இளகிய இரும்பும், அரசியல் கொல்லர்களும்

🕔 December 18, 2018

– முகம்மது தம்பி மரைக்கார் –

ரசியலரங்கில் ஏற்பட்ட கொதிநிலை கொஞ்சம் அடங்கியிருக்கிறது. ஆனால், அந்தக் கொதிப்பு – இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. ரணில் விக்ரமசிங்கவுக்கு மீண்டும் பிரதமர் பதவியை ஜனாதிபதி வழங்கி இருப்பதன் அர்த்தம்ளூ ரணிலை அவர் ஏற்றுக் கொண்டார் என்பதல்ல. கண்ணைப் பொத்திக் கொண்டு, கசக்கும் ‘பானம்’ ஒன்றினை ஜனாதிபதி அருந்தியிருக்கின்றார். ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கிவிட்டு, அவரையும் ஐக்கிய தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் முன்னால் வைத்துக் கொண்டு ஜனாதிபதி ஆற்றிய உரையில்; “மத்திய வங்கியை நீங்கள்தான் கொள்ளையடித்தீர்கள்” என்று கூறியிருப்பது, இரண்டாம் கட்ட ஆட்டத்துக்கான ஆரம்பமாகவே தெரிகிறது.

ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த திடீர் தீர்மானங்களுக்கு எதிராக போராடியவர்கள், ஜனநாயகத்துக்கு வெற்றி கிடைத்திருப்பதாக தற்போது கூறுகின்றனர். ஜனநாயகம் வெற்றிபெறுவதென்பது மகிழ்சிக்குரிய விடயம்தான். ஆனால், ஜனநாயகத்தின் பெயரால் நமக்கு விருப்பமற்ற நியாயங்களைப் பலியிட்டு விடக் கூடாது என்பதையும் இங்கு பதிவு செய்தல் அவசியமாகும். நம்மில் கணிசமானோர், நமக்கு லாபமான தருணங்களில் மட்டுமே நீதிக்காகவும், ஜனநாயகத்துக்காகவும் போராடத் தயாராக இருக்கின்றோம் என்பது கசப்பான உண்மையாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானங்களுக்கு எதிராக, ஜனநாயகத்தை முன்வைத்துப் போராடியவர்களில் கணிசமானோருடைய அரசியல் நலன்களே இங்கு வெற்றி பெற்றிருக்கின்றன.

கடந்த ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானங்களில் மிகவும் பிழையான தீரமானம்; மஹிந்த ராஜபக்ஷவை பிரதம மந்திரியாக்கியமையாகும். ரணிலை பதவி நீக்கி விட்டு, மென்போக்கான ஒருவரை சுதந்திரக் கட்சியிலிருந்து பிரதமர் பதவிக்கு ஜனாதிபதி நியமித்திருப்பாராயின் இந்தக் ‘கதை’யின் முடிவு வேறு மாதிரியாகவும் சிலவேளை அமைந்திருக்கக் கூடும். மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்த இடத்தில்தான் மைத்திரி சறுகிப் போனார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமர் பதவியைப் பெற்றுக் கொள்வதற்கு, சிறுபான்மை கட்சிகள்தான் பேருதவியாக இருந்துள்ளன. இந்த அரசியல் கலவரத்தில் ரணில் விக்ரமசிங்கவை தமிழ் – முஸ்லிம் கட்சித் தலைவர்கள்தான் காப்பாற்றியிருக்கின்றனர். மஹிந்த ராஜபக்ஷ – பிரதமர் பதவியில் அமர்த்தப்பட்டமையை தமிழ் – முஸ்லிம் கட்சித் தலைவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியாமைதான், ரணிலை நோக்கி அவர்கள் மேலும் நெருங்கக் காரணமாயிற்று.

இன்னொருபுறம் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கியமைதான் மைத்திரி மீது சிறுபான்மை மக்களுக்கும் பாரிய கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதானால்தான், இந்த அரசியல் நெருக்கடியில் – மைத்திரியின் நியாயங்களைக் கேட்பதற்குக் கூட, சிறுபான்மை மக்கள் தயாராக இருக்கவில்லை. அதற்காக ஜனாதிபதி மைத்திரியின் பக்கம் நியாயங்களே இல்லை என்று, கூறி விடவும் முடியாது. பாடசாலையில் மாணவன் ஒருவன் திருட்டுத்தனமாக சிகரட் புகைப்பதை ஆசிரியர் கண்டுவிடுகிறார். ஆசிரியருக்கு கடும் கோபம் வருகிறது. மாணவனை மிகக்கடுமையாகத் தாக்குகிறார். மாணவனுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டு விடுகிறது. இந்த விவகாரத்தைக் கேள்விப்படும் பொதுமக்களில் பெரும்பான்மையானோர் என்ன சொல்வார்கள்? ‘எப்படியிருந்தாலும், அந்த மாணவனை இப்படி அடித்திருக்கக் கூடாது’ என்பார்கள். மாணவன் பாடசாலையில் சிகரட் பிடித்த குற்றம் அங்கு மறைந்து விடும் அல்லது எடுபடாது. ஜனாதிபதி மைத்திரியின் விடயத்திலும் இதுதான் நடந்துள்ளது. மேற்சொன்ன உதாரணத்தில் மைத்திரிதான் ஆசிரியர்.

‘இளகிய இரும்பைக் கண்டால் கொல்லன், ஓங்கி – ஓங்கி அடிப்பான்’ என்று கிராமப்புறங்களில் கூறுவார்கள். ‘இளகிய இரும்பு என்பது நன்றாக சூடாக்கிய, பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்பாகும். அதனை வளைப்பது இலகுவானது. அதனால்தான் அவ்வாறான இரும்பில் கொல்லன் ஓங்கி அடிக்கத் தொடங்குகிறான்.

இதுவரையில் நாம் கண்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனதிபதிகளில் மைத்திரிபால சிறிசேன – ‘இளகிய இரும்பாகவே’ தெரிகின்றார். அதனால்தான் ‘ஜனநாயகம்’ என்கிற சுத்தியலைக் கொண்டு, அவர் மீது நமது அரசியல்வாதிகள் ஓங்கி – ஓங்கி அடிக்கின்றனரோ என்கிற நியாயமான கேள்வி எழுகிறது. ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதிவியை வழங்கி விட்டு, ஜனாதிபதி ஆற்றிய உரையிலும் இதனை அவர் சுட்டிக்காட்டிப் பேசியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“கடாபியைப் போல என்னையும் இழுத்துச் சென்று கொலை செய்ய வேண்டும் என, அண்மையில் சிலர் கூறியிருந்தனர். ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் காலம் முதல், அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த எந்தவொரு ஜனாதிபதிக்கும் இவ்வாறான சொற்பிரயோகங்களை எவரும் கூறியதில்லை. அப்படி சொல்லியிருந்தால் முகங்கொடுக்க நேரும் துர்ப்பாக்கிய சம்பவங்களை அவர்கள் நன்கு அறிவார்கள்” என்று ஜனாதிபதி மைத்திரி தனதுரையில் கூறியிருந்தார். அந்த உரைக்கு அர்த்தம்ளூ நாம் மேலே கூறியதுதான். ‘நான் இளகிய இரும்பு என்பதால்தான், என்மீது ஓங்கியடிக்கிறீர்கள்’ என்பதைத்தான் மைத்திரி அப்படி சொல்லியிருந்தார். அதில் உண்மை இல்லாமலுமில்லை.

மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் நடந்த ஒரு விடயத்தை இங்கு உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம். அப்போது பிரதம நீதியரசராக இருந்த ஷிரானி பண்டாரநாக்கவுக்கு எதிராக, மஹிந்த தரப்பினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை நினைவிருக்கின்றதா? திவிநெகும சட்டத்தைக் கொண்டுவருவதற்கு மஹிந்த ராஜபக்ஷ முயற்சித்தார். ஆனால், அவ்வாறானதொரு சட்டம், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தைப் பலவீனப்படுத்தி விடும் என்று, அப்போதைய பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க தீர்ப்பளித்தார். அதற்காக பிரதம நீதியரசர் ஷிரானிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்றி, அவரை அந்தப் பதவியிருந்து அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தூக்கி எறிந்தார். அது – வரலாற்றில் கறைபடிந்த சம்பவமாகும்.

‘பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நியாயத்துக்கும், சட்டத்துக்கும் முரணானது’ என்று, அப்போது உச்ச நீதிமன்றம் கூறியது. ஆனால், அதனை அப்போதைய ஆட்சியாளர் மஹிந்த கணக்கில் எடுக்கவில்லை.

இதில் பேராச்சரியம் என்னவென்றால், இப்போது ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாநாயகத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக கடுமையாகப் போராடி வருகின்ற, முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம்தான், அப்போதைய பிரதம நீதியரசர் ஷிரானிக்கு, அவ்வாறாதொரு அநீதி இழைக்கப்பட்ட போது நீதியமைச்சராகப் பதவி வகித்தார். ஷிரானிக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் இட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீதி, நியாயம், ஜனநாயகம் என்பதெல்லாம் அப்போது ஷிரானி பண்டாரநாயக்கவுக்கு மறுக்கப்பட்டது. ஆனால், அதற்கு எதிராக மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் – ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஷிரானிக்கு இழைக்கப்பட்ட அநீதியின் பக்கமாகவே ஹக்கீம் சாய்ந்திருந்தார்.

அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்திருந்தால், முகங்கொடுக்க நேரும் ‘துர்ப்பாக்கிய சம்பவங்கள்’ குறித்து ஹக்கீம் அறிந்திருந்தார். அதனால்தான், அப்போதைய பிரதம நீதியரசர் ஷிரானிக்கு மறுக்கப்பட்டிருந்த ஜனநாயகத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக, ஹக்கீம் போராடத் துணியவில்லை.

பலவீனமானவர்களிடம்தான் நம்மில் அதிகமானோர் நமது பலத்தைக் காண்பித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதுதான் உண்மையாகும். அதைத்தான் ஜனாதிபதி மைத்திரியும்; “கடாபியைப் போல என்னையும் இழுத்துச் சென்று கொலை செய்ய வேண்டும் என்று, எனக்கு கூறியதை, முன்பிருந்த ஜனாதிபதிகளுக்கு கூறியிருந்தால், துர்ப்பாக்கிய சம்பவங்கள்தான் நேர்ந்திருக்கும்” என்று கூறியிருந்தார். அப்படியென்றால், ஜனாதிபதி ஒரு ‘இளகிய இரும்பு’ என்று தெரிந்ததால்தான், அதன் மீது ‘ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் போராளிகள்’ இந்தளவு தாறுமாறாக அடிக்கின்றனரா என்கிற கேள்விகளும் எழாமலில்லை.

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாகப் போராடிய சிறுபான்மைக் கட்சித் தலைவர்கள், தம்மை நியாயப்படுத்துவதற்காகக் கையில் எடுத்த கோஷத்தை இங்கு நினைவுபடுத்துதல் பொருத்தமாகும். ‘நாங்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாளப் போராடவில்லை. மறுக்கப்பட்ட ஜனநாயகத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே போராடுகிறோம்’ என்று, ரஊப் ஹக்கீம், றிசாட் பதியுதீன், மனோ கணேசன் மற்றும் ரா. சம்பந்தன் உள்ளிடோர் கூறினார்கள். அப்படியென்றால், மத்திய வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீளப் பெற்றெடுப்பதற்கும் அந்தக் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களுக்குத் தண்டனைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும், இதே வீச்சிலான ஜனநாயகப் போராட்டம் ஒன்றினை, இந்தச் சிறுபான்மைத் தலைவர்கள் மேற்கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

ரணில் விக்ரமசிங்க மீது ஜனாதிபதி மைத்திரி இந்தளவு கோபம் கொள்வதற்கும், ரணிலுக்கு எதிராக இப்படியொரு நடவடிக்கை மேற்கொள்வதற்கும் கூறப்பட்ட காரணங்களில் மிக முக்கியமானது, மத்திய வங்கிக் கொள்ளையாகும். இந்தக் கொள்ளையினை ரணிலும் அவரின் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களும் இணைந்தே செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மத்திய வங்கிக் கொள்ளைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளை ரணில் விக்ரமசிங்கவே தடுத்து நிறுத்தியதாகவும் ஜனாதிபதி கூறுகின்றார். எனவே, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பிலும், மத்திய வங்கியிலிருந்து கொள்ளையிடப்பட்ட பணத்தை மீளப் பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும், நமது சிறுபான்மைத் தலைவர்கள் போராட முன்வருவார்களா? அதற்காக ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நிற்பார்களா? என்கிற கேள்விகளுக்கு, அவர்கள் பதிலிறுக்க வேண்டியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கொள்ளைகள், கொலைகள் மற்றும் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, ஆட்சிபீடம் ஏறிய நல்லாட்சியாளர்கள், இதுவரை மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஒரு துரும்பைக் கூடத் தூக்கி வைக்கவில்லை என்பதையும் மக்கள் நினைவில் வைத்துக் கொள்தல் வேண்டும். மஹிந்த ராஜபக்ஷவுடன் ரணில் விக்ரமசிங்க நல்லுறவொன்றினைப் பேணி வந்ததாகவும், மஹிந்தவின் குடும்பத்தினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகளிலிருந்து ரணில் விக்ரமசிங்கவே அவர்களைக் காப்பாற்றி வந்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமையும் நினைவுகொள்ளத்தக்கது.

இன்னொருபுறம், மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக, ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வெற்றிபெற வைத்த மைத்திரியே, மஹிந்த ராஜபக்ஷவை அழைத்து பிரதமர் பதவி கொடுத்தமையானது பெரும் துரோகமாகவும் பார்க்கப்படுகிறது.

அப்படியானால் ரணிலும் மைத்திரியும் ‘நல்லாட்சி’ என்கிற பெயரில், மக்களை ஏமாற்றியுள்ளார்கள் என்கிற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. கிட்டத்தட்ட நல்லாட்சி அரசாங்கம் அமையப்பெற்று நான்கு வருடங்களாகின்றன. ஆனால், சின்னச் சின்ன விடயங்களில் கூட, சிறுபான்மை மக்களுக்கு – குறிப்பாக முஸ்லிம்களுக்கு இந்த ஆட்சியில் தீர்வுகள் கிட்டவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.

உதாரணமாக சுனாமியினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கென சஊதி அரேபிய அரசாங்கத்தால் அம்பாறை மாவட்டம் – நுரைச்சோலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டம் இதுவரை பகிர்ந்தளிக்கப்படவில்லை. வசீம் தாஜுத்தீனின் கொலைக் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதாகக் கூறிய நல்லாட்சியாளர்கள், இப்போது அதனை அரசியல் கோஷமாக மட்டும் பயன்படுத்தி வருகின்றனார். அம்பாறை மாவட்டம் ஆலிம் நகரில் ராணுவம் பிடித்து வைத்திருக்கும் பொதுமக்களின் காணிகளை, அங்கிருந்து ராணுவம் கிட்டத்தட்ட வெளியேறிய பிறகும், மீள வழங்காமல் இந்த ஆட்சியாளர்கள் இழுத்தடித்து வருகின்றார்கள்.

ஆனால், முஸ்லிம்களுக்கு இவற்றினையெல்லாம் பெற்றுக் கொடுப்பதற்காக, முஸ்லிம் அரசியல் தலைவர்கள், ரணிலுக்கு மறுக்கப்பட்ட ஜனநாயகத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக போராடியதில், நூறில் ஒரு பங்களவாவது போராடவில்iலை என்பது வெட்கமாகும்.

இப்போதும் ரணிலுக்கு பிரதமர் பதவியைப் பெற்றுக் கொடுப்பதற்காக, முஸ்லிம் தலைவர்கள் போராடிக் களைத்திருக்கிறார்கள். இதற்காக முஸ்லிம் சமூகத்துக்கு ரணில் என்ன கைமாறு செய்யப் போகிறார் என்கிற கேள்வியும் உள்ளது.

வழமைபோல், முஸ்லிம் தலைவர்கள் இம்முறையும் ரணிலிடமிருந்து தமக்கும் தங்கள் கட்சிக்கும் அதிகபட்ச அமைச்சுக்களைப் பெற்றுக்கொள்வதில்தான் திருப்தியடைவார்களாயின் அது – வேட்டியைக் கழற்றி, தலைப்பாகை கட்டிக்கொண்ட கதையாகவே அமையும்.

இம்முறையாவது, அப்படி நடக்காமலிருக்க வேண்டும் என்று பிரார்த்திப்பதைத் தவிர வேறென்ன இருக்கிறது நம் கையில்?

நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை (18 டிசம்பர் 2018)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்