பொதுத் தேர்தலின்றி, பிரதமர் பதவியை வகிப்பது, என் எதிர்பார்ப்பல்ல: ராஜிநாமாவை அடுத்து, மஹிந்த தெரிவிப்பு

🕔 December 15, 2018

பொதுத்தேர்தல் இன்றி பிரதமர் பதவியை வகிப்பது தமது எதிர்பார்ப்பு இல்லை. அதனால் தீர்மானங்களை எடுக்கும்போது ஜனாதிபதிக்கு இடையூறு ஏற்படாதிருக்க பதவியிலிருந்து விலகி, புதிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதிக்கு இடமளிப்பதாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தில் கையெழுத்திட்ட பின்னர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் மகிந்த ராஜபக்ஷ இதனைக் கூறினார்.

இலங்கையில் பிரதமராக மகிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி 50 நாட்கள் வரை தொடர்ந்தது. இந்த நிலையில் மகிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

“ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினருடன் ஒன்றிணைந்து தேர்தலில் 54 வீதமான பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதற்கான அரசியல் சூழல் உருவாகியுள்ளது.

வடக்கு, கிழக்கு, மலையகத்தின் வாக்கு வங்கியுள்ள கட்சிகளுடன் இணைந்து நாட்டிற்கு எதிரான சக்திகளை தடுப்பதற்காக, எவராலும் அசைக்க முடியாத நாடளாவிய அரசியல் கூட்டணியை கட்டியெழுப்புவோம்” என்று தனது உரையில் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

”ஒரு வருடமும் மூன்று மாதங்களும் தாமதமாகியுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே தமது முதன்மை இலக்கு” என்றும் இதன்போது மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி எடுத்த தீர்மானத்திற்கு தான் மதிப்பளிப்பதாகவும் அவர் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்