கிழக்குப் பல்கலைக்கழக மாணவிகள் மீதான பகிடிவதையும், உரத்து எழும் கண்டனங்களும்: ஆராய்கிறது புதிது

🕔 February 24, 2019

– மப்றூக் –

பெருந்தொகையான பெண் மாணவிகளை விரட்டி விரட்டி, அவர்கள் மீது ஆண் மாணவர்கள் சிலர், நீரை இறைக்கும் காட்சிகளைக் கொண்ட வீடியோ ஒன்று, ‘பேஸ்புக்’கில் வைரலாகப் பரவி வருகிறது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்களே, அங்குள்ள கனிஷ்ட மாணவியர்கள் மீது, இவ்வாறு நடந்து கொண்டதாக அந்த வீடியோ குறித்து விபரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த சம்பவம் கிழக்குப் பல்கலைக்கழகத்தில்தான் இடம்பெற்றது என்பதை, அங்குள்ள மாணவர்கள் மூலம் ‘புதிது’ செய்தித்தளம் உறுதிப்படுத்திக் கொண்டது.

Bபக்கட்டிங்

இந்த வீடியோ குறித்து தென்கிழக்குப் பல்கலைக்கழத்தின் விரிவுரையாளர் ஒருவருடன் நாம் பேசிய போது, Bபகட்டிங் (bucketing) என்கிற இந்த நீரிறைக்கும் செயற்பாடானது, பல்கலைக்கழகங்களில் பகிடிவதையின் ஓர் உப கலாசாரமாக உள்ளது என்று கூறினார்.

எவ்வாறாயினும் பல்கலைக்கழகங்களில் பகிடிவதை தடைசெய்யப்பட்ட நிலையில், அதன் உப கலாசாரமான நீரிறைத்தலை எவ்வாறு அனுமதிக்க முடியும் எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

பகிடிவதையும், தண்டனையும்

கல்வி நிறுவனமொன்றின் மாணவருக்கோ ஊழியருக்கோ உடல் அல்லது உள ரீதியாக ஊறுவிளைவிக்கும் அல்லது மனவலியையோ அச்சத்தையோ ஏற்படுத்தும் எந்தவொரு செயலும், இலங்கையில் – பகடிவதை (Ragging) என அழைக்கப்படுகின்றது.

அந்த வகையில், குறித்த வீடியோவில், நீர் இறைக்கப்படும் மாணவியர்கள், அதற்கு அச்சப்பட்டு விரண்டு ஓடுவதைக் காண முடிகிறது. அப்படிப் பார்க்கும் போது, இந்த நடவடிக்கையினை பகிடிவதையாகவே கருத வேண்டியுள்ளது எனப் பலரும் கருத்துத் தெரிவிக்கின்றர்.

1998ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க சட்டத்தின் கீழ், பகிடிவதைகள் மற்றும் கல்வி நிலையங்களில் நடைபெறும் ஏனைய வன்செயல்கள் தொடர்பான விடயங்கள், குற்றம் எனக் கூறப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, பகிடிவதையை மேற்கொள்ளும் ஒருவருக்கு 10 வருடங்கள் வரை சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்டவருக்கு பொருத்தமான நட்டஈட்டையும் நீதிபதி வழங்க முடியும்.

உபவேந்தர் கருத்து

இந்த நிலையில், கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எப்.சி. ராகலுடன் தொடர்பு கொண்டு நாம் பேசிய போது, அவ்வாறான ஒரு வீடியோ இதுவரை தனது பார்வைக்கு எட்டவில்லை என்று கூறினார்.

எவ்வாறாயினும், வீடியோவில் உள்ளதாகக் கூறப்படுகின்றமை போல் ஒரு நிகழ்வு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றிருந்தால், அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், பகிடிவதைக்கு எதிரான சட்டத்தின் பிரகாரம், குறித்த மாணவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கண்டனங்கள்

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றினை இட்டிருக்கும் சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட்; ‘ கிழக்கு பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவிகள் மிகவும் அநாகரீகமாக – ஆண் மாணவர்களால் ‘ராக்கிங்’ செய்யப்பட்டிருக்கிறார்கள். நேரடிக்காட்சிகளை வலைத்தளங்களில் காணலாம். உயர்கல்வி அமைச்சரும் கிழக்கு ஆளுநரும் பொலிஸ் மற்றும் நிர்வாக சட்ட நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவார்களா?’ என, கேள்வியெழுப்பியுள்ளார்.

பெண் மாணவிகள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள மேற்படி பகிடிவதையினை, காட்டு மிராண்டித்தனமானது என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இனரீதியான செயற்பாடல்ல

இது இவ்வாறிருக்க, கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள மாணவர்கள் சிலரிடம் ‘புதிது’ செய்தித்தளம் பேசியபோது, முஸ்லிம் மாணவியரை மட்டும் குறி வைத்து இந்த செயற்பாடு நடைபெற்றவில்லை என்றும்,  எல்லா இன மாணவர்கள் மீதும் Bபகட்டிங் (bucketing) என்கிற இந்த நீரிறைக்கும் செயற்பாட்டினை சிரேஷ்ட மாணவர்கள் புரிந்ததாகவும் தெரிவித்தனர்.

மட்டுமன்றி, முஸ்லிம் மாணவிகளை மட்டும் குறிவைத்து இந்தப் பகிடிவதை மேற்கொள்ளப்படவில்லை என்பதை, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட முஸ்லிம் மாணவிகள் சிலரும் ‘புதிது’ செய்தித்தளத்திடம் உறுதிப்படுத்தினர்.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்