முஸ்லிம்களின் அபிலாசைகளுக்கு குறுக்கே தமிழர்கள் நிற்பதை, ஹக்கீம் ஏன் கேட்கவில்லை: நஸார் ஹாஜி

🕔 January 10, 2019

– முன்ஸிப் அஹமட் –

கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம் தொடர்பில், தமிழர் தரப்பு நடந்து கொள்வதைக் காணும் போது, அந்தச் சமூகத்தினர் மீதிருக்கும் மிச்ச சொச்ச நம்பிக்கைளும் இல்லாமல் போகும் அபாய நிலை, முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளதாக, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டமைக்கு எதிராக, தமிழர் தரப்பிலிருந்து வெளியிடப்படும் கருத்துக்கள் தொடர்பில் பேசும் போதே, அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

“முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் கிழுக்கு மண்ணில், அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதன் நியாயத்தைக் கூட, ஜீரணித்துக் கொள்ள முடியாத நிலையில், தமிழர் சமூகம் இருப்பதைக் கண்டு வெட்கமடைய வேண்டியுள்ளது.

தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மட்டுமன்றி, மிதவாத அரசியலும் – முஸ்லிம்களின் நியாயங்களை அங்கீகரிக்கத் தயாரில்லை என்பதற்கு, கிழக்கு ஆளுநர் நியமனத்தில், தமிழர்கள் நடந்து கொள்ளும் விதம் சான்றாக உள்ளது.

தமிழர்களின் ஆயுத இயக்கங்களில் இணைந்து போராடிய முஸ்லிம் இளைஞர்களை, ஒரு கட்டத்தில் அவர்கள் நம்பிச் சேர்ந்த இயக்கத்தினரே, இனவெறி பிடித்து சுட்டுக் கொன்றதை விடவும், முஸ்லிம் ஆளுநருக்கு தமிழர்கள் வெளியிடும் எதிர்ப்பு ஒன்றும் அதிர்ச்சியானதல்ல.

ஆனாலும், தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வுக்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டே, முஸ்லிம்களின் நியாயங்களைக் கூட ஜீரணிக்க முடியாமல், அதற்கு எதிராக தமிழர் சமூகம் கூக்குரலிடுவதைக் காணும் போது,  அதிர்ச்சியாகத்தான் உள்ளது.

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு முஸ்லிம்கள் முட்டுக்கட்டையாக இருக்கப் போவதில்லை என்று, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நம்பிக்கையளித்து வருகின்ற போதும், முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளை குழி தோண்டிப் புதைப்பதிலேயே, தமிழ் அரசியல் தலைவர்கள் குறியாக இருக்கின்றமை ஏமாற்றமளிக்கிறது.

கிழக்கு மாகாணத்துக்கு முஸ்லிம் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்தான், அதிக எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர். இது என்ன வகை அரசியல் என்று புரியவில்லை.

ஒருபுறம் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமுடன் ஒரே ‘பாத்திரத்தில்’ உண்டு மகிழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்; ஹக்கீம் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் சமூகத்துக்கு கிடைத்த ஆளுநர் பதவிக்கு வெளிப்படையாகவே எதிர்ப்புத் தெரிவிப்பதும், அதனை ஹக்கீம் வாய்மூடிப் பார்த்துக் கொண்டிருப்பதும், முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய அரசியல் படிப்பினையாகும்.

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு குறுக்கே முஸ்லிம்கள் நிற்க மாட்டார்கள் என்று கூக்குரலிடும் மு.கா. தலைவர் ஹக்கீம்; “முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எதிராக ஏன் குறுக்கே நிற்கிறீர்கள்” என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கேட்டகாமைக்கு என்ன காரணம் என்பதை, முஸ்லிம் சமூகம் புரிந்து கொள்ள முடியாத நிலையில் இல்லை என்பதை, சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை ஆளுநராக நியமிப்பதையே அங்கீகரிக்காத தமிழர்களுடன், அரசியல் ரீதியாக எவ்வாறு இணைந்து பயணிப்பது என்கிற ஐயமும், கேள்வியும் முஸ்லிம்களிடம் இப்போது திரட்சியாக எழுந்துள்ளது.

இதற்கான தெளிவையும் பதிலையும் வழங்க வேண்டிய பொறுப்பு தமிழர்களுக்கே உள்ளது.

அதிகாரப் பகிர்வு வழங்கப்படுமாயின் முஸ்லிம்கள் தமக்கான பங்கினை தனித்தே பெறவேண்டும் என்பதையும், யாருக்காகவும் எதனையும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதையும், கிழக்கு ஆளுநர் விடயத்தில் தமிழர்கள் காட்டும் எதிர்ப்பு, முஸ்லிம்களுக்கு தெட்டத் தெளிவாகப் புரிய வைத்துள்ளது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்