வடகிழக்கில் தலைமைப் பதவிக்கு யாரும் இல்லை என்கிற, கூலிப்படையின் கொட்டம் அடக்கப்பட வேண்டும்: ஹசனலி

🕔 December 24, 2018

– முன்ஸிப் அஹமட் –

பெரும் தேசிய கட்சிகளின் சின்னங்களுக்குள் கரைந்து போகும் போக்கற்ற அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, சொந்தக்காலில் நிற்கக்கூடிய நம் பிரதேசத்திலுள்ள கட்சிகளை ஒரு கூட்டணியாக ஒற்றுமைப்படுத்தி, அதனால் கிடைக்கும் ஹலாலான பிரதிநிதித்துவங்களின் பலத்தை வைத்து பேரம்பேசி அரசாங்கத்திடம் உரிமைகளை மீட்டெடுப்போம், தனித்துவம் காப்போம் என்று, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசனலி தெரிவித்தார்.

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பேராளர் மாநாடு காத்தான்குடி பீச்வே ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் கட்சியின் ஆண்டறிக்கையினைச் சமர்ப்பித்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஹசனலி இதன்போது மேலும் தெரிவிக்கையில்;

“இந்நாட்டு முஸ்லீம்கள் ஒரு தனியான தேசிய அடையாளத்துடன் கௌரவமாக வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கின் ஆதிமூலமாக வெளிக்கிளம்பிய அஷ்ரஃப் எனும் ஆளுமையினால் கவரப்பட்டு கட்டுண்டு நம்பிக்கையுடன் அவரைப் பின்தொடர்ந்த எமது இலட்சியப்பயணம், அவரின் திடீர்மறைவிற்குப் பின்னர் தடம்புரண்டு திசைமாறிவிட்ட சோக வரலாறு இன்றும் தொடர்கின்றது.

மின்னாமல் முழங்காமல் முடிக்கப்பட்ட கதை

நமது விடுதலை வேட்கையை விரும்பாத கடும்போக்கு சுயநல சக்தியொன்று மின்னாமல் முழங்காமல் அந்த ஆளுமையின் கதையை முடித்துவிட்டது. ஆனாலும் நமது மனங்களில் அவரால் விதைக்கப்பட்ட விடுதலை வித்துக்கள் இன்று வீரியத்துடன் முளைத்தெழுந்து புறப்பட்டுவிட்டன.

தலைவரின் வெற்றிடத்தை நிரப்பவென அடம்பிடித்துக்கொண்டு அரியணை ஏறியவர்கள்பெரும்தேசிய சக்திகளின் வலையில் வீழ்த்தப்பட்டு அதிகாரத்தின் சுகந்தத்தால் ஆலாபனை செய்யப்பட்டார்கள். போதை அவர்கள் கண்களை மறைத்ததால் ஷஹீதாக்கப்பட்ட நமது தலைவரின் கொலைக்கான காரணத்தைக்கூட கேட்பதற்கு திராணியற்றவர்களாக மாற்றப்பட்டார்கள்.

இன்று பெரும் தேசியவாதிகளின் கட்டளைகளை நிறைவேற்றும் கூலிப்படை முகவர்களாகவும் நமது சமூகத்தின் அமானித சொத்தாகிய விலைமதிப்பற்ற முஸ்லிம் வாக்குகளை, தங்களின் சொந்த நலன்களுக்காக அரசியல் சந்தையில் பண்டமாற்று செய்யும் வியாபாரிகளாகவும் மாறி, சோக வரலாறு படைத்திருப்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியமாகும்.

இவ்வாறான துயரமான மாற்றங்கள் ஏற்படக் காரணம்; விழிப்படைய மறுக்கும் நமது சமூக ஆர்வலர்களும், இலவசங்களில் மூழ்கி வக்கற்றுப்போய் மரத்துப்போன வாக்காளர்ளும், ஒதுங்கி நின்று நீண்ட ஓய்வினை எடுத்துக் கொண்டிருக்கும் புத்திஜீவிகளும்தான்.

இவர்களின் பங்களிப்பு விடுபட்டுப்போனதன் பக்க விளைவுகளை, நாம் தற்போது வேதனையுடன் அனுபவித்துக் கொண்டிருக்கும் பின்னணியில்தான் இன்றைய நமது பேராளர் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நமது தனித் தேசியத்தின் இலக்கை நோக்கிய பயணம் எந்த இடத்தில் வைத்து திசை மாற்றப்பட்டு திருப்பப்பட்டதோ, விடுபட்ட அந்த இடத்திலிருந்து எந்த விதத்திலும் குறையாத ஒரு புதிய உத்வேகத்துடன் முஸ்லிம் தேசிய வாதத்தின் உயிர் நாடியை புரிந்து கொண்ட உங்களைப்போன்ற புதியவர்களின் துணையுடன் இடைவிடாது தொடர இன்றைய மாநாட்டில் உறுதிபூணுவோமாக.

அந்த விடுதலை வேட்கையை அர்ப்பணிப்புடனும் உளசுத்தியுடனும், தியாக மனப் பாங்குடனும் வெளிப்படுத்தும் பணிதான் இன்று இங்கு நடைபெறும் நமது இன்றைய பேராளர் மாநாடடடின் கருப்பொருளாகும்.

தூய முஸ்லிம் காங்கிரஸ்

தூய முஸ்லிம் காங்கிரஸ் என்ற தலைப்பில் தொடங்கிய எமது புதிய பயணம் பின்னர் ‘ஐக்கிய சமாதான முன்னணி’ என்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியுடன் இணைந்து இன்று ‘ஐக்கிய சமாதான கூட்டமைப்பாக’ பரிணமித்துள்ளது. ‘ஐக்கிய சமாதான முன்னணி’யின் முக்கியஸ்தர்கள் தாமாகவே முன்வந்து எமக்கு நேசக்கரம் நீட்டியதை என்றும் மறக்க முடியாது.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ‘தூய முஸ்லிம் காங்கிரஸ’ அணியினை ஒரு அரசியல் கட்சியாக பதிந்து கொள்ளும் நோக்குடன் நாம் அதனை முதன்முதலாக மக்கள் மயப்படுத்தியது நிந்தவூரில் 2017 ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் திகதி இடம் பெற்ற பிரமாண்டமான ஒரு பகிரங்க கூட்டத்திலாகும். இக்கூட்டத்தை நடத்த விடாது தடை செய்வதற்காக பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்ட எமது அரசியல் எதிரிகள், நீதிமன்றம் வரை சென்று தடையுத்தரவு கோரியிருந்தார்கள். இருந்த போதிலும் தடைதாண்டி நாம் வெற்றிவாகை சூடினோம்.

முஸ்லிம் தேசியத்தின் நிலம்

முஸ்லிம் தேசியத்தை நிறுவுவதற்குத் தேவையான முக்கிய தகைமைகளில் ஒன்றுதான் நிலத் தொடர்புள்ள அரசியல் அதிகாரத்தை வெளிப்படுத்தக் கூடிய முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பிரதேசமாகும்.

நம் நாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மட்டுமே இவ்வாறான நில அமைப்பை அடையாளப் படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. பிரித்தானிய காலணித்துவ ஆட்சிகாலத்தில் 1931 ம் ஆண்டு நடந்த முதலாவது தேர்தலுக்காக, இனரீதியான தொகுதிகள் பிரிக்கப்பட்ட போது, முஸ்லிம்களுக்கான தொகுதி கிழக்கில்தான் அடையாளப் படுத்தப்பட்டது.

கிழக்கில் முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக பலப்பட்டால், இலங்கையில் அவர்கள் தனியான வலுவானதோர் தேசிய இனமாக கால் ஊன்றிவிடுவார்கள் என்ற கபடத்தனமான எண்ணத்துடன், இன்று எமது பிரதேசங்கள் பெரும்தேசிய கடும்போக்கு வாதிகளின் நெருக்குதல்களுக்குள் ஆட்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான காணிகள் பல்வேறு கட்டங்களாக பறிபோய்விட்டன.

தலைவர்கள் இந்த விடயங்களை தேர்தல்கால வெற்றுக் கோஷங்களாக மட்டுப்படுத்தியுள்ளார்கள். பெரும்தேசிய வாக்குகளுக்காக ஏங்கிக்கிடப்பவர்களின் தயவுக்குள், எங்கள் எதிர்காலம் கரைந்துபோய்க் கொண்டிக்கின்றது.

இந்த இழிநிலையிலிருந்து நாம் விடுபட்டு நமது மண்ணையும் தேசியத்தையும் காப்பாற்றுவதற்காகவும் அரசியல் தரகர்களிடமிருந்தும் உரிமைகளை சலுகைகளாகக் காட்டி அப்பாவி வாக்காளர்களின் அறியாமைகளில் ஆதாயம் தேடும் எத்தர்களிடமிருந்தும் பாதுகாப்புத் தேடிக்கொள்ளவேண்டிய காலம் கனிந்து விட்டது.

தனியான முஸ்லிம் வாக்குகளால் முஸ்லிம் பிரதிநிதிகளை முஸ்லிம் பிரதேசங்களில் வென்றெடுக்கும் உரிய ஒரே வழிதான், வடகிழக்கில் உள்ள முஸ்லீம் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து முஸ்லிம் கூட்டமைப்பொன்றை உருவாக்குவதாகும்.

வரலாறு காணாத ஒரு அரசியல் சுனாமிக்குள் சிக்கி திக்குத்தெரியாது கடந்த 02 மாதங்களாக தத்தளித்துக் கொண்டிருந்த நம்நாடு, சென்ற வாரம் நீதித்துறையின் தலையீட்டால் தற்காலிகமாக நிம்மதி மூச்சு விடத்தொடங்கியுள்ளது.

எந்தப் பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளோம்?

வெற்றி பெற்றவர்கள் தங்கள் பாவங்கள் எல்லாம் கழுவப்பட்டு விட்டதாக எண்ணி குதூகலத்தில் ஆர்ப்பரிக்க, தோல்வியுற்றவர்கள் பழிவாங்கும் நோக்குடன் திட்டங்களை தீட்டிக்கொண்டு காயங்களை நக்கிக்கொண்டு சந்தர்ப்பத்துக்காக காத்துக்கொண்டிருப்பார்கள்.

இந்த புதிய காட்சிமாற்றத்தில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த எம்மை, நம் தலைவர்கள் எந்த பக்கத்தில் கொண்டு பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருக்கின்றார்கள் என்பதுதான், நம் முன்னால் இப்போது உள்ள மிகப்பெரிய கேள்வியாகும்.

அளுத்கமை சம்பவங்களையும் அம்பாறை திகனை சம்பவங்களையும் நிறுத்துப்பார்த்து எது குறைந்த தாக்கத்தை உடையது என நாமே முடிவெடுக்க வேண்டிய நிலமை விரைவில் வருமோ தெரியாது.

சிறுபான்மை தலைமைகளின் விளையாட்டு

சிறுபான்மை சமூக தலைமைகள் அவர்களது அகராதியில் புரிந்து வைத்திருக்கும் ஜனநாயகத்தையும் பணநாயகத்தையும் ஒரே கல்லில் அடித்துப் பறிப்பதற்காக, ஒட்டு மொத்தமாக நம் சமூகத்தை இரையாக்கி விட்டார்களோ என்ற அச்சநிலை, இப்போது தோன்றியுள்ளது. சமூகங்களுக்கிடையிலான விரிசல்கள் தற்போது அதிகரித்துக்கொண்டு வருவதனை ஊடகங்கள் மூலமாக அறிந்து கொள்ள முடிகின்றது.

ஏனெனில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இந்நாட்டில் முன்பெல்லாம் வன்முறைகள் வெடித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் போதும், நமது தலைவர்கள் அமைச்சர்களாக இருந்துகொண்டு காரசாரமான அறிக்கைகளை விட்டுக்கொண்டு மக்களிடமிருந்து அரசாங்கங்களை காப்பாற்றும் கேடயங்களாக மாறி, இரண்டு பக்கத்திலுமிருந்தும் புள்ளிகளைப் பெற்றுக் கொள்வார்கள்.

எவரது அறிக்கை முந்தி வெளியாகியது, எந்த அறிக்கை காரசாரமானது என்ற விடயங்களில் தலைவர்களின் சமூக வலயத்தள போராளிகள் தங்களுக்கிடையில் விவாதித்துக்கொண்டு மக்களின் கவனங்களை திசைதிருப்பும் பணிகளை கச்சிதமாக செய்துமுடிப்பார்கள்.

தேவைப்படும் பொறிமுறை

ஒரே கூட்டணியாக களமிறங்கி முஸ்லிம்களின் வாக்குகளையெல்லாம் ஒரே சின்னத்தின்பால் ஒன்றுதிரட்டி முஸ்லிம் பிரதேசங்களிலிருந்து தனியான முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறையினை கையாளாதவரை, முஸ்லிம் வாக்காளர்கள் எடுப்பார் கைப்பிள்ளைகளாகவும் நமது தலைவர்கள் பெரும்தேசியக்கட்சிகளை, சிறுபான்மையினரின் நியாயமான சீற்றத்திலிருந்து காப்பாற்றும் கேடயங்களாகவும் சீரழியும் நிலை மாறாது.

எனவேதான் வடக்கு கிழக்கில் இயங்கும் முஸ்லிம் கட்சிகள் எல்லாம் ஒரே கூட்டமைப்பாக இணைந்து தேர்தல்களில் களமிறங்கி முஸ்லிம் பிரதிநிதித்துவங்களின் எண்ணிக்கைகளை அதிகரித்து, அவற்றை பேரம் பேசும் சக்தியாக நம்மால் மாற்றிக்கொள்ள வேண்டும். 

நமது நாட்டிலுள்ள இன்னுமொரு சிறுபான்மை சமூகம் அரசாங்கத்தில் இணையாது எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு தலைநிமிர்ந்து எவ்வளவோ சாதனைகளை புரிந்துவருவதற்கான மனோபலம், அவர்களது சோரம்போகாத வரம்பு மீறாத தனித்துவ தேசிய பற்றுத்தான் என்பது, யாவரும் அறிந்த ரகசியமாகும்

அவர்களது தலைவர்கள் தேர்தலில் வெற்றியீட்டுவதற்கு இன்னுமொரு பெரும்தேசிய சமூகத்தின் வாக்குகளுக்கு வக்காலத்து வாங்குவதில்லை. அவ்வாறான இழிநிலையை அவர்களின் சமூகம் அனுமதித்த வரலாறும்கிடையாது. அவர்களை விடவும் மிகவும் இறுக்கமான கடடுப்பாடுடன் இருக்கவேண்டிய நாம், பெரும்தேசிய கடும்போக்கு வாதிகளின் வாக்குப்பிச்சைக்காக ஏங்கிக் கிடக்கும் தலைமைகளை நம்பி, எவ்வாறு நமது தேசியத்துக்கான இலக்கை அடைய முடியும் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கிழக்கின் வாக்குகளைப் பெற்றவர்களின் கபடத்தனம்

கிழக்கு முஸ்லிம் மக்களின் வாக்குப்பலத்தால் வெற்றிபெற்று சபைக்குச் சென்றவர்கள், கிழக்கு மக்களின் உரிமைகள் சார்ந்த பிரச்சினைளை மட்டும் கபடத்தனமாக ஒதுக்கிவைத்துவிட்டு, அதற்குப்பகரமாக வெற்று சலுகைகளை மட்டும் வாங்கிக் கொண்டு வந்து உள்ளுர் தரகர்கள் மூலமாக பகிர்ந்து, அப்பாவி மக்களை அடிமைச் சங்கிலியால் பிணைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஓட்டுமொத்தமாக நாடாளுமன்றிலுள்ள 21 பிரதிநிதிகளும் அரசாங்கத்துடன் இணைந்து, இணக்க அரசியல் செய்வதாக வீராப்புப் பேசியதைத்தவிர வேறொன்றையும் சாதிக்கவில்லை. கிழக்கு மக்கள் இழந்து தவிக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளில் ஒருசதுர அங்குலத்தைக்கூட அவர்களால் மீட்டுக்கொள்ள முடியவில்லை.

நமது இணக்க அரசியல் உச்சக்கட்ட அதிகாரத்தை கிழக்கில் தக்கவைத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான், மாயக்கல்லி மலையில் புத்தர் சிலையை வைத்துவிட்டு அம்பாறை மாவட்டத்தில் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் முஸ்லிம்களாகிய நம்மையெல்லாம், அவர்களது விகாரை காணிகளில் கள்ளத்தனமாக குடியேறியவர்கள் என்று சவால் விட்டனர். தாங்கள் இன்னும் பல சிலைகளை வைக்கத்தான் போவதாகவும் முடிந்தால் எதிர்த்துப் பாருங்கள் என்றுவேறு சீண்டிவிட்டுப் போனார். அவர் வேறு யாருமல்ல, நமது இணக்க அரசின் சார்பில் அம்பாறைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒர் கபினட்  அமைச்சர்தான். ஆளும் கட்சியின் தேசிய அமைப்பாளர்.

இத்தனைக்கும் நமது பக்கத்தில் மாவட்ட முஸ்லிம் வாக்காளர்களுக்குக் கடமைப்பட்ட ஒரு பட்டாளமே அதிகாரங்களுடன் இணக்க அரசியலில் பங்காளிகளாக இருந்தது. 01 முதலமைச்சர், 02 பிரதி அமைச்சர்கள், 01 மாகாண அமைச்சர், 04 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் 01 இணைத்தலைமை என்பன அந்தப்படையினராகும்.

மாற்றியமைக்கப்பட வேண்டிய அரசியல் பயணம்

எனவேதான் வடகிழக்கு முஸ்லிம்கள் நமது அரசியல் பயணத்தை தற்போது மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. முஸ்லிம் தேசிய அடையாளத்தை உறுதிப்படுத்தும் நோக்குடன் நமது எதிர்காலம் திட்டமிட்ப்படவேண்டும்.

வடகிழக்கிற்கு வெளியே நிலத்தொடர்பற்ற வகையில் தொட்டம் தொட்டமாக சிறு கிராமங்களில் பரவலாக பெரும்தேசிய கடும்போக்கு வாதிகளின் நெருக்குதல்களுக்கு மத்தியில் அச்சத்தில் வாழ்ந்து வரும் நம் உடன் பிறப்புக்களுக்கும் நம்பிக்கைதரும் ஒரு தாயகமாக இந்த வடகிழக்கு மாநிலம் அடையாளப் படுத்தப்பட வேண்டும் என்பதே பெரும் தலைவரின் கோட்பாடாகும்.

மானம்கெட்ட மாமூல் அரசியலில் இருந்து மக்களை மீட்டெடுக்கும் போராட்டம் உடனடியாக தொடங்கப்படவேண்டும்.

நமது மண்ணின் மகத்துவத்தையும் பெறுமானத்தையும் பாதுகாக்கக்கூடிய தலைவர்களை அடையாளம் கண்டு பணிகளை ஒப்படைக்க வேண்டும். நமது உரிமைகளை விற்றுப்பிழைக்கின்ற வேஷதாரிகளையும் அவர்களின் அடிவருடிகளையும் விரட்டியடிக்க வேண்டும்.

வடக்கு கிழக்கில் தலைமைப் பதவிக்கு தகுதியானவர்கள் வேறு யார் இருக்கின்றார்கள் என்ற நக்கல் கேள்வியைக் கேட்டு, நமது மண்ணின் மகிமையை சிறுமைப்படுத்தும் கூலிப்படைகளின் கொட்டத்தை அடக்குவதற்கு, எமது மண்ணின் புத்திஜீவிகளும் பெரும் தகைகளும் அரசியல் விற்பன்னர்களும் வெளியிறங்கி அநியாயக்காரர்களின் கைகளில் அகப்பட்டிருக்கும் அங்குசங்களைக் கைப்பற்ற வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்