நசீரின் தேசியப்பட்டியல் ஒரு வருடத்துக்கு மட்டுமானது; காலம் நெருங்குவதை உணர்த்தி, மு.கா. பிரதிச் செயலாளர் ‘பேஸ்புக்’ பதிவு

🕔 January 30, 2019

– அஹமட் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஏ.எல்.எம். நசீருக்கு வழங்கப்பட்ட பதவி, ஒரு வருடத்துக்கு மட்டுமானது எனும் பேச்சு கட்சிக்குள் இருந்து வரும் நிலையில், அதனை உறுதிப்படுத்துவது போல், மு.காங்கிரசின் பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ. காதர், ‘பேஸ்புக்’ பதிவொன்றினை இட்டுள்ளார்.

கடந்த வருடம் ஜனவரி 25ஆம் திகதி, உள்ளுராட்சித் தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நசீருக்கு, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மு.காங்கிரஸ் வழங்கியது.

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவேன் என்று, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் பல தடவை வாக்குறுதியளித்திருந்தும், அதனை நிறைவேற்றாத நிலையில், இம்முறையாவது குறித்த பதவியை வழங்க வேண்டும் என்று, அட்டாளைச்சேனை மு.கா. ஆதரவாளர்கள் விடாப்பிடியாக இருந்தனர்.

அவ்வாறு ஹக்கீம் தனது வாக்குறுதியை நிறைவேற்றாது விட்டால், உள்ளுராட்சித் தேர்தலில் மு.காங்கிரஸ் மண் கவ்வும் என்கிற பயமும் மு.காங்கிரசுக்குள் இருந்தது.

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் நசீருக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஹக்கீம் வழங்கினார்.

மு.காங்கிரஸ் தலைவர் ஹக்கீமுடைய நெருங்கிய நண்பர் எம்.எச்.எம். சல்மானுக்கு வழங்கப்பட்டிருந்த தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றெடுத்தே, அதனை நசீருக்கு ஹக்கீம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நசீருக்கு வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, ஒரு வருடத்துக்கு மாத்திரமானதாகும் என்று, அப்போதே அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

ஒரு வருடத்தின் பின்னர் தனக்கு வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நசீர் ராஜிநாமா செய்து – கட்சிக்கு வழங்க வேண்டும் என்கிற உடன்பாட்டின் அடிப்படையிலேயே, அந்தப் பதவி அவருக்கு கிடைத்ததாகவும் பேச்சுக்கள் எழுந்தன.

இவ்வாறான பின்னணியில், தற்போது மு.காங்கிரசின் பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ. காதர், சில நாட்களுக்கு முன்னர் எழுதியிருந்த ‘பேஸ்புக்’ பதிவொன்று, நசீருக்கு வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, ஒரு வருடத்துக்கு மட்டுமானது என்பதை உறுதிப்படுத்துவது போல் அமைந்துள்ளதாக, கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் கூறினார்.

‘ஓராண்டு முடியும் தறுவாயில், அட்டாளைச்சேனை பாராளுமன்றப் பிரதிநிதித்துவம்’ என்று, கடந்த வெள்ளிக்கிழமை மன்சூர் ஏ. காதர், பேஸ்புக்கில் பதிவொன்றினை இட்டிருந்தார்.

நசீருக்கு வழங்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய காலம் நெருங்குவதை நினைவுபடுத்துகின்றமை போலவே, பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ. காதரின் இந்தப் பதிவு அமைந்துள்ளது எனவும், மு.காங்கிரசின் மேற்படி முக்கியஸ்தர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்