ஜனாபதிபதித் தேர்தலுக்கு முன்னர், மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்: ஜனாதிபதி தெரிவிப்பு

🕔 January 13, 2019

னாதிபதி தேர்தல் பற்றி பல்வேறு கதைகளைக் கூறி, நடைபெறவேண்டியுள்ள மாகாண சபை தேர்தலை பிற்போடுவதற்கு சிலர் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  தெரிவித்தார்.

“தற்போது 06 மாகாண சபைகளின் நடவடிக்கைகள் செயலிழந்த நிலையில் உள்ளன. இது ஜனநாயகத்துக்கு ஒருபோதும் நல்லதல்ல. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களுக்கும் இது முரணானதாகும்” என்றும் அவர் கூறினார்.

எனவே ஜனாதிபதி தேர்தல் பற்றி பேசுகின்றவர்கள், அதற்கு முன்னர் மாகாண சபை தேர்தலுக்கு தயாராக வேண்டுமென தெரிவித்துள்ள ஜனாதிபதி, தான் அது பற்றி தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஊவா மற்றும் மத்திய மாகாண அமைப்பாளர்களை கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன இன்று  ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசியபோதே மேற்கண்டவற்றினைக் கூறினார்.

இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

விரைவாக மாகாண சபை தேர்தலை நடத்தி, மக்களின் வாக்குரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி இதன்போது மேலும் கூறினார்.

குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு

இதேவேளை, புதிய அமைச்சரவையை நியமித்து மூன்று வாரங்களுக்கு மேல் கடந்துள்ள நிலையில் அந்த அமைச்சுக்களின் கீழ்வரும் கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்ட சபைகள் மற்றும் நிறுவனங்களுக்கான தலைவர்கள், பணிப்பாளர் சபை நியமிக்கப்படாமை குறித்து சில தரப்பினர் ஜனாதிபதி அலுவலகத்தை நோக்கி விரல் நீட்டுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு என்றும் தெரிவித்தார்.

இந்த நிலைமைக்கு சம்பந்தப்பட்ட அமைச்சுக்களே வகைகூற வேண்டும் என்பதுடன், குறித்த பரிந்துரைகள் பிரதமரின் அலுவலகத்தினால் ஜனாதிபதி அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்படாமையே இந்த தாமதத்திற்கு காரணமாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதற்கான பொறுப்பை ஜனாதிபதி அலுவலகம் ஏற்றுக்கொள்ளாது என்றும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்