மாநகரசபை உறுப்பினரின் வாகனத்தில் தப்பிச் சென்ற அமைச்சர் ஹரீஸ்; சாய்ந்தமருதில் நடந்த விபரீதம்

🕔 December 30, 2018

– ஊடகவியலாளர் தர்மேந்திரா –

ள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹாரிஸ், வருட நிறைவு ஒன்றுகூடல் விழாவொன்றினை ஏற்பாடு செய்திருந்தார்.

சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை இரவு இந்த நிகழ்வு இடம்பெற்றது.

ஊடகவியலாளர்களுடனான ஒன்றுகூடல் என்கிற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுக்கு உள்ளுர் ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர்.

அதேவேளை, உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் அந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். இது ஒரு சரியான விடயம் அல்ல.

சாய்ந்தமருதில் அரசியல்வாதிகள் எந்த நிகழ்வையும் நடத்துவதற்கு, அந்த ஊர் மக்கள் அனுமதிப்பதில்லை. இதனால் முன்பாதுகாப்பு ஏற்பாடாக தனது ஆட்களையும் இவ்விதம் ராஜாங்க அமைச்சர் ஏற்பாடு செய்து வைத்திருந்தார் என்று விளங்குகின்றது.

நிகழ்வுக்கு மூன்று ஊடக சங்கங்களில் இருந்தும் ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். ஆனால், அங்கு நடைபெற்ற மூத்த ஊடகவியலாளர்களை கௌரவிக்கின்ற நிகழ்வில், ஒரு குறிப்பிட்ட ஊடக சங்கத்தை மாத்திரம் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர்களே கௌரவிக்கப்பட்டனர்.

இது ஏனைய இரு ஊடக சங்கங்களை சேர்ந்த ஊடகவியலாளர்களை அழைத்து விட்டு அவமானப்படுத்தியதாக அமைந்தது. குறிப்பாக மூத்த ஊடகவியலாளர்கள் என்று அங்கு கௌரவிக்கப்பட்ட மூவரை காட்டிலும், மூத்த ஊடகவியலாளர் எம்.ஏ. பகுறுதீன் எந்த வகையிலும் சளைத்தவர் அல்லர்.

விழாவுக்கு அழைக்கப்பட்டவர்களில் தமிழர்களும் கணிசமான தொகையினர் இருந்தனர். இவர்களில் அநேகர் வாழ்நாளில் ஒரு முறைகூட மாட்டு இறைச்சி சாப்பிடாதவர்கள். ஆயினும் மாட்டு இறைச்சியும், கோழி இறைச்சியும் கலந்த பிரியாணி சோறுதான் விருந்தில் பிரதான இடம்பிடித்து இருந்தது.

வேறு மாற்று ஏற்பாடு தமிழ் விருந்தினர்களுக்கு செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் விரல் விட்டு எண்ண கூடியவர்களை தவிர, ஏனைய தமிழர்கள் விரல் நனைக்கவே இல்லை.

இவற்றுக்கு இடையில் ராஜாங்க அமைச்சர் ஹரீஸின் வருகையை அறிந்த சாய்ந்தமருது இளைஞர்கள், பரடைஸ் மண்டபத்துக்கு படையெடுத்து வந்தனர். நிலைமை பாதகமாவதை அறிந்த ராஜாங்க அமைச்சர் மேலதிக பொலிஸாரை வரவழைத்தார். ஆம்புலன்ஸ் வண்டியும் வந்து நின்றது.

இதனையடுத்து, ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் – அவருடைய வாகனத்தை தவிர்த்து விட்டு, சட்டத்தரணியும் மு.காவின் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ரொஷான் அக்தாரின் காரில் கடற்கரை வீதி வழியாக தப்பி சென்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்