இலங்கையின் சட்டத்தை சீனா மீறுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது: அமைச்சர் மனோ

🕔 January 1, 2019

– முன்ஸிப் அஹமட் –

லங்கையில் சீனா மேற்கொள்ளும் வேலைத் திட்டங்களில் உள்ளுர் மொழிச் சட்டம் மீறப்படுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்று, தேசிய ஒருமைப்பாடு,  அரச  கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சீனா மேற்கொள்ளும் வேலைத் திட்ட இடங்களில் உள்ளுர் மொழிகளான சிங்களம் மற்றும் தமிழ் ஆகியவை புறக்கணிக்கப்படுகின்றமை தொடர்பில் தனக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன்; தனது அறிவுறுத்தலுக்கு இணங்க, அந்த முறைப்பாடுகள் தொடர்பில் தனது அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் மனோ கணேசன்;

இலங்கையில் உள்ளுர் சட்டங்களுக்கு சீனா மதிப்பளிக்க வேண்டும். இலங்கையில் சீனா மேற்கொள்ளும் வேலைத் திட்டங்கள் தொடர்பான அறிவித்தல் பதாதைகளில் மாண்டரின் (சீன மொழி) மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் மட்டும் பயன்படுத்தப்படுவதாகவும், இலங்கையின் உத்தியோகபூர்வ மொழிகளான சிங்களம் மற்றும் தமிழ் ஆகியவற்றில் ஒன்று அல்லது இரண்டும் புறக்கணிக்கப்படுவதாகவும் தமக்கு முறைப்பாடுகள் கிடைதுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பில் சீனத் தூதரகம் உள்ளிட்டோருக்கு உதவிகள் எவையேனும் தேவைப்பட்டால், அவற்றினை வழங்குவதற்கு தாம் விருப்பத்துடன் இருப்பதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தனது ‘ட்விட்டர்’ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கையில் சீனா மேற்கொள்ளும் வேலைத்திட்ட இடமொன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அறிவித்தல் பதாகையொன்றின் படம் ஒன்றினையும் தனது ‘ட்விட்டர்’ பதிவில் அமைச்சர் மனோ இணைத்துள்ளார்.

குறித்த படத்திலுள்ள அறிவித்தல் பதாகையில், முதலாவதாக சிங்கள மொழியும், அதற்கடுத்து சீன மொழியும் இறுதியாக ஆங்கில மொழியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் சிங்கள மொழிக்கு அடுத்ததாக, தமிழ் மொழிக்கு அந்தஷ்து வழங்கப்படுதல் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இங்குள்ள அறிவித்தல் பதாகையில் தமிழ் மொழிக்கான இடத்தை சீன மொழி பிடித்துள்ளதோடு, தமிழ் மொழி முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்