ராஜாங்க அமைச்சர் ஹரீஸின் ஏற்பாட்டில், உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்ட செயலமர்வு

🕔 February 12, 2019
– அகமட் எஸ். முகைடீன் –

லக வங்கி, ஐரோப்பிய யூனியன் மற்றும் இலங்கை அரசு என்பவற்றின் விகிதாசார அளவிலான நிதிப் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ள உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டம் (எல்.டீ.எஸ்.பி) தொடர்பான அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான சிங்கள மொழி மூலமான செயலமர்வு நேற்று திங்கட்கிழமை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன் தலைமையில் அம்பாறை வாடி வீட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி ராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் ஏற்பாட்டில் அவரது பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இச்செயலமர்வில் உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி ராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ்.டீ.ஏ.பீ. பொறலஸ்ஸ, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி ராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் அப்துல் மஜீட், எல்.டீ.எஸ்.பி திட்ட பணிப்பாளர் தர்சன சமரகோன், கிழக்கு மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம். இர்சாத், அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜி.எம். றாபி, இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, முஹம்மட் ரவூப் உள்ளிட்ட பதியதலாவ, நாமல் ஓயா, லகுகல, மஹாஓயா, தெஹியத்தகண்டிய, உஹன, தமண ஆகிய பிரதேச சபைகள் மற்றும் அம்பாறை நகர சபை ஆகியவற்றின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சித்துறையில் உள்ள வளங்களை வலுவூட்டுவதன் மூலம் வெளிப்படையாகவும் பொறுப்புடனும் கூடிய திட்டங்களை வழிநடத்தி மாகாணங்களுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குதல் மற்றும் அப்பிரதேசங்களின் பொருளாதார அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் சமூகத்துக்கு சேவையாற்றுதல் என்ற நோக்கில் இத்திட்டம் உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் கிராமிய வீதிகள் மற்றும் பாலங்கள், வாராந்த சந்தை, வடிகான்கள், சுகாதார மத்திய நிலையம், வாகன தரிப்பிடம், பல்நோக்கு கட்டடம், சிறுவர் பூங்கா, நீர் விநியோக திட்டங்கள், விளையாட்டு மைதானம், கிராமிய வியாபார நிலையங்கள் போன்றன அமைப்பதற்கும் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் கீழ்வரும் விடயங்களுக்குட்பட்ட பயன்பெறு திட்டங்களையும் முன்னெடுக்க முடியும்.

வட மாகாணத்தில் 34 உள்ளூராட்சி மன்றங்களும் வட மத்திய மாகாணத்தில் 27 உள்ளூராட்சி மன்றங்களும் கிழக்கு மாகாணத்தில் 45 உள்ளூராட்சி மன்றங்களும் ஊவா மாகாணத்தில் 28 உள்ளூராட்சி மன்றங்களுமாக தெரிவு செய்யப்பட்ட 134 உள்ளூராட்சி மன்றங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சி மன்றங்களின் சனத்தொகை பரம்பலுக்கு அமைவாக, ஓர் உள்ளூராட்சி மன்றத்துக்கு ஆக்கூடுதலாக 100 மில்லியன் ரூபாவும் குறைந்தளவாக 80 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் இதன்போது தெரிவித்தார். இவ்வபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஏப்ரல் மாதமளவில் ஆரம்பித்து 04 வருடங்களுக்குள் பூரணப்படுத்தப்பட வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்