தாவினார் அமீர்; அதாஉல்லாவின் கடைசிக்கு முந்தைய, விக்கட்டும் வீழ்ந்தது

🕔 September 22, 2015

Ameer - 0111– முன்ஸிப் –

மு
ன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் அணியைச் சேர்ந்தவரும், கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சி உறுப்பினருமான எம்.எல்.ஏ. அமீர் இன்று செவ்வாய்கிழமை கிழக்கு மாகாணசபையின் ஆளுந்தரப்புக்குத் தாவினார். இவருடன், மற்றுமொரு எதிர்த்தரப்பு உறுப்பினரான இனிய பாரதி என்றழைக்கப்படும் எஸ். புஷ்பகுமாரும் ஆளுந்தரப்பில் இணைந்து கொண்டார்.

 கிழக்கு மாகாணசபையின் அமர்வு, இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றபோது, இவர்கள் இருவரும் ஆளுந்தரப்போடு இணைந்து கொண்டனர்.

இதேவேளை, சபை அமர்வு ஆரம்பமாகும் முன்னர், இன்றைய மாகாணசபை அமர்வின் போது, எதிரணியைச் சேர்ந்த ஐவர், ஆளுந்தரப்புக்கு மாறவுள்ளதாக, கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணசபையின் உறுப்பினராக முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த ஐ.எல்.எம்.  மாஹிர் இன்று செவ்வாய்கிழமை சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

ஆகக் குறைந்தது, இன்றைய தினம் இருவரும், எதிர்வரும் அமர்வுகளில் ஏனையோரும் ஆளுந்தரப்புக்கு மாறவுள்ளதாக, முதலமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையிலேயே, மேற்படி இருவரும் ஆளுந்தரப்போடு இணைந்து கொண்டுள்ளனர்.

ஆளுந்தரப்புக்கு தாவிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அமீர், அம்பாறை மாவட்டத்திலிருந்து முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் கட்சி சார்பில், ஐ.ம.சு.முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இதேவேளை, ஐ.ம.சு.முன்னணி சார்பில் கிழக்கு மாகாணசபையில் போனஸ் உறுப்பினராக நியமிக்கப்பட்ட ரி. நவரட்ணராஜா, தனது பதவியைத் துறந்தமையினையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, புஷ்பகுமார் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணசபையில் அமைச்சர் அதாஉல்லாவின் அணியைச் சேர்ந்த உறுப்பினர் அமீர் ஆளுந்தரப்புக்குத் தாவிய போதும், அதாஉல்லாவின் அணியைச் சேர்ந்த மற்றொரு கிழக்கு மாகாணசபை உறுப்பினரான முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை எதிர்தரப்பிலேயே தொடர்ந்தும் இருக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்