின்னர், பாடசாலைக்குச் சென்ற மேற்படி பெற்றோர் இது விடயமாக விசாரித்துள்ளனர். போட்டியில் பங்கு பெறுவதற்கு பெயரிடப்படாத பிள்ளையிடமிருந்து ஏன் பணம் அறவிட்டீர்கள்? அல்லது விளையாட்டுப் போட்டியில் பங்கு பற்றும் பொருட்டு, பணம் அறவிடப்பட்ட பிள்ளையை, போட்டியில் கலந்து கொள்வதற்கு ஏன் அனுமதிக்கவில்லை என, மாணவியின் பெற்றோர் கேட்டுள்ளனர்.

இதனால் தடுமாறிப்போன பாடசாலை நிருவாகத்தினர், தமது மோசடியை மறைப்பதற்காக பல்வேறு பொய்களைக் கூறியுள்ளனர். ஆயினும், அதற்கெல்லாம் குறித்த மாணவியின் தந்தை வளைந்து போகாத நிலையில், இன்று வெள்ளிக்கிழமை குறித்த மாணவியிடம், அவர் விளையாட்டுப் போட்டியொன்றில் கலந்து கொண்டு, முதலாமிடம் பெற்றுக் கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ் ஒன்றினையும், அற்கான பதக்கத்தினையும் பாடசாலை நிருவாகம் கொடுத்து அனுப்பியிருந்தது.

இதனால், ஆத்திரமடைந்த குறித்த மாணவியின் தந்தை, நிந்தவூரிலுள்ள சி.ஓ. லெஸ்தகிர் தனியார் பாடசாலைக்குச் சென்று, இது தொடர்பில் பாடசாலை நிருவாகத்தை கடுமையாகச் சாடியுள்ளர்.

மோசடியாகப் பணம் பெற்றமையை ஈடுசெய்வதற்காக, எனது பிள்ளை பங்கு பற்றாத ஒரு போட்டியில் பங்குபற்றியதாகக் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழை எவ்வாறு வழங்குவீர்கள்? அப்படியென்றால், இங்கு பணம் கொடுப்பவர்களுக்கு பொய்யான கல்விச் சான்றிதழ்களையும் நீங்கள் வழங்குவீர்களல்லவா என்று, சரமாரியாக கேள்வி கேட்டதும், பாடசாலை நிருவாகத்தினர் ஆடிப்போயுள்ளனர்.

நிந்தவூரில் இயங்கி வரும் – சி.ஓ. லெஸ்தகிர் தனியார் பாடசாலை பற்றி முன்னரும் பல்வேறு முறைப்பாடுகள் உள்ளன. கல்வியை காசாக்கும் இந்தப் பாடசாலையானது, விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்கு மாணவர்களிடம் பணம் வாங்கி விட்டு, பின்னர் அந்த மாணவர்களில் சிலரை எந்தவித போட்டியிலும் பங்குபற்ற அனுமதிப்பதில்லை என்பதும், இதுபற்றி அவர்களின் பெற்றோர் கேட்டால், விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதாக குறிப்பிடும் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்குவதும் பாரிய மோசடியாகும்.

இவ்வாறான தில்லுமுல்லில் ஈடுபட்டுள்ள மேற்படி சி.ஓ. லெஸ்தகிர் தனியார் பாடசாலை தொடர்பில் பெற்றோர் விழிப்பாக இருப்பதோடு, இதற்குப் பொறுப்பான அதிகாரிகள், இந்தப் பாடசாலைக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியமாகும்.

உலகில் கல்வியை இலவசமாக வழங்கும் மிகவும் சொற்ப நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். ஆரம்ப வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை, மாணவர்களுக்கான கல்வியை நமது நாடு இலவசமாக வழங்கி வருகிறது. இப்படி இருக்கையில், இவ்வாறான தனியார் மோசடிப் பாடசாலைகளில் பிள்ளைகளைச் சேர்த்து, அவர்களின் கல்விக்காக எனக் கூறி பெருந்தொகைப் பணத்தினை பெற்றோர்கள் செலவிடுகின்றமை குறித்து இனியாவது யோசிக்க வேண்டும்.

இந்தப் பாடசாலை தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் வரை, பொறுப்புள்ள ஓர் ஊடகம் எனும் வகையில் ‘புதிது’ செய்தித்தளம் கவனித்துக் கொண்டேயிருக்கும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்