தீராத தலைவலி

🕔 September 23, 2015

Article - 16
லைவலி என்பதற்கு மறுபெயராக மு.காங்கிரசின் கையிலிருக்கும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் மாறியிருக்கின்றன. இந்தத் தேசியப்பட்டியல் என்கிற விவகாரத்தால் கட்சியின் தலைவருக்கு, தொண்டர்களுக்கு, ஆதரவாளர்களுக்கு, இந்தப் பதவிகளை இப்போது தற்காலிகமாக வைத்திருப்பவர்களுக்கு என, எல்லோருக்குமே தலைவலிதான். இன்னுமொரு தரப்பாரும் இருக்கிறார்கள். அவர்கள் – இந்தப் பதவியைக் குறிவைத்துக் காத்திருப்பவர்கள். அந்தத் தரப்பாருக்கு இப்போது ஏகப்பட்ட தலைவலி.

மு.காங்கிரஸானது, நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் ஓர் உடன்படிக்கையின் அடிப்படையில் ஐ.தே.கட்சியோடு இணைந்து, ஒரு சில மாவட்டங்களில் போட்டியிட்டது. அந்த உடன்படிக்கைக்கு அமைவாக, ஐ.தே.கட்சி தனக்குக் கிடைத்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற ஆசனங்களில் இரண்டினை மு.காங்கிரசுக்கு வழங்கியுள்ளது.

இந்த நிலையில், மு.காங்கிரசுக்குக் கிடைத்திருக்கும் அந்த இரண்டு ஆசனங்களையும், யாருக்குப் பகிர்ந்தளிப்பது என்கிற முடிவுக்கு இன்னும் அந்தக் கட்சியால் வர முடியவில்லை. இதனால், மு.கா.வுக்குக் கிடைத்துள்ள தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கு, நம்பிக்கையின் அடிப்படையில் இரண்டு நபர்களை, அந்தக் கட்சியின் தலைவர் தற்காலிகமாக நியமித்திருக்கின்றார்.

பொதுத் தேர்தலுக்கான பிரசாரங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில், மு.காங்கிரசுக்குக் கிடைக்கும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனங்களை, சில பிரதேசங்களுக்கு வழங்குவதாக, அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் தேர்தல் மேடைகளில் வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். அதனால், வாக்குறுதி கிடைக்கப்பட்ட பிரதேசத்தவர்கள் தமது ஊருக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க வேண்டுமென்று, உரத்த கோசங்களை முன்வைத்து வருகின்றனர். இந்தக் கோசம் நியாயமானதாகும்.

இவ்வாறானதொரு நிலையில், மு.காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் மருதமுனையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமும் கலந்து கொண்டு பேசினார். அதன்போது அவர் தெரிவித்த சில கருத்துக்கள் அவதானத்துக்குரியவை. ‘ஜனாதிபதி – தன்னுடைய கட்சியைப் பாதுகாப்பதற்காக, நாட்டுக்கு வழங்கியிருந்த வாக்குறுதிகள் சிலவற்றினை மீறியிருக்கின்றார். அவர் சில வாக்குறுதிகளை மீறியதாக பௌத்த உயர்பீடங்களே குற்றம் சாட்டியிருக்கின்றன. இப்படிச் சொல்வதால், நானும் வாக்குறுதிகளை மீறப்போகிறேனோ என்று நினைத்து விடவேண்டாம். ஆனானப்பட்ட ஜனாதிபதிக்கே இவ்வாறான நெருக்கடிகள் என்றால், எனது நிலைமை எவ்வாறிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்’ என்றார் ஹக்கீம்.

எவ்வாறிருப்பினும், கட்சியின் நலனுக்காக சில வாக்குறுதிகளை மீறலாம் என்பதை, மு.கா. தலைவர் அங்கு கோடிட்டுக் காட்டியதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

பொதுத் தேர்தலின் போது மு.காங்கிரசின் முக்கிய பிரதேசங்களில் இருந்த நிலைவரங்கள் இப்போது சடுதியாக மாறியிருக்கின்றன. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் முன்னர் மு.கா.வுக்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் இருந்தனர். இப்போது மூன்றாக உயர்ந்திருக்கின்றன. ஆனால், திருகோணமலையிலும், வன்னியிலும் இருந்த இரண்டு நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்களை அந்தக் கட்சி இழந்து நிற்கிறது. இதனால், மு.காங்கிரசின் முக்கிய தளமாகக் கருதப்படும் திருகோணமலை மாவட்டத்திலும், அந்தக் கட்சியின் முக்கிய அரசியல் எதிராளியான ரிஷாத் பதியுத்தீனின் மாவட்டமான வன்னியிலும் மு.கா.வின் பிடி தளர்ந்து போயுள்ளது.

எனவே, மேற்படி இரண்டு மாவட்டங்களையும் இப்படியே விட்டால், அங்கு மு.காங்கிரஸ் மோசமான வீழ்ச்சியைச் சந்தித்து விடும் என்றும், அதனால், மு.கா.வுக்குக் கிடைத்துள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை, திருகோணமலை மற்றும் வன்னி மாவட்டங்களுக்கு வழங்கி, அந்த மாவட்டத்தில் கட்சிக்கு ஏற்படவுள்ள வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்துவற்கு, கட்சியின் தலைவர் முன்வர வேண்டும் என்றும் ஒரு சாரார் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஆக, தமக்கான தேசியப்பட்டியல் ஆசனங்களை – வாக்குறுதிகள் வழங்கப்பட்ட பிரதேசங்களுக்கு வழங்குவதா? அல்லது நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்களை இழந்து தவிக்கும் மாவட்டங்களுக்கு வழங்குவதா? என்கின்ற தலைவலியில் மு.கா.வின் தலைமை உள்ள நிலையில், கட்சிக்குள் இன்னுமொரு தலைவலியும் உருவாகியுள்ளது.

அது என்ன?

மு.காங்கிரசின் செயலாளர் எம்.ரி. ஹசனலிக்கும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைதான் அதுவாகும். இப்படியொரு கோரிக்கையினை மு.கா. செயலாளர் ஹசனலி எந்தவொரு இடத்திலும் பகிரங்கமாக முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், அவரின் ஆதரவாளர்கள் என்று நம்பப்படுகின்றவர்கள் இப்படியொரு வேண்டுகோளினை முன்வைத்து வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையில், மு.காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டத்திலும் செயலாளர் ஹசனலி கலந்து கொள்ளவில்லை என்பதும் அவதானத்துக்குரியது.

மு.காங்கிரசின் செயலாளர் ஹசனலி – அந்தக் கட்சியின் மிக மூத்த முக்கியஸ்தர்களில் ஒருவராவார். மு.காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் காலத்திலிருந்து இந்தக் கட்சிக்காக உழைத்து வருகின்றார். ‘மு.காங்கிரசின் முதுசம்’ என்றும் கட்சிக்குள் அவரைப் புகழ்வார்கள்.

ஹசனலியின் இந்த சிரேஷ்டத்துவத்தினை மதிக்கும் வகையில், 2005 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் – அவருக்கு, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை மு.கா. தலைவர் ஹக்கீம் வழங்கினார்.

மு.கா. செயலாளர் ஹசனலி நிந்தவூரைச் சேர்ந்தவர். ஏற்கனவே, தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் நிந்தவூரில் இருக்கத்தக்கதாகத்தான், அதே ஊரைச் சேர்ந்த ஹசனலிக்கு இரண்டு முறை, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஹசனலிக்கு அவ்வாறு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்ட இரண்டு தடவையும், மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மிகக் கடுமையான விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்ள நேர்ந்தது. நிந்தவூரில் மு.கா.வின் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் இருக்கும்போது, அதே ஊரைச் சேர்ந்த ஹசனலியை நாடாளுமன்ற உறுப்பினராக்காமல், மிக நீண்ட காலமாக நாடாளுமன்ற உறுப்பினருக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஊர்களிலொன்றுக்கு அந்தத் தேசியப்பட்டியலை வழங்கியிருக்கலாம் என, கட்சிக்குள்ளிருந்த கணிசமானவர்கள் கூறினார்கள். அதேவேளை, தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவியை ஹசனலிக்கு வழங்கியதன் மூலம் மு.கா. தலைவர் ஹக்கீம் பாரபட்சமாக நடந்து விட்டார் என்று, ஊடகங்களும் விமர்சனங்களை வெளியிட்டு வந்தன. இவ்வாறான குற்றச்சாட்டுக்களையும் விமர்சனைங்களையும் தலையில் சுமந்து கொண்டுதான், ஹசனலியை மு.கா. தலைவர் ஹக்கீம் – இரண்டு தடவைகள் தொடர்ச்சியாக தேசியப்பட்டியல் எம்.பி. ஆக்கினார்.

இவ்வாறாதொரு நிலையில்தான் மூன்றாவது தடவையாகவும் ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. இம்முறையும் நிந்தவூரில் மு.கா.வின் நாடாளுமன்ற உறுப்பினராக பைசல் காசிம் தெரிவாகியிருக்கின்றார். போதாக்குறைக்கு சுகாதாரப் பிரதியமைச்சர் பதவியும் பைசல் காசிமுக்குக் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில், அதே ஊரைச் சேர்ந்த ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, மூன்றாவது முறையாகவும் மு.கா. தலைவர் ஹக்கீம் வழங்குவதென்பது கத்தியில் நடப்பதற்கு ஒப்பானதாகும்.

இதேவேளை, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படாது விட்டால், மு.கா. செயலாளர் ஹசனலி கட்சியிலிருந்து விலகுவார் என்றும், தலைவர் ஹக்கீமுக்கு எதிரானவர்களுடன் கைகோர்ப்பார் என்றும் ஏராளமான செய்திகள் உலாவருகின்றமையினைக் காண முடிகிறது. உண்மையில், இந்தச் செய்திகள் செயலாளர் ஹசனலியைக் கொச்சைப்படுத்தும் வகையிலானவையாகும். ‘நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கொடுத்தால்தான், கட்சிக்கும் தலைமைக்கும் ஹசனலி விசுவாசமாக இருப்பார்’ என்பது போலவும், ‘மு.கா. செயலாளர் ஹசனலி பதவி மோகம் பிடித்த ஒருவர்’ என்பது போலவும் அந்தச் செய்திகள் அவரைக் காண்பிக்க முயற்சிக்கின்றன. ஆனால், இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒருவராகவே, மு.காங்கிரசின் ஆரவாளர்கள் ஹசனலியை இன்னும் பார்க்கின்றனர்.

மு.காங்கிரசின் செயலாளராகச் செயற்படுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினராகத்தான் இருக்க வேண்டுமென்றில்லை. குறிப்பிடத்தக்க பல கட்சிகளின் செயலாளர்கள் இதுவரை நாடாளுமன்றக் கதிரைகளில் அமரவில்லை என்பது கவனிப்புக்குரியது. குறிப்பாக, ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா, நாடாளுமன்றத்துக்கு வெளியிலிருந்து கொண்டுதான், கட்சிக்கான தனது பணிகளை மிக நீண்ட காலமாக நிறைவேற்றி வருகின்றார்.

எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில்லாமலும், கட்சிக்கான தனது பணியினை நிறைவேற்றுவதற்கு தயார் என்பதை, மு.கா. செயலாளர் எம்.ரி. ஹசனலி பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனை உடனடியாக நிறைவேற்றுவதன் மூலமாக, செயலாளர் ஹசனலி தன்னைப் பற்றிய பிழையான கற்பிதங்கள் உருவாகுவதற்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும்.

எது எவ்வாயினும், மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நம்பிக்கையின் அடிப்படையில் நியமிக்கப்பட்டிருக்கும் மு.காங்கிரசின் தலைவருடைய சகோதரர் டொக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் தனது பதவியினை ராஜிநாமாச் செய்வார் என்றும், அந்த வெற்றிடத்துக்கு எதிர்வரும் நொவம்பர் மாதம் முதல் வாரத்தில் உரிய நபரொருவர் நியமிக்கப்படுவார் என்றும், மு.கா. தலைவர் ஹக்கீம் அண்மையில் அறிவித்துள்ளமையும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

இவ்வாறானதொரு நிலையில், மு.கா.வின் தேசியப்பட்டியல் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும் என்கிற அனுமானங்கள் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் மனம்போன போக்கில் வெளியிடப்பட்டு வருகின்றன.

அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை, திருகோணமலை, ஓட்டமாவடி மற்றும் வன்னி ஆகிய பகுதிகளுக்கு சுழற்சி முறையில், தலா இரண்டரை வருடங்கள் எனும் அடிப்படையில், இரண்டு தேசியப்பட்டியல் நியமனங்களும் பிரித்து வழங்கப்படும் என்று சில ஊடகங்கள் எழுதுகின்றன. இன்னொருபுறம், முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அம்பாறை மாவட்டத்தில் மூவரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருவரும் உள்ளமையினால், திருகோணமலைக்கும் வன்னிக்கும்தான் மு.கா.வின் தேசியப்பட்டியல் நியமனம் வழங்கப்படுமென வேறுசில ஊடகங்கள் எழுதுகின்றன. இவற்றுக்கப்பால், கட்சியிலுள்ள சிரேஷ்டமானவர்களுக்குத்தான் தேசியப்பட்டியல் வழங்கப்படும் என்று மு.கா. தலைவர் தெரிவித்ததாகவும், அந்த வகையில் பார்த்தால், செயலாளர் ஹசனலிக்கும், தவிசாளர் பஷீர் சேகுதாவூதுக்கும்தான் தேசியப்பட்டியல் வழங்கப்படும் என்கிற அனுமானங்களை சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்கின்றமையினையும் காண முடிகிறது. இந்த அனுமானங்களில் ஒன்றிரண்டு பலிக்கும் என்பது உண்மைதான். ஆனால், மு.கா. தலைவர் அறிவிக்கும் வரை, அவற்றினை உறுதிப்படுத்த முடியாது.

மு.காங்கிரசுக்குக் கிடைத்திருக்கும் இந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள், உரியவர்களுக்கு மிக விரைவில் பகிர்ந்தளிக்கப்படவுள்ள நிலையில், அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம், அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் ஆற்றிய உரையில், சில விடயங்களை முன்கூட்டியே சொல்லி வைத்துள்ளமை கவனிப்புக்குரியது. அங்கு அவர் கூறுகையில்ளூ ‘கட்சியின் நலனை முன்னிறுத்தியே முடிவுகள் எடுக்கப்படுதல் வேண்டும். இந்தக் கட்சியின் தலைவராக, என்னுடைய விருப்பு வெறுப்புகளுக்கப்பால் சிந்திக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பினை நான் ஏற்றுக்கொள்கிறேன். கட்சியின் பெரும்பான்மை விருப்புகளுக்கு அப்பால் என்னுடைய முடிவுகள் அமைந்திருந்தாலும், அவை – கட்சியைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவுகள் என்று நீங்கள் நம்ப வேண்டும்’ என்றார்.

எது எவ்வாறாயினும், மு.காங்கிரசுக்குக் கிடைத்துள்ள தேசியப்பட்டியல் நடாளமன்றப் பிரதிநிதித்துவங்கள் பகிர்ந்தளிக்கப்படும் போது, அந்த கட்சியிலுள்ள முக்கியஸ்தர்கள் சிலரின் ‘நிஜ முகத்தினை’ கண்டுகொள்வதற்கான சந்தர்ப்பம் கிட்டும்.

தலைவலியாக மாறிப் போயிருக்கும் மு.கா.வின் தேசியப்பட்டியல் விவகாரமானது, நியாயப்படி, அதனை உரியவர்களுக்குப் பகிர்தளித்தவுடன் தீர்ந்து விடவேண்டுமல்லவா? ஆனால், அதற்குப் பிறகும் அந்தத் தலைவலி வேறொரு வடிவத்தில் தொடரவும் கூடும்!

Comments

புதிது பேஸ்புக் பக்கம்