தீவு ஒன்றையே விலைக்கு வாங்கத் துணிந்த ‘போதை’ ராஜா

🕔 February 28, 2019

– எழுதுபவர் ஆர். சிவாராஜா –

மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்கள் இன்று வியாழக்கிழமை டுபாய் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படக் கூடுமென சொல்லப்படுகிறது

முன்னதாக அவர்கள் ஆஜர் செய்யப்படும் திகதிகள் தொடர்பில் வந்த தகவல்கள் தவறானவை. நேற்று அவர்கள் ஆஜர் செய்யப்படுவார்கள் என்று வந்த ஒரு தகவலையடுத்து, டுபாய் பொலிஸுக்கு செல்ல டுபாயில் உள்ள மதுஷ் ஆதரவு சட்டத்தரணிகள் முயற்சிகள் எடுத்தனர் என்றும் ஒரு தகவல்.

டுபாய் நீதிமன்றத்தில் அவர்கள் இன்று ஆஜர் செய்யப்பட்டாலும், இன்னும் ஒரு மாத காலத்துக்கு அவர்களை தடுத்து வைத்து விசாரிக்க டுபாய் பொலிஸ் அனுமதி கோரவுள்ளதாக சொல்லப்படுகிறது.

ரத்தினக்கல் கொள்ளை விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

கொள்ளையிட்ட ‘பொலிஸ்’

கொள்ளைக்கு சென்ற ரீமை இரண்டாக பிரித்த மதுஷ், வாடிக்கையாளராக செல்ல ஒரு ரீமும் அவர்களை மடக்கும் பொலிஸாக நடிக்க மற்ற ரீமையும் தயார் செய்துள்ளார்.

ஒரு குழுவுக்கு தெரியாமல் மற்ற குழு செயற்படுவதை கண்காணித்த மதுஷ், பொலிஸாக சென்ற குழுவிடம் விடுத்த எச்சரிக்கை; “யாரின் உயிருக்கும் ஆபத்தில்லாமல் கேமை முடியுங்கள்” என்பதுதான்.

ஒஸ்ட்ரிய பிரஜையுடன் சென்ற முதல் குழு – வாடிக்கையாளராக சென்றது. அவர்கள் ரத்தினக்கல்லை ஆராய்ந்து கொண்டிருந்தபோது, திடீரென பொலிஸ் சீருடையுடன் புகுந்த மற்ற குழு, இந்த வெள்ளையர் இன்ரநெஷனல் கொள்ளைக்காரர் என்றும் அவருக்கு இன்ரபோல் ரெட் நோட்டீஸ் இருப்பதால் அவரை கைது செய்வதாகவும் கூறி விலங்கை மாட்டியுள்ளது.

அதேசமயம் ரத்தினக்கல் வர்த்தகரை தாக்கி அவர் கையில் இருந்த கல்லையும் எடுத்து வெள்ளையர் மற்றும் அவருடன் இருந்த தரகரையும் வேனில் ஏற்றி மஹரகமயில் இறக்கிவிட்டு சென்றது குழு.

ஒஸ்ட்ரிய வெள்ளையர் – மதுஷின் நட்பு வட்டாரத்தில் உள்ளவர் என்றபடியால், அவருக்கு கொடுக்கப்பட்ட வேலை கல்லை பார்வையிடுவது மட்டுமே. ஆனால் அவரை அழைத்து சென்ற தரகருக்கு இதன் பின்னணியில் மதுஷின் கை இருப்பது தெரியாது.

  1. ரத்தினக்கல் வியாபாரியிடம் தரகராக செல்லும் ஒருவருடன், தனது ஆள் ஒருவரை முதலில் இணைப்பது அதுவே இந்த வெள்ளையர்.
  2. பின்னர் இன்னொரு போலி பொலிஸ் ரீமை அனுப்பி அவர்களை மடக்குவது.

இதுவே மதுஷின் மாஸ்டர் ப்ளான்.

இப்படி மஹரகமவில் இறக்கப்பட்ட வெள்ளையரும் அந்த தரகரும், கொள்ளையிடப்பட்ட ரத்தினக்கல் வர்த்தகரின் வீட்டுக்கு மீண்டும் வந்துள்ளனர்.

அதற்கிடையில் வர்த்தகர் பொலிஸுக்கு தகவல் கொடுத்திருந்தார். அப்போதே மதுஷின் கேம் வெள்ளையருக்கு தெரியவந்துள்ளது. ஆனால் அதனை கட்டிக்கொள்ளாத அவர், பயந்தவர் போல நடித்து வெளியில் வந்து ஓரிரு நாளிலேயே இங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.

பொலிஸ் வேடத்தில் வந்து கொள்ளையிட்ட ரீம், கையில் கல் கிடைத்த கையோடு மதுஷிடம் தொலைபேசியில் விடயத்தை சொன்னது.

“யாருக்கும் பாதிப்பில்லாமல் கேமை முடித்தீர்கள்” என்று அவர்களை அப்போது பாராட்டியுள்ளார் மதுஷ்.

இந்த பின்னணி எதுவும் தெரியாமல் வெள்ளையரை அழைத்து சென்ற தரகரிடம்,  நேற்று முன்தினம் பொலிஸ் வாக்குமூலம் பெற்றுள்ளது.

இப்போதும் தொடரும் மிரட்டல்

மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், கடந்த வாரம் ரத்தினக்கல் சொந்தக்காரருக்கு டுபாயில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளதாக தகவல்.

“நீ மிகவும் துள்ளுகிறாய். உனது ஆட்டத்தை நிறுத்திக் கொள். நல்ல விதத்தில் சொல்கிறோம்” என்று, அந்த அழைப்பில் சொல்லப்பட்டுள்ளது. அதுபற்றி விசாரணைகள் நடக்கின்றன.

மறுபுறம் இந்த ரத்தினக்கல்லை சவூதியில் வேலை செய்யும்போது, அங்குள்ள குப்பை மேடு ஒன்றில் இருந்து எடுத்து குரியர் மூலம் இலங்கைக்கு அனுப்பியதாக சொல்லியுள்ளார் – ரத்தினக்கல்லை பறிகொடுத்த வர்த்தகர். அதன் உண்மைத்தன்மை குறித்தும் ஆராயப்படுகிறது.

காட்டிக் கொடுக்கும் போட்டி

மதுஷ் மற்றும் சகாக்கள் கைது செய்யப்பட்ட பின்னர், அவர்களின் இதர சகாக்கள் மத்தியில் ஒரு போட்டி உருவாகியுள்ளது.

அதன் விளைவாக ஆளையாள் காட்டிக் கொடுப்பதன் எதிரொலியாகவே, மதுஷின் சகாக்கள் பலர் கைது செய்யப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

அதேசமயம் மதுஷின் பணத்தை பெற்று வியாபார நடவடிக்கைளில் ஈடுபட்ட பலர், அதிலிருந்து தப்பிக்க காட்டிக்கொடுப்பு வேலைகளையும் செய்வதாக தெரிகிறது.

கைது செய்யப்பட்டுள்ள மதுஷின் சகாக்கள் பலரிடம் இருந்து கிடைக்கும் தகவல் மூலம், இப்படியானவற்றை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தென்மாகாணத்தில் மதுஷின் பணம் தினமும் வட்டிக்கு கொடுக்கப்பட்டு வந்த நிலையில், அவற்றை செய்த பலர் தலைமறைவாகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தீவு வாங்கத் திட்டம்

தனது பணத்தை கொண்டு ஐரோப்பாவில் குடியேற மதுஷ் திட்டமிட்டதாக வெளிவந்த செய்திகள் குறித்து முன்னர் கூறியிருந்தேன். அதேபோல் அவர் – தீவு ஒன்றை விலைக்கு வாங்கவும் திட்டமிட்டிருந்ததாக, புதிய தகவல்கள் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதேபோல் மதுஷ் தரப்புடன் தொடர்பு வைத்திருந்த யாழ்ப்பாண வர்த்தக பிரமுகர் ஒருவர் குறித்தும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன…

அவர் விசாரணை வலையில் சிக்கியுள்ளார்.

மதுஷ் தொடர்பான முன்னைய பதிவு: இரவில் நடக்கும் அதிரடி ஆட்டம்; ஓடி ஒளியும் மதுஷின் சகாக்கள்: தொடர்கிறது வேட்டை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்