வைராக்கிய மனிதர்

🕔 January 29, 2019

– முகம்மது தம்பி மரைக்கார் –

சுற்றிவர முட்கம்பி வேலியிடப்பட்ட ராணுவ முகாம். ஆங்காங்கே ராணுவத்தினரின் கட்டடங்களும் பாதுகாப்புக் காவலரண்களும் அமைந்திருக்கின்றன. இவற்றின் இடையே இருக்கின்ற சிறியதொரு ஓலைக்குடிசையில், தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார் மிஸ்பாஹ்.

அஷ்ரப் நகரில் ராணுவத்திடம் தங்கள் காணிகளைப் பறிகொடுத்தவர்கள், அங்கிருந்து கவலையோடு வெளியேறியபோது, “உயிர் போனாலும், எனது இடத்தை விட்டுப் போக மாட்டேன்” என்று உறுதிபடச் சொல்லி, ராணுவ முகாமுக்குள் அகப்பட்டுக் கொண்ட தனது வாழ்விடத்திலேயே, குடும்பத்துடன் இன்னும் இருக்கின்றார் மிஸ்பாஹ்.

தனது நிலத்தை விட்டுக் கொடுப்பதில்லை என்கிற வைராக்கியத்துடன், இவ்வாறு தன்னுடைய வீட்டிலேயே வாழ்ந்து வருவதன் பொருட்டு,  மிஸ்பாஹ் எதிர்கொண்ட அச்சுறுத்தல்களும் பிரச்சினைகளும் கொஞ்ச நஞ்சமல்ல.

மிஸ்பாஹ்வுக்கு இப்போது 59 வயதாகிறது. மனைவி, 13 பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். பிள்ளைகளில் ஏழு பேர் ஆண்கள்; ஆறு பேர் பெண்கள்.

அஷ்ரப் நகரில், சேனைப்பயிர் செய்கையில் ஈடுபட்டு, கௌரவமாக வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்த போதுதான், அந்த மக்களின் நிலத்தை, ராணுவம் அபகரித்துக் கொண்டது.

மிஸ்பாஹ்வை, அவருடைய இருப்பிடத்தில் சந்தித்துப் பேசியபோது,  கடந்த எட்டு வருடங்களாக, தான் எதிர்கொண்டு வந்த துயரங்களை பகிர்ந்து கொண்டார்.

“என்னையும் எனது குடும்பத்தையும் இங்கிருந்து விரட்டிவிட வேண்டும் என்பதற்காக, ராணுவத்தினர் பல்வேறு அட்டகாசங்களில் ஈடுபட்டனர். மாலை 6.00 மணியானால், குடிசையை விட்டு, நாங்கள் வெளியே போகக் கூடாது என்று, அவர்கள் கட்டளையிட்டார்கள். அதனால், வெளியே சென்று தண்ணீர் எடுத்து வரக்கூட முடியாமலிருந்தது; தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்குச் செல்ல முடியவில்லை; அவசரத் தேவைகளின் நிமித்தம் கடைகளுக்கோ, வேறு இடங்களுக்கோ, மாலை 6.00 மணிக்கு பிறகு, எங்களால் செல்வதற்கு முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டோம்”.

“ஒரு நாள் இரவு, நாங்கள் தூங்கிக் கொண்டிருந்த போது, எங்கள் குடிசையின் கதவை ராணுவத்தினர் உடைத்து, உள்ளே வர முயன்றார்கள். அப்போது நாங்கள் சத்தமிட்டுக் கத்தினோம். அவர்கள் ஓடி விட்டார்கள்.

மறுநாள் காலை, அந்தச் சம்பவம் தொடர்பில், முறைப்பாடு செய்வதற்காக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் சென்றோம். அங்கு ராணுவத்துக்குச்  சார்பாக, பொலிஸார் நடந்து கொண்டனர். ராணுவத்தினரை நிலையத்துக்கு அழைத்த பொலிஸார், எங்கள் முறைப்பாட்டைப் பதிவு செய்யாமலேயே, அதே ராணுத்தினரின் வாகனத்தில் எங்களை ஏற்றி அனுப்பி வைத்தார்கள்” என்று, தான் எதிர்கொண்ட கஷ்டங்களை மிஸ்பாஹ் விவரித்தார்.

இப்படி ஏராளமான கெடுபிடிகளுக்கு மத்தியில்தான், பெண் பிள்ளைகள், மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருடன், கடந்த எட்டு வருடங்களையும் மிஸ்பாஹ் கடத்தியுள்ளார்.

ராணுவத்தினர், தமது காணிகளை அபகரித்துக் கொண்டமைக்கு எதிராகவும் தொடர்ச்சியாக ராணுவத்தினர், தமக்கு அச்சுறுத்தல் விடுத்து வந்தமையைக் கண்டித்தும், மிஸ்பாஹ் உட்பட பாதிக்கப்பட்ட மூவர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தார்கள்.

மேலும், பாதிக்கப்பட்ட 69 குடும்பங்கள் சார்பாக, தங்கள் காணிகளைப் பறிகொடுத்த ஆதம்பாவா இப்றாலெப்பை, அகமது லெப்பை கதீஜா உம்மா ஆகிய இருவர், உயர்நீதிமன்றில் 2012ஆம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அந்த வழக்கில், நீதிமன்றம் கட்டளையொன்றைப் பிறப்பித்திருந்தது. நாட்டினுடைய பாதுகாப்பின் பொருட்டு, ராணுவ முகாம் அமைப்பதற்காக அந்தக் காணிகள் தேவைப்படுமாயின், குறித்த காணிகளின் உரிமையாளர்கள் விரும்பிய இடத்தில், சகல வசதிகளும் கொண்ட மீள்குடியேற்றமொன்றை உருவாக்கிக் கொடுக்குமாறு, நீதிமன்றம் கட்டளையிட்டது.

இதையடுத்து, “அஷ்ரப் நகர் கிராமத்திலுள்ள சுமார் ஒன்றரை ஏக்கர் நிலத்தில், ஐந்து குடிசைகளை அமைத்த ராணுவம், அங்கு சென்று எங்களைக் குடியேறுமாறு, கேட்டுக்கொண்டது. ஆனால், காணிகளை இழந்தவர்கள் எவரும், அங்கு சென்று குடியேறவில்லை” என்றார் மிஸ்பாஹ்.

அஷ்ரப் நகரில் பொதுமக்களின் காணிகளை, ராணுவம் கைப்பற்றியபோது, அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த வீடுகள் எவையும் இப்போது இல்லை. “அனைத்தையும் ராணுவத்தினர் அழித்து விட்டார்கள்” என்று மிஸ்பா கவலையோடு கூறினார்.

அந்த இடத்தில், பொதுமக்களின் வாழ்விடம் என்று, இப்போது மிஸ்பாஹ்வின் குடிசை மட்டுமே எஞ்சியிருக்கிறது. அடிப்படை வசதிகள் எவையுமற்ற அந்தக் குடிசைக்குள்தான் மிஸ்பாஹ்வின் ‘பெரிய’ குடும்பம் வாழ்கிறது என்கிற தகவல் கவலையளிப்பதாக உள்ளது.

மிஸ்பாஹ்வை சந்தித்த போது, அவரின் மகள் பாத்திமா சாஜிதா என்பவருடனும் பேசக் கிடைத்தது. தனது பாடசாலைக் கல்வி, இந்தக் காலகட்டத்தில் தடைப்பட்டு விட்டதாக அவர் கவலையுடன் கூறினார்.

“ராணுவ முகாமுக்குள் எங்கள் காணியும் வாழ்விடமும் சிக்கிக் கொண்டதால், எங்களுடைய தொழிலான சேனைப் பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்கும் வீடு ஒன்றைக் கட்டிக் கொள்வதற்கும் வாப்பாவால் முடியாமல் போய்விட்டது” என சாஜிதா கூறினார்.

அதனால், தமது குடும்பத்துக்கும் அஷ்ரப் நகரில் ராணுவத்தினரிடம் காணிகளைப் பறிகொடுத்தோருக்கும் அடிப்படை வசதிகளைக் கொண்ட வீட்டுத் தொகுதியொன்றை, அரசாங்கம் அமைத்துத் தரவேண்டும் என்கிறார் சாஜிதா.

நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை (29 ஜனவரி 2019)

தொடர்பான கட்டுரை: லாயக்கு 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்