ஹபாயா அணிந்து, ஆட்டிக் கொண்டு வரும் ஆசிரியைகளைப் பார்த்து மாணவர்கள் பயப்படுகின்றனர்: மன்ஸுரின் கருத்தால், முஸ்லிம்கள் ஆத்திரம்

🕔 January 20, 2019

கிழக்கின் கல்வி வளர்ச்சி, பின்தங்கியமைக்கு பெண்கள் அணியும் ஹபாயாவும் ஒரு காரணம் என்று, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்ஸுர் கூறியுள்ளமை, முஸ்லிம்கள் மத்தியில் பாரிய ஆத்திரத்தையும், அதிர்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ராஸி முகம்மத், தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தும் ஆக்கமொன்றினை எழுதியுள்ளார். அதனை வழங்குகின்றோம்.

திருகோணமலை ஷண்முகா வித்தியாலயத்தில் ஹபாயா விவகாரத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியைகளோடு குரல்கள் இயக்கம் கடுமையாக போராடிக்கொண்டிருந்தது. பல வேலைப் பளுக்களுக்கிடையிலும், பொருளாதாரச் சிக்கலுக்கிடையிலும் போராடிக் கொண்டிருந்தோம். அச்சந்தர்ப்பத்தில் மன்ஸூர் கல்விப்பணிப்பாளராக வந்தது எங்களுக்கு ஒரு ஆர்வத்தைத் தந்தது.

மனித உரிமை ஆணைக்குழுவில் விசாரணைக்காக மன்ஸூர் வந்திருந்தார். அதுவரைக்கு ஹபாயா விவாகரத்தில் அவர் நியாயமாக நடந்து கொள்வார் என்றுதான் நாங்கள் எல்லோருமே நம்பி இருந்தோம். ஆனால் அன்றுதான் மன்ஸூர் என்பவர் யார் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரிந்தது.

மன்சூர் முற்று முழுதாக ஷண்முகாவின் தரப்பினராக அன்று மாறியிருந்தார் “முஸ்லிம்கள் தமிழர்களிடமிருந்துதான் கல்வி கற்றார்கள். அவர்களின் கலாச்சாரத்தை மதிக்க வேண்டும். நானும் எனது தம்பியும் க.பொ.த. சாதாரண தரத்திலும், உயர்தரத்திலும் இந்துக் கலாச்சாரத்தையே படித்தோம்” என்று ஆரம்பித்த மன்சூர் அத்தோடு நிறுத்தவில்லை.

“கிழக்கின் கல்வி வளர்ச்சி பின்தங்கியதற்கு ஹபாயாவும் ஒரு காரணம்” என்று அவர் கூறியபோது, மனித உரிமை ஆணையகத்தில் இருந்தவர்களுக்கே அது புரியவில்லை.

“எப்படி கல்வி வளர்ச்சிக்கு ஹபாயா தடையாக இருக்கிறது?’’ என்று கேட்டார் விசாரித்தவர்.

“உங்களுக்குத் தெரியாதா. மும்பாய் என்ற ஒரு படம் வந்ததே. அதில் மனிஷா கொய்ராலா கறுத்த ஆடையை அணிந்து கொண்டு அப்படியும் இப்படியும் கையை ஆட்டிக் கொண்டு வருவாளே. அப்படி இந்த ஆசிரியைகள் வரும் போது மாணவர்கள் பயப்படுகிறார்கள்’’ என்றார் மன்சூர்.

இந்தப் பதிலை அங்கிருந்த எவரும் எதிர்பார்க்கவில்லை. கிழக்கு மாகாணத்தின் கல்விப் பணிப்பாளர்; மும்பை படத்தின் மனிஷா கொய்றாலாவையும் முஸ்லிம் ஆசிரியைகளின் ஹபாயாவையும் ஒப்பிட்டுப் பேசுவார் என்று யாரும் நினைக்கவில்லை.

மன்சூர் எவ்வளவு தூரம் ஹபாயாவை வெறுக்கிறார் என்பது எங்களுக்கு அன்றுதான் புரிந்தது. “ஹபாயா விடயத்தில் தமிழர்கள் இசைந்தாலும் மன்சூர் விடமாட்டார்” என்று அன்றே நாங்கள் நினைத்துவிட்டோம்.

‘’எனக்கு இந்த ஆசிரியைகளை மேலதிக ஆசிரியைகள் என்று காட்டி, வேறு பாடசாலைகளுக்கு அனுப்புவது பெரிய வேலை அல்ல’’ என்று, அன்று விசாரணையிலேயே மன்ஸூர் கூறினார். அப்படியே இன்று செய்திருக்கிறார்.

இறுதியாக வெளியே வரும்போது ஆசிரியர்களைப் பார்த்து; ‘’போங்கள். ஷண்முகாக்குப் போய் மீண்டும் பட்டுக்கொண்டு வாருங்கள்’’ என்று மன்ஸுர் கூறினார்.

பின்னர் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அவர் கையெழுத்திட்டு கடிதம் எழுதினார். “இந்த ஆசிரியைகள் அப்பாடசாலைக்குச் செல்ல அனுமதிக்கும் பொழுது, கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் பிரச்சினைகள் உருவாகும். அவர்கள் அப்பாடசாலையின் பொதுமக்களின் நம்பிக்கையை வெல்லவில்லை” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஏனையவர்கள் தங்கள் ஆடைகளை அணிந்து கொண்டுவருவது போல் நாங்கள் எங்கள் ஆடைகளை அணிந்து கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என்பதைத் தவிர, வேறு எதையுமே அந்த ஆசிரியைகள் கேட்கவில்லை.

கல்விப் பணிப்பாளர் மன்ஸுர் முஸ்லிம்களுக்கு சார்பாகச் செயற்படுங்கள் என்று நாம் கேட்கவே இல்லை. நாம் கேட்டதெல்லாம் ஆசிரியைகளின் உரிமைகளைப் பேணுங்கள் என்பது மாத்திரம்தான்.

இன்று அதில் இருந்த இரண்டு ஆசிரியைகளை நாற்பது கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பாடசாலைகளுக்கு இடம் மாற்றியிருக்கிறார் மன்ஸூர். இன்று ஷண்முகா ஹபாயா விடயத்தில் தமிழ்த் தரப்பை விட தடையாக இருப்பவர் மன்ஸூர்தான்.

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் மன்ஸுர் விளையாடிக் கொண்டிருப்பது நான்கு ஆசிரியைகளின் ஆடை விடயத்தில் அல்ல. முழு முஸ்லிம் ஆசிரியைகளின் ஆடை உரிமை மீதாகும்.

முழு நாட்டிலும் அரசாங்கப் பாடசாலைகளில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகளின் கண்ணியமும் கௌரவமும் மானமும் இதில் இருக்கிறது. இதை உதாராணமாகக் காட்டி “கிழக்கிலேயே முஸ்லிம் ஆசிரியைகளை சேலை அணியச் சொல்லும்போது, உங்களால் ஏன் முடியாது” என்று, மாத்தறையில் இருக்கும் ஒரு முஸ்லிம் ஆசிரியைக்கு சொல்வதற்கு எவ்வளவு நேரமாகும்?

இலங்கையில் உள்ள அனைத்து ஆசிரியைகளும் ஹபாயா அணிய முடியாமல் போவதற்கான நிலைக்கு மன்ஸூர் அடித்தளம் இட்டிருக்கிறார். ஒரு மிகப் பெரிய வரலாற்றுத் தவறை இழைத்துக் கொண்டிருக்கிறார். இதனால் எத்தனை அப்பாவிப் பெண் ஆசிரியைகள் பாதிக்கப்படப் போகிறார்கள் என்று அவர் உணரவில்லையா?

Comments

புதிது பேஸ்புக் பக்கம்