அட்டாளைச்சேனையில் எரிவாயு தயாரிக்கும் நிறுவனம்; ராஜாங்க அமைச்சர், பல மில்லியன் ரூபா லஞ்சம் பெற்றதாக தகவல்

🕔 March 20, 2019

– தம்பி –

ட்டாளைச்சேனை பிரதேச சபையினால், அஷ்ரப் நகரில் குப்பை கொட்டும் இடமொன்று பராமரிக்கப்பட்டு வருகின்றது. அட்டாளைச்சேனை பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் மட்டுமன்றி, அம்பாறை மாவட்டத்திலுள்ள அநேகமான உள்ளுராட்சி சபைப் பிரிவுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளும் இந்த இடத்திலேயே கொட்டப்படுகிறது.

இதற்காக, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு அங்கு குப்பைகளைக் கொட்டும் ஏனைய உள்ளுராட்சி சபைகள், கொடுப்பனவை வழங்கி வருகின்றன.

இவ்வாறான நிலையில், இங்குள்ள குப்பைகளைப் பயன்படுத்தி இயற்கை எரிவாயு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றினை இங்கு அமைப்பதற்காக, நிறுவனமொன்று முயற்சித்து வருகிறது. இதன்பொருட்டு 20 வருடங்களுக்கான அனுமதியினை அந்த நிறுவனம் அட்டாளைச்சேனை பிரதேச சபையிடம் கோரியுள்ளது.

இதற்காக, கிழக்கு மாகாண ஆளுநரிடம் அட்டாளைச்சேனை பிரதேச சபை அனுமதியினையும் சமீபத்தில் பெற்றிருந்தது.

இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் குப்பைக் கிடங்கில் இயற்கை வாயு உற்பத்தித் தொழிற்சாலையை அமைப்பதற்கான அனுமதியைப் பெற்றுத் தருவேன் எனக் கூறி, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜாங்க அமைச்சரொருவர், ஒரு தரப்பிடம் பல மில்லியன் ரூபாவை லஞ்சமாகப் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, எரிவாயு உற்பத்தித் தொழிற்சாலையை அமைப்பதற்கு முயற்சிக்கும் நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றுக் கொள்வதற்கு, அட்டாளைச்சேனையிலுள்ள அரசியல் முக்கியஸ்தர் ஒருவரும் முயச்சித்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

எவ்வாறாயினும் இதுவரையில் எந்தவொரு நிறுவனத்துடனும் அட்டாளைச்சேனை பிரதேச சபை, இதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை.

இவ்வாறான எரிவாயு தயாரிக்கும் நிறுவனமொன்றுடன், அட்டாளைச்சேனை பிரதேச சபை ஒப்பந்தம் செய்யும் போது, பிரதேச சபைக்கு உச்சளவு வருமானத்தைப் பெற்றுக் கொள்ளும் வகையில், அந்த ஒப்பந்தம் அமைய வேண்டும் என்பது முக்கியமாகும்.

சம்பந்தப்படும் நிறுவனத்திடம் அரசியல்வாதிகள் பணத்தைப் பெற்றுக் கொண்டு, அந்த நிறுவனங்கள் பிரதேச சபைக்கு மாதாந்தம் சிறியளவு கொடுப்பனவை வழங்கும் வகையிலான ஏற்பாட்டினை செய்து கொடுப்பதற்கான ஆபத்துக்களும் உள்ளன என்று, இது தொடர்பில் நமக்கு தகவல் வழங்கியோர் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, இயற்கை எரிவாயு தயாரிக்கும் நிறுவனத்துடன், அட்டாளைச்சேனை பிரதேச சபை செய்து கொள்ளும் ஒப்பந்தம் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருத்தல் வேண்டும்.  மேலும், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் இது தொடர்பான தகவல்கள் வெளிப்படுத்தப்படுதல் அவசியமாகும்.

இது தொடர்பில் ஊடகம் என்கிற வகையில், ‘புதிது’ செய்தித்தளம் ஊன்றிக் கவனித்துக் கொண்டிருலுக்கும் என்பதையும் இங்கு பதிவு செய்கிறோம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்