கிளிநொச்சி வெள்ள நிவாரண குற்றச்சாட்டு; சதொச மீது பழி சுமத்த வேண்டாம்: தலைவர் தாரீக் கலீல்

🕔 January 16, 2019

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கொழும்பிலிருந்து 10 லொறிகளில் ‘சசொச’வினால் கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொருட்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிக்கப்படவில்லை என்று எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து சதொச நிறுவனத்தின் தலைவர் தாரீக் கலீல் விளக்கமளித்துள்ளார்.

“கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் ஜனாதிபதி  மற்றும் பிரதமர் ஆகியோர் விடுத்த கோரிக்கைக்கிணங்கவே அமைச்சரின் பணிப்புரைக்கமைய சதொச நிறுவனம் இந்த பொருட்களை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர அவசரமாக அனுப்பி வைத்தது.

கிளிநொச்சி அரச அதிபர் இந்த பொருட்களை கொள்வனவு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறைப்படி பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதே உரிய நடைமுறை. எனினும், அரச அதிபர் அந்த நடைமுறைக்கு மாற்றமாகச் செயற்பட்டு சதொச அனுப்பி வைத்த பொருட்களான அரிசி, மா, சீனி, கடலை, சோயா, ரின்மீன், பிஸ்கட், தண்ணீர்போத்தல்கள் மற்றும் வெங்காயம் போன்ற பொருட்களை எமது நிறுவனத்திலிருந்து கொள்வனவு செய்வதை தவிர்த்து பருப்பை மாத்திரமே சதொசவிலிருந்து வாங்கினார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவென அந்த பிராந்தியத்தில் உள்ள பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினரிடமிருந்தே குறிப்பிட்ட பொருட்களை அரச அதிபர் கொள்வனவு செய்ததாகவும், எமக்கு அறியக்கிடைத்தது.

சதொச நிறுவனம் கொண்டு சென்ற பொருட்கள் அனைத்தும் கிளிநொச்சியில் உள்ள எமது நிறுவனத்தில் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. அந்த பொருட்களை மீண்டும் கொண்டுவருவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

பலநோக்கு கூட்டறவுச் சங்கத்திடமிருந்து இந்த பொருட்களை கிளிநொச்சி அரசங்க அதிபர் என்ன காரணத்திற்காக கொள்வனவு செய்தார் என எமக்கு தெரியாது. எனினும், எமது விற்பனை விலையை விட, பல நோக்குச் கூட்டுறவுச் சங்கம் சற்று கூடுதலான விலையிலையே அந்த பொருட்களை விற்றதாகவும் அறியவருகிறது.    

எனவே, பொதுமக்கள் சதொச நிறுவனத்தின் மீது வீண் பழிகளை சுமத்த வேண்டாம் எனவும், இந்த பிரச்சினைக்கு அரச அதிபரே பொறுப்பு எனவும் சதொச நிறுவனத்தின் தலைவர் என்ற வகையில் உறுதியுடன் தெரிவிக்கின்றேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்