கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் காரியாலய திறப்பு விழா: திரும்ப திரும்ப புறக்கணிக்கப்பட்ட ஹரீஸ்

🕔 March 8, 2019

– அஹமட் –

லங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியியளாளர் காரியாலயத்தை,  மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்த நிலையில், கல்முனையைச் சேர்ந்த ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் – அந்த விழாவுக்கு அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

மேற்படி மின் பொறியியளாளர் காரியாலயாலயம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை கடந்த பெப்ரவரி 01ஆம் திகதி திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ஆயினும், அந்த திறப்பு விழாவுக்கு கல்முனையை சொந்த இடமாகக் கொண்டவரும், மு.காங்கிரஸ் சார்பானவருமான ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் அழைக்கப்பட்டிருக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த ராஜாங்க அமைச்சர் ஹரீஸ்; அந்த விழாவை நடைபெறாமல் தடுத்து விட்டதாக, சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

ஆயினும், குறித்த பிராந்திய மின் பொறியியலாளர் காரியாலய கட்டத்தை, மக்கள் பாவனைக்காக அதிகாரிகள் திறந்து வைத்தனர்.

எவ்வாறாயினும், மேற்படி காரியாலயக் கட்டடத்தை அமைச்சர் ரவி கருணாநாயக்க திறந்து வைப்பார் என்றும், அந்த நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் ஹரீஸும் கலந்து கொள்வார் எனவும், ஹரீஸுக்கு நெருக்கமானவர்கள் சமூக வலைத்தளங்களில் அப்போது கூறி வந்தனர்.

இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை கல்முனை பிராந்திய மின் பொறியியளாளர் காரியாலயத்தை அமைச்சர் ரவி கருணாநாயக்க திறந்து வைத்துள்ளார்.

ஆயினும், இந்த நிகழ்வுக்கு ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் அழைக்கப்பட்டிருக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இருந்த போதும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த – தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். இஸ்மாயில் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.

இதனால், மேற்படி கட்டடத் திறப்பு விழா விவகாரத்தில் – ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அசிங்கப்பட்டுப் போயுள்ளார் என்றும் விமர்சங்கள் எழுந்துள்ளன.

மேலும், குறித்த கட்டடத் திறப்பு விழாவுக்கு ராஜாங்க  அமைச்சர் ஹரீஸை அழைப்பதில்லை என்கிற முடிவோடிருந்த, கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் காரியாலய அதிகாரிகள், தமது திட்டத்தில் வெற்றியடைந்து விட்டனர் எனவும் கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்