அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சம்சுதீன் நியாஸ், சுங்கப் பணிப்பாளராக பதவி உயர்வு

🕔 February 13, 2019

– அஹமட் –

ட்டாளைச்சேனையைச் சேர்ந்த சம்சுதீன் நியாஸ், சுங்கப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். சுங்கத் திணைக்களத்தில் பிரதிப் பணிப்பாளராக பதவி வகித்து வந்த இவர், இன்று புதன்கிழமை தொடக்கம் சுங்கப் பணிப்பாளராக பதவி உயர்தப்பட்டுள்ளார்.

1983 ஆம் ஆண்டு போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து – சுங்க அதிகாரியாக நியமனம் பெற்ற இவர், அதன் பின்னர் – படிப்படியாக முன்னேறி தற்போது பணிப்பாளராக உயர்வு பெற்றுள்ளார்.

தனது ஆரம்பக் கல்வியை அல்முனீரா வித்தியாலயத்தில் தொடங்கிய இவர், அதன் பின்னர் சிறிதுகாலம் அட்டாளைச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலயம் சென்றார். பிறகு, ஆறாம் வகுப்பிலிருந்து உயர்தர வகுப்புவரை யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியில் கற்றார் .

முன்னைநாள் கல்விப் பணிப்பாளரும், அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் முதல் பட்டதாரியுமான மர்ஹூம் சம்சுதீன் அவர்களின் கனிஷ்ட புதல்வரான நியாஸ் , சட்டமாணி (LLB), சட்ட முதுமாணி (LLM) பட்டங்களையும் பெற்றுள்ளார்.

மேலும், ‘CASE LAWS OF CUSTOMS’ எனும் நூலையும் இவர் எழுதியுள்ளார்.

இந்தப் பதவி உயர்வினால், சுங்க திணைக்களத்திலுள்ள முஸ்லிம் அதிகாரிகளில், அதி உயர் பதவியை இவர் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பொத்துவில் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் எம்.ஏ. ஜலால்தீன், இவரின் சிறிய தந்தை என்பதும் நினைவுகொள்ளத்தக்கதாகும்.

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த  சட்டக் கலாநிதி யூ.கே.எம். இஸ்மாயில் என்பவரும், முன்னர் சுங்கப் பணிப்பாளராக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Comments