அரசியலமைப்பு மாற்றம்: முஸ்லீம்களை கைகட்டி நிற்பவர்களாக மாற்றும்

🕔 January 25, 2019

– ஐ.எம்.ஹாரிப் (ஐக்கிய சமாதான கூட்டமைப்பு) –

மாகாண சபைகளுக்கான  அதிகாரப் பரவலாக்கத்தினை அதிகரிக்கும் வகையில் அதிகாரத்துக்கான வரைவுகளை அதிகரித்து, நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரப்படவுள்ள, புதிய அரசியலமைப்பு மாற்றமானது, மாகாணமே இல்லாத முஸ்லீம்களுக்கு 09 மாகாணத்திலும் கைகட்டி,  கையேந்தி  நிற்கவேண்டிய ஒரு நிலைப்பாட்டினை  ஏற்படுத்தும்.

சம்பந்தன் மற்றும் சுமந்திரன் போன்றோர்  14 ஆசனங்களை நாடாளுமன்றத்தில் வைத்துக் கொண்டு, அரசாங்கத்தை இறுக்கிப் பிடித்து புதிய அரசியலமைப்பினை கொண்டு வர மிகவும் பக்குவமாக செயல் படுகின்றார்கள் என்று சொல்வதை விட, பல அழிவுகளையும் தாண்டி இன்று இருக்கின்ற தமிழ் மக்களின் எதிர்காலத்தை  மனதில் வைத்துக் கொண்டு செயற்படுகின்றார்கள் என்பது – மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

அதே போல் எமது சமூகமும் 21 ஆசனங்களை பாராளுமன்றத்தில்  வைத்துக் கொண்டு, அரசாங்கத்தின் பிடியில் இறுகி, எதுவுமே செய்ய முடியாதவர்களாய் உள்ளனர் என்று சொல்வதை விட, பல அழிவுகளையும் தாண்டி இன்று இருக்கின்ற முஸ்லீம்களின் எதிர்காலத்தை மறந்து செயல்படுகிறார்களோ? என்றே விமர்சிக்கத் தோன்றுகிறது.

அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பாக ஏனைய சகோதர தரப்புக்களினால் பலவகையான விமர்சனங்கள் முன்வைக்ப்பட்டுக் கொண்டிருக்கும் இச்சூழ்நிலையிலும்  கூட, முஸ்லிம்  தரப்பினர் மௌன விரதம் இருப்பது எமக்கு அச்சத்தினை அதிகரிக்கிறது

அரசியலமைப்பில் புதிய   மாற்றங்கள் வரும் போது, அது   சமூகத்தில் புரிந்துணர்வுள்ள நல்ல மாற்றங்களைக் கொண்டு வருதல் வேண்டும். ஆனால் 1942 ல் இருந்து கிட்டத்தட்ட 19  தடவை கொண்டு வரப்பட்ட  அரசியலமைப்பு மாற்றங்களானது, நல்லதே நடக்கும் என்ற எதிர்பார்ப்பிற்கு எதிராகவே காணப்பட்டது.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களினால் எமது  சமூகத்துக்கென இருந்தவை கூட இல்லாமல்  போனது. எமது நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த காலப் பகுதியில் கிழக்கில் முஸ்லீம்களுக்கென காணப்பட்ட பிரதேசங்களும், எல்லைகளும், காணிகளும், அதிகாரங்களும் இன்றில்லை. 1956 ம் ஆண்டு அம்பாறை எனும் ஒரு மாவட்டம் கிழக்கில் உருவானது என்பதும் இதில்  ஒரு முக்கிய அம்சமாகும்.

அரசியலமைப்பு மாற்றங்களானது எமது சமூகத்தினைப் பொறுத்த வரையில் ஒரு கடலரிப்பாகவே செயற்படுகிறது. கடலரிப்பால் நிலத்தை இழப்பது போல் அரசியலமைப்பு மாற்றமானது பல பகுதிகளில், பல விடயங்களை எமது சமூகத்துக்கு பாதகமாக மாற்றிக் கொண்டே வருகிறது. இனியும் அதே போன்றுதான் நடக்கவும் போகிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்களுமில்லை. அதிலும் 1972 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சிலோனை  ஸ்ரீலங்காவாக  மாற்றிய  அரசியலமைப்பு மாற்றமானது  எமது நாட்டினை ஒரு பயங்கரவாத, யுத்த நாடாக மாற வழியமைத்துக் கொடுத்தது என்றாலும் தவறில்லை.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு வழங்கும் அவர்களது ஆதரவினை பேரம்பேசும் சக்தியாக வைத்துக் கொண்டு செயற்படுவதனால், அவர்களது சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஏதோ ஒரு வகையில் குரல் கொடுப்பவர்களாக இருக்கின்றனர்.  ஆனால் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரம் பேசப்பட்ட – அரசாங்கத்தின் பங்காளிகளாக இருப்பதனால், கொண்டுவரப்படவுள்ள அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக அரசாங்கத்திடம் விளக்கத்தினை கேட்கவோ அல்லது  மக்களுக்கு இது தொடர்பான விளக்கத்தினை வழங்கவோ முடியாதவர்களாக மாறிவிட்டனர்.

மக்கள் வாக்களிக்கும் இயந்திரங்கள் அல்ல என்பதனைப் புரிந்து கொண்டு, புதிய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக, தெளிவான விளக்கங்களை எமது மக்களுக்கு, சம்பந்தப்பட்டவர்கள் வழங்க வேண்டும். மக்கள் அதனுடைய நல்லது கெட்டதுகளை  தெளிவாக விளங்கி முடிவெடுக்கும் உரிமையினை மக்கள் பிரதிநிதிகள் எனக் கூறி  கொள்வோர் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

அண்மையில் வழங்கப்பட்ட முஸ்லீம் ஆளுநர்கள் விடயத்தில் நமது தமிழர்களும், பேரினவாதக் கட்சிகளும் அவர்களது விருப்பமின்மையினை, அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்ற மனநிலையினை வெளிப்படுத்தியதை ஊடகங்கள் ஊடாக தெரிந்து கொண்டோம். நிலைமை இப்படி இருக்கும் போது, கிழக்கில் கரையோர மாவட்டத்தையோ அல்லது நிலத் தொடர்பற்ற இந்தியாவின்  பாண்டிச்சேரியினை ஒத்த மாகாணம் அல்லது அலகினையோ முஸ்லிம்களுக்கு தர யார் சம்மதிக்கப் போகிறார்கள்?

மேலும்,எமது சமூகத்துக்கு அதனை பெற்றுத்  தரவும் யாருமில்லை, மர்ஹும் அஷ்ரபின் பின்னர் அதனை கேட்டுப் பெறவும் எவருமில்லை.

மக்களே ஒன்றுபட்டு முன்வந்து பெற்றாலே ஒழிய,  முஸ்லீம் தேசியம் எனும் வரத்தினை  வழங்க சாமியும் தயாரில்லை,  பூசாரிக்கும் உடன்பாடில்லை. எனவேதான் மாகாணமே இல்லாத முஸ்லீம்கள் –  மாகாணம் தொடர்பான அரசியலமைப்பு மாற்றத்துக்கு ஆதரவினை வழங்குவது, தங்களது கைகளாலயே தங்களது கண்களை குத்திக் கொள்வதற்கு சமமாகும்.

இந்த நிலையில், தெளிவான விளக்கங்கள் கிடைக்காத வரை,முஸ்லீம்களுக்கு தொடர்ந்து பாதகமாக அமைகின்ற அரசியல் அமைப்பு மாற்றத்துக்கு ஆதரவு வழங்குவது என்பது முடியாத காரியமாக அமையும் என்பதால், ஐக்கிய சமாதான கூட்டமைப்பு இந்த அரசியலமைப்பு மாற்றத்தினை ஏற்றுக் கொள்ளாது என்பதனை அரசாங்கத்துக்கும், மக்களுக்கு தெரியப்படுத்துகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்