அலுவலகப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில், கிழக்கு மாகாண சபை, அநீதி இழைப்பதாக குற்றச்சாட்டு

🕔 March 27, 2019

– அஹமட் –

கிழக்கு மாகாண நிருவாகத்தின் கீழ் பணியாற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு, நீண்டகாலமாக பதவியுயர்வு வழங்கப்படாமல்  இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருவதாக, அம்மாகணத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் அரச சேவையில் உள்ளீர்ப்புச் செய்யப்பட்ட அலுவலகப் பணியாளர்கள் தரம் I, II III ஆகிய பதவிநிலைகளை கொண்ட அலுவலக ஊழியர்கள், பதவி உயர்வு பெறும் காலங்கள் 05, 10 வருடங்கள் என தரம் பிரிக்கப்பட்டுள்ளன.

ஆனால் குறித்த கால எல்லைகளை மாகாண உயர் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டு மிக நீண்ட காலமாக உள்ளது. எனவே, கிழக்கு மாகணத்துக்குள் கடமையாற்றும் அவ் ஊழியர்களின் பதவி உயர்வு விடயத்தில், ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உடனடியாக கவனம் செலுத்தவேண்டுமெனவும் அவ்வூழியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கடந்த  காலங்களில் தரம் IIIஇல்கடமையாற்றும் ஊழியர்கள் தரம் IIக்கு பதவியுயர்வு பெறும் சந்தர்ப்பங்களில், குறிப்பிட்ட ஊழியர்கள் அதே பதவியிலேயே தொடர்ந்தும் வைக்கப்படுகின்றனர்.

ஆனால் தொழில்களுக்கான வெற்றிடமுள்ள நிலையங்களில் மாற்று நியமனங்களை வழங்கமுடியும் என தாபன விதிக்கோவை குறிப்பிடுகின்றது. உதாரணமாக ரோணியோ இயக்குனர், சைக்கிள் ஏவலாளர் மற்றும் தூதுவராளர், சுவடிக்காப்பாளர், போட்டோகொப்பி இயந்திர இயக்குனர் போன்ற பதவி மாற்றங்களை பதவியுயர்வாக வழங்கமுடியும்.

இருந்த போதிலும் ஒரு ஊழியர் தரம் IIIஇல் எந்த பணியை செய்தாரோ அதே பதவி நிலையே, அவருக்கு பதவியுயர்வாகவும் வழங்கப்படுகின்றது. தரம் Iக்குச் செல்லும் ஊழியர்களுக்கும் இதே நிலைமை ஏற்படுகிறது.

அதனால் நீண்டகாலமாக இந்த சேவையில் கடமையாற்றும் ஊழியர்கள் மனச்சோர்வுடனே தங்களது பணிகளைத் தொடருகின்றனர். மேலும் ஓய்வு பெற்றுச் செல்லும் அதிகமான ஊழியர்கள் அலுவலகப் பணியாளர்களாகவே செல்வதும் குறிப்பிடத்தக்கது.

தரம்  Iஇலிருந்து சிரேஷ்ட பதவி நிலைக்குச் செல்கின்ற ஊழியர்களுக்கும் அதே பதவியில் பதவியுயர்வு வழங்கப்படுகின்றது. பொருத்தமான பதவியுயர்வுகளை வழங்குவது இல்லாமலாக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த பதவியில் கிழக்கு மாகாண திணைக்களங்களில் கடமையாற்றும் ஊழியர்களின் பதவி உயர்வினை பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) மேற்கொள்ளுதல் வேண்டும். பாடசாலைகளில் கடமையாற்றும் ஊழியர்கள் பதவியுயர்வு பெறுவதற்காக விண்ணப்பத்திருந்தும் காலதாமதமாகவே பதவியுயர்வு வழங்கப்படுகின்றது.

இந்நிலையிலும் காவலாளியாக கடமையாற்றும் பணியாளர்களை, அலுவலகப் பணியாளர்களாக பதவியுயர்த்த சந்தர்ப்பம் இருந்தும் கிழக்கு மாகாணசபை நிருவாகத்தினால் அதே பதவியில் வைத்தே பதவியுயர்வு வழங்கப்படுகின்றது.

அதாவது காவலாளி தரம்  II அல்லது I என்றே அந்நியமனம் வழங்கப்படுகின்றது. குறித்த பதவி உயர்வினை கல்வி, பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் வழங்குதல் வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உதாரணமாக பாடசாலையொன்றில் எட்டு வருடங்கள் காவலாளியாக கடமையாற்றும் ஊழியருக்கு, அதே காவலாளி I என்றே பதவி உயர்வு வழங்கப்படுகின்றது. அதே பாடசாலையில் நூலக உதவியாளர், ஆய்வு கூட உதவியாளர் மற்றும் சுவடிக்காப்பாளர் பதவிகள் இருக்கின்ற போதிலும், குறித்த காவலாளிக்கு பதவி உயர்வாக அப்பதவிகள் வழங்கப்படாமல் மறுக்கப்பட்டும் வருகின்றது.

ஆனால் மத்திய அரசில் இப்படி அநீதிகள் நடப்பதில்லை. பதவியுயர்வுகள் வழங்கப்படுகின்ற போது, வெவ்வேறு தொழில்களை வழங்குவதன் மூலம் அப் பதவியுயர்வுகள் வழங்கப்படுகின்றன. மத்திய அரசுக்கும், மாகாண அரசுக்கும் இடையில் இப்படியொரு பெருத்த இடைவெளி இருப்பதன் மர்மம்தான் என்ன?

பதவி உயர்வு வழங்கும் சந்தர்ப்பங்களில் சம்பள உயர்வு வழங்கப்படுவதில்லை. ஒருசம்பள படியேற்றம் மட்டுமே வழங்கப்படுகின்றது. பத்து வருடங்கள் சேவையாற்றிய ஊழியர் ஒருவர், தரம் I க்கு பதவியுயர்வு பெற்று வரும்போது, ஒரு சம்பள ஏற்றமும், அதே தொழிலில் தொடர்ந்தும் இருத்தப்படுவதினால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைந்திருந்த காலங்களில் பதவி நிலைகள் குறைவாக இருந்தது. ஆனால் பதவியுயர்வுகளும், பதவி மாற்றங்களும் வழங்கப்பட்டன. தனியே கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்ட இதுவரை காலங்களில் அலுவலகப் பணியாளர்கள், காவலாளிகள் போன்ற நியமனங்களுக்கு  எவ்வித பதவி மாற்றங்களும் வழங்கப்படவில்லை.

பதவியுயர்வுகள் அந்தந்த தரத்திலே வழங்கப்பட்டு வருகின்றன. அலுவலகப் பணியாளர் தரம் Iஇல் கடமையாற்றும் அலுவலர் ஒருவர், சாரதிஅனுமதிப்பத்திரம் பெற்றிருந்து திணைக்களத்தினால் கோரப்பட்ட சாரதி வெற்றிடத்துக்கு விண்ணப்பித்திருந்து – நேர்முகப்பரீட்சைக்கு தோற்றியிருந்தும், தரம் Iல் சம்பள அளவுத் திட்டம் அதிகமானது என்கிற காரணத்தைகாட்டி, சாரதிப் பதவிகளில் நியமிப்புச் செய்ய மறுக்கின்றனர்.

ஆனால் பல திணைக்களங்களில் சாரதி வெற்றிடமுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கிழக்கு மாகாண நிருவாகத்தின் கீழ் அதிகளவான பதவி மாற்றங்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதிலும், கிழக்கு மாகாணம் இதுவரை அதற்கான சாதக சமிக்ஞையினை காட்டவில்லை.

கிழக்கு மாகாணமானது பதவியுயர்வு விடயத்தில் பாரபட்சமாகவே நடந்து கொள்கின்றது. மத்திய அரசு – கடந்த ஒரு வருடத்துக்குள் பதவி உயர்வாக – பதவி மாற்றங்களையும் வழங்கி அவ்வூழியர்களை கௌரவித்துள்ளமையும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

அரச தாபன விதிக்கோவை மத்திய, மாகாண அரசுகளுக்கு வெவ்வேறானவையா? என்கிற கேள்வியை ஊழியர்கள் கேட்கத் தொடங்கியுள்ளமை இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும்.

எனவே குறித்த குற்றச்சாட்டை உடனடியாக கருத்திற்கொண்டு, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, இது விடயத்தில் நியாயமான பதவி உயர்வுகளையும், பதவி உயர்வுகளாக பதவி மாற்றங்களையும் வழங்குவதக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, இவ்வூழியர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்